ரஷ்யா உடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிசெய்துள்ளார்.
1987இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தான நடுத்தர தூர அணு ஆயுதங்கள் உடன்படிக்கையின் (Intermediate-Range Nuclear Forces treaty) சரத்துகளை ரஷ்யா மீறியுள்ளது என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி நிலத்தில் இருந்து ஏவப்படும், 500 முதல் 5,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அணு ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக் கூடாது.
“இந்த உடன்படிக்கையை மீறி ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதை அமெரிக்கா அனுமதிக்காது. அமெரிக்காவும் அத்தகைய செயலில் ஈடுபடாது, ” என டிரம்ப் கூறியுள்ளார்.
- ‘டிரம்ப் எச்சரிக்கை’: அமெரிக்கர்களுக்கு வந்த அவசர செய்தி
- இந்தியா – ரஷ்யா நட்புறவு கடந்த காலமாகிவிட்டதா?
நேட்டோ நாடுகளால் SSC-8 என்று அழைக்கப்படும் நோவேட்டர்-9M729 எனும் நடுத்தர ரக அணு ஆயுத ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
இந்த ஏவுகணை மூலம் தங்களுக்கு அருகில் இருக்கும் நேட்டோ நாடுகளை ரஷ்யாவால் தாக்க இயலும்.
“அவர்கள் இதை பல ஆண்டுகளாக மீறி வருகிறார்கள். பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது ஏன் இந்த ஒப்பந்தத்தில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தவோ வெளியேறவோ இல்லை என்று தெரியவில்லை, ” என பிரசார கூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசியுள்ளார்.
2014இல் ஒரு அணு ஆயுத ஏவுகணையை, ரஷ்யா சோதனை செய்தபின் அந்த உடன்படிக்கையை ரஷ்யா மீறியுள்ளது என அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம்சாட்டினார்.
அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால் மீண்டும் ஓர் ஆயுதப்போட்டி உருவெடுக்கும் என்று ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தால் அப்போது ஒபாமா உண்டபடிக்கையில் இருந்து வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.
“அமெரிக்காவின் நடவடிக்கை, ஒரு உலக வல்லரசு நாடு மட்டுமே இருக்கும் ஒற்றை-துருவ இலக்கை உருவாக்கும் முயற்சி,” என்று ரஷ்ய வெளியுறவுத் துறையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி முகமையான ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி வெளியிட்டுள்ளது.
- இந்தியாவுக்கு ஏவுகணை விற்க ரஷ்யா ஒப்பந்தம்: அமெரிக்க உறவை பாதிக்குமா?
- செளதி அரேபியா – அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
இந்த ஏவுகணை குறித்து எதுவும் பேசாத ரஷ்யா, இதைத் தாயாரிப்பது அமெரிக்கா உடனான உடன்படிக்கையை மீறும் செயல் இல்லை என்று மட்டும் கூறியுள்ளது .
பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ராணுவ இருப்பைக் கட்டுப்படுத்தவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளியன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்க்கோவில் இந்த வார இறுதியில் நடக்க இருக்கும் சந்திப்பின்போது, அமெரிக்காவின் இந்த முடிவை ரஷ்ய அதிகாரிகளிடம் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவிப்பார் என்று கருதப்படுகிறது.
இந்த உடன்படிக்கையும் பின்னணியும்
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே 1987இல் கையெழுத்தான இந்த உடன்படிக்கை நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது. கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இது கட்டுப்படுத்தாது.
SS-20 ரக ஏவுகணைகளை ஐரோப்பிய பிராந்தியத்தில் சோவியத் ஒன்றியம் நிலை நிறுத்தியது அமெரிக்காவை அப்போது கவலை கொள்ளச் செய்தது.
இந்த உடன்படிக்கையின்படி 1991இல் 2,700 அணு ஆயுத ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க பரஸ்பரம் அனுமதித்தனர்.
இந்த உடன்படிக்கை ரஷ்ய நலன்களுக்கு பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2007இல் கூறியிருந்தார்.
2002இல் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. -BBC_Tamil