மாயமான வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளர் விவகாரத்தில் திருப்பம்.. கொலை செய்ததை ஒப்புக்கொண்டது சவுதி

ரியாத்: சவுதி அரேபியா மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்த அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59) கொடுமைக்குள்ளாக்கி கொல்லப்பட்டுள்ள தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல புலனாய்வு பத்திரிகையாளர், ஜமால் கசோக்கி. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் கைக்கு ஆட்சி சென்ற பிறகு, சவுதி அரசு தொடர்பாக கடும் விமர்சன கட்டுரைகளை எழுதி வந்தார்.

இதனால், சவுதியில் அவருக்கு மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. எனவே கடந்த வருடம் அமெரிக்காவில் குடியேறினார் ஜமால். அங்குள்ள பிரபல பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் இணைந்தார். அதிலும், சவுதி அரசை விமர்சித்து எழுதத் தொடங்கினார்.

சவுதி தூதரகம்

ஆனால், அப்போதுதான் ஜமாலின் விதி விளையாடியது. ஏற்கனவே விவாகரத்து பெற்றவரான, ஜமாலுக்கு, துருக்கியைச் சேர்ந்த ஹெயிஸ் செங்குஸ் என்ற பெண்ணிடம் காதல் ஏற்பட்டது. இதையடுத்து துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில், விவாகரத்து தொடர்பான சான்றிதழ்களை பெற, கடந்த செப்டம்பர் 28ம் தேதி துருக்கி தலைநகர், இஸ்தான்புல் நகரிலுள்ள உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றார். ஆனால், அன்று அவருக்கு சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த 2ம் தேதி மீண்டும் சவுதி தூதரகத்துக்கு ஜமால் சென்றார். அவருடன் காதலி ஹெயிஸும் சென்றிருந்தார். ஆனால் அதன்பிறகு, தூதரத்தில் இருந்து ஜமால் இதுவரை வெளியே வரவேயில்லை.

பத்திரிகை செய்திகள்

ஜமால் சவுதி அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக யூகங்கள் கிளம்பின. துருக்கியுள்ள பத்திரிகைகள் புலனாய்வு செய்து, ஜமால், சவுதி தூதரகத்தில் வைத்து விரல்கள் வெட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, தலையை வெட்டி கொலை செய்யப்பட்டார் என்று செய்தி வெளியிட்டன. உலகமெங்கும் ஊடகத்தினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்க பத்திரிகைகளும் இதுதொடர்பான செய்திகளை வெளியிட்டன. இதையடுத்து அழுத்தத்திற்கு உள்ளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபியா பதிலளிக்க எச்சரிக்கை செய்தார். பதிலுக்கு சவுதி அரேபியா அமெரிக்காவை எச்சரித்தது.

விசாரணை

ஆனால் சர்வதேச நாடுகளின் அழுத்தம் அதிகரித்த நிலையில், ஜமால் கசோக்கி மாயமானது தொடர்பாக மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவிட்டார். சவுதி அரேபிய அதிகாரிகளின் அனுமதி பெற்று, துருக்கி போலீஸ் அதிகாரிகள் இஸ்தான்புல் துணைத் தூதரகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்தில் ஜமால் கசோக்கி கொலை செய்யப்பட்டது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 மூத்த அதிகாரிகள் ஜமாலை சுட்டுக் கொன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜமால் கசோக்கி கொல்லப்பட்டதற்கு சவுதி அரேபியா அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

சவுதியின் படுகொலை

5 அதிகாரிகளை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், 18 அதிகாரிகளை கைது செய்துள்ளதாகவும் சவுதி அரசு அறிவித்துள்ளது. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில், இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர் சவுத் அல் குஹ்தானி, உளவுத்துறை துணைத் தலைவர் மேஜர் ஜெனரல் அகமது அல்-அஸ்சிரி ஆகியோரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், பத்திரிகையாளர் கொலையை முதல் முறையாக சவுதி ஒப்புக்கொண்டுள்ளது. துருக்கி ஊடகங்களின் புலனாய்வு மற்றும் அதிகாரிகள் விசாரணையின்படி, ஜமால் தூதரகம் சென்ற தினத்தில், சவுதியிலிருந்து 15 பேர் வெவ்வேறு தனியார் ஜெட் விமானங்களில் துருக்கிக்கு வந்துள்ளனர். அன்றே அவர்கள் சவுதி திரும்பியுள்ளனர். எனவே இது நன்கு திட்டமிட்டு ஆளையனுப்பி செய்யப்பட்ட படுகொலை என்பது ஊர்ஜிதமாகிறது. ஆனால் சவுதி அரசோ, தூதரகத்தில் ஏற்பட்ட தகாராறின்போதுதான் ஜமால் கொலை செய்யப்பட்டதாக கூறியுள்ளது.

tamil.oneindia.com