அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என்ற அந்நாட்டு அதிபர் டிரம்பின் நிலைப்பாடு, அணு ஆயுத ஒழிப்பு என்ற குறிக்கோளுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பசேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
‘நடுத்தர தொலைவு அணு ஆயுத உடன்படிக்கையில் (Intermediate-Range Nuclear Forces treaty) 1987இல் அமெரிக்கா அதிபர் ரீகனுடன் இணைந்து கையெழுத்திட்டவர் சோவியத் ஒன்றியத்தின் அன்றைய அதிபர் மிகயீல் கோர்பச்சேவ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
“இந்த உடன்படிக்கையை பல ஆண்டுகளாக ரஷ்யா மீறி வந்துள்ளது” என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ரஷ்யா, உடன்படிக்கையில் இருந்து விலகினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யாவுக்கு வருகை தரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனிடம் இந்த அறிவிப்புத் தொடர்பாக விளக்கம் கோரப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியிருப்பதாக க்ரெம்ளின் மாளிகை தகவல்கள் கூறுகின்றன.
முதன் முதலில் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்று ஜெர்மனி. இந்த நடவடிக்கையால் ஐரோப்பா மற்றும் எதிர்கால ஆயுத ஒழிப்பு முயற்சிகளில் ஏற்படப்போகும் பின் விளைவுகளை அமெரிக்கா கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே 1987இல் கையெழுத்தான இந்த உடன்படிக்கை நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளை (500 முதல் 5,500 கி.மீ) இரு நாடுகளும் பயன்படுத்த தடை விதிக்கிறது. கடலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை இந்த உடன்படிக்கை கட்டுப்படுத்தாது.
பனிப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், 1945 முதல் 1989 வரை அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே நிலவிய பதற்றமான உறவுகளை சீரடையச் செய்து, அணுசக்தி மோதல் ஏற்படலாம் என்ற அச்சுறுத்தலையும் முடிவுக்கு கொண்டுவந்தது.
கடந்த ஐந்து தசாப்தங்களில், அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் அணு ஆயுதங்களை கணிசமான அளவில் குறைப்பதற்கான பல கூட்டு உடன்படிக்கைகளை மேற்கொண்டன.
மிகயீல் கோர்பசேவ் யார்?
- சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபர்.
- 1985ஆம் ஆண்டு பதவியேற்ற கோர்பசேவ் மேற்கொண்ட உள்நாட்டு சீர்திருத்தங்கள் மற்றும் அணு ஆயுத ஒழிப்பு உடன்படிக்கைகள் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.
- சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு 1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றிய அதிபர் பதவியை இவர் ராஜினாமா செய்தார்.
உண்மையில் டிரம்ப் சொன்னது என்ன?
“நாங்கள் தயாரிக்க அனுமதி இல்லாத ஆயுதங்களை அவர்கள் தயாரிப்பதை அனுமதிக்க முடியாது” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவை குறிப்பிட்டுக் கூறினார்.
“அவர்கள் இதை பல ஆண்டுகளாக மீறி வருகிறார்கள். பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது ஏன் இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பதும் ஒப்பந்தத்தில் இருந்து ஏன் வெளியேறவில்லை என்றும் தெரியவில்லை” என நவேடாவில் நடைபெற்ற பிரசார கூட்டம் ஒன்றில் டிரம்ப் தெரிவித்தார்.
2014இல் ஓர் அணு ஆயுத ஏவுகணையை, ரஷ்யா சோதனை செய்த பின், ஐ.என்.எஃப் உடன்படிக்கையை ரஷ்யா மீறியிருப்பதாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம்சாட்டினார்.
ரஷ்யாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறினால், உலகில் மீண்டும் ஆயுதப்போட்டி உருவெடுக்கும் என்றா காரணத்தை சுட்டிக்காட்டி ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தால் அந்த சமயத்தில் ஒபாமா உடன்படிக்கையில் இருந்து வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவின் எதிர்வினை என்ன?
“இது மிகவும் ஆபத்தான ஒரு நடவடிக்கை. இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழும் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்” என ரஷ்ய வெளியுறவுத் துறை துணையமைச்சர் செர்கெய் ரையப்கோவ் தெரிவித்துள்ளார்.
- புவியின் எதிர்காலம் உங்கள் கையில் – இதனை செய்வீர்களா?
- விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் – என்ன நடக்கிறது?
இந்த உடன்படிக்கையானது சர்வதேச பாதுகாப்பில் அந்த ஒப்பந்தம் முக்கியமான ஒன்று என்றும், அணு ஆயுத பாதுகாப்பு மற்றும் தந்திரோபாய நிலைத்தன்மையை பராமரிப்பதற்கும் முக்கியமானது” என்று ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் டாஸ்க்கு அளித்த பேட்டியில் செர்கெய் ரையப்கோவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்து “குழப்பம் விளைவிக்கும் வகையிலும், முரட்டுத்தனமாகவும்” நடந்து சர்வதேச உடன்படிக்கைகளில் இருந்து விலகினால், “ராணுவ தொழில்நுட்பம் உள்ளிட்ட பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை” என்று அரசு செய்தி நிறுவனம் ஆர்.ஐ.ஏ நோவோஸ்டிக்கு அளித்த பேட்டியில் ரஷ்ய வெளியுறவுத் துறை துணையமைச்சர் செர்கெய் ரையப்கோவ் கூறியுள்ளார்.
“ஆனால் அந்த அளவுக்கு செல்ல நாங்கள் விரும்பவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.
‘குறிப்பிடத்தக்க பின்னடைவு’
பிபிசியின் பாதுகாப்பு மற்றும் தூதரக விவகாரங்களுக்கான நிருபர் ஜோனதன் மார்கஸின் பகுப்பாய்வு
ஏவுகணை அமைப்பை மேம்படுத்துவது மற்றும் பயன்படுத்தும் ரஷ்யாவின் நடவடிக்கைகள் ஐ.என்.எஃப் ஒப்பந்தத்தை மீறுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. ஆனால் ரஷ்யாவுடனான ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் அமெரிக்க அதிபரின் முடிவு ஆயுதக் கட்டுப்பாடு என்ற விஷயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவே.
ரஷ்யா ஒப்பந்த்த்தை முறையாக தொடர வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதே இணக்கமான முயற்சியாக இருக்கும் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர். பனிப்போரின் போது ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்த உதவிய முயற்சிகளின் முக்கியமான ஒப்பந்தமான இதிலிருந்து விலகுவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
அதிபர் டிரம்ப்பின் முடிவுக்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஐ.என்.எஃப் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தம் ஆகும். ஆனால், நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளை சீனா தயாரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சீனாவுடன் அமெரிக்காவுக்கு அதிகரித்தும் வரும் மோதல் போக்கில், தங்கள் அணு ஆயுத பலத்தை வளர்த்துக் கொள்வதற்கு ரஷ்யாவுடனான ஐ.என்.எஃப் ஒப்பந்தம் தடையாக இருப்பதாக டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள பலர் கருதுகின்றனர்.
ரஷ்யா ஒப்பந்தத்தை மீறியதா?
எஸ்எஸ்சி-8 என்று நேட்டோவால் அறியப்படும், நோவோட்டர் 9M729 என்ற புதிய நடுத்தர தொலைவு ஏவுகணையை ரஷ்யா உருவாக்கியதை சுட்டிக்காட்டும் அமெரிக்கா, இது ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறிய செயல் என்று கூறியது.
இந்த ஏவுகணை மூலம் தங்களுக்கு அருகில் இருக்கும் நேட்டோ நாடுகளை ரஷ்யாவால் தாக்க இயலும்.
இந்த ஏவுகணை குறித்து எதுவும் பேசாத ரஷ்யா, இதைத் தயாரிப்பது அமெரிக்கா உடனான உடன்படிக்கையை மீறும் செயல் இல்லை என்று மட்டும் கூறியுள்ளது .
- வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா? உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்
- 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உலகின் பழமையான மீன்
பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ராணுவ இருப்பைக் கட்டுப்படுத்தவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக வெள்ளியன்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
2002இல் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.
அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், ஐரோப்பாவில் ஒரு ஏவுகணை கவச அமைப்பை அமைப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகள் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்தது. பிறகு, அது 2009இல் ஒபாமா நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டது. பிறகு அது, 2016ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பால் மாற்றப்பட்டது.
நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை என்றால் என்ன?
- 1987இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தானது. இதன்படி, நிலத்தில் இருந்து ஏவப்படும், 500 முதல் 5,500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்த அணு ஆயுத ஏவுகணைகளை இரு நாடுகளும் பயன்படுத்தக் கூடாது.
- எஸ்.எஸ்-20 ஏவுகணைத் திட்டத்தை சோவியத் ஒன்றியம் பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு கவலையளித்தது. எனவே ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ஐரோப்பாவில் பெர்ஷிங் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை நிறுவியது பரவலான எதிர்ப்புகளை ஏற்படுத்தியது.
- இந்த உடன்படிக்கையின்படி 1991இல் 2,700 அணு ஆயுத ஏவுகணைகள் அழிக்கப்பட்டன. இரு நாடுகளும் எதிர்த்தரப்பின் ஆயுதங்களை சோதிக்க பரஸ்பரம் அனுமதி கொடுக்கப்பட்டது.
- இந்த உடன்படிக்கை ரஷ்ய நலன்களுக்கு பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2007இல் கூறியிருந்தார். 2002-ல் கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் இவ்வாறு கூறியிருந்தார். -BBC_Tamil