தைவானில் ரயில் விபத்து: 22 பேர் பலி

தைவானின் யிலன் கவுண்டியில், பயணிகள் ரயில் ஒன்று தடம் புரண்டதில் குறைந்தது 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 148 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து எடுத்த புகைப்படத்தில் பல ரயில் பெட்டிகள் ஒரு பக்கமாக சாய்ந்து கிடப்பதை பார்க்க முடிகிறது.

உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் டஜன் கணக்கானோர் ரயிலுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என தைவானின் செய்தி முகமை ஒன்று தெரிவிக்கிறது.

தடம் புரண்ட ரயில் ஆறு வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது என்றும், அது நல்ல நிலையிலே இருந்தது என்றும் தைவானின் ரயில்வே நிர்வாகத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணங்கள் தெரியவில்லை இருப்பினும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பெரும் சத்தத்தை கேட்டதாகவும், பின் தீப்பொறியையும், புகையையும் கண்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

விபத்து நேர்ந்த ரயிலில் 310 பேர் பயணம் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவசரகால மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர், காயமடைந்தவர்களுக்கு உதவி வருகின்றனர்.

கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இந்த ரயில் தடமானது தைவானிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமானது.

ரயிலில் வெளிநாட்டினர் யாரேனும் பயணம் செய்தனரா என்று சோதனை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-BBC_Tamil