நேற்று பினாங்கில் அமைதியாகக் கூடுதல் மசோதவை எதிர்க்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது.போலீசார் தலையீடின்றி அது அமைதியாக நடந்து முடிந்தது.
மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மனித உரிமைக் குழுவான சுவாராம் ஏற்பாடு செய்த அந்நிகழ்வு பினாங்கின் புகழ்பெற்ற பேச்சாளர் மூலையில் நடைபெற்றது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், முனிசிபல் கவுன்சிலர்கள் (எம்பிபிபி), சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட நூற்றுக்கு மேற்பட்டோர் அதற்குத் திரண்டு வந்திருந்தனர்.
அது, அமைதியாகக் கூடுதல் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற இரண்டாவது கண்டனக் கூட்டமாகும். அதற்குமுன் சனிக்கிழமை, கோலாலம்பூர் மாநகர் மையத்தில் சுமார் 400 பேர் ஒன்றுதிரண்டு அம்மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அது “அரசமைப்புக்குப்புறம்பான மசோதா” என்று அறிவித்தனர்.
பினாங்கு நிகழ்வில் கலந்துகொண்டோரில் டிஏபியின் தஞ்சோங் பிரதிநிதி செள கோன் இயோ, கொம்டார் பிரதிநிதி இங் வை ஏய்க், கெபுன் பூங்கா ஜேசன் ஒங், எம்பிபிபி கவுன்சிலர்கள் லிம் மா ஹூய், லிம் லியான், கியோக் அறவாரியத் தலைவர் தோ கின் வூன் ஆகியோரும் அடங்குவர்.
அக்கூட்டத்தில், கூட்டத்தினர் கைமுட்டியை மடக்கிக் காற்றில் குத்துவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை உயர்த்திப் பிடித்தவாறு ‘ஹிடுப் ரக்யாட்’ என்று முழக்கமிட்டனர். அம்மசோதா, அமைதியாக ஒன்றுகூடுவதற்குள்ள உரிமையை எதிர்ப்பதாக அவர்கள் கூறினர்.
அந்நிகழ்வு நடப்பதற்குமுன் போலீஸ் ஊர்திகள் எஸ்பிலேனட் திடலைச் சுற்றிச் சுற்றி வந்தன. ஆனாலும், கூட்டம் நடந்த இடத்தில் போலீஸ் சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த சிலர் மட்டுமே இருந்தனர். அவர்களும் கூட்டத்தை இடைமறிக்கவில்லை.
முன்னாள் கெராக்கான் ஆட்சிமன்றக் குழு உறுப்பினரான தோ, அம்மசோதா சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கு உத்தரவாதம் அளிப்பதுபோல் காணப்பட்டாலும் உண்மையில் முன்பைவிட அது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாகக் குறைகூறினார்.
“செப்டம்பர் 15-இல் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியாவை ஜனநாயக உரிமைகள் நிரம்பிய நாடாக்கப் போவதாக உறுதி கூறினார். ஆனால், இம்மசோதா அவர் பொய் சொன்னார் என்பதை நிரூபிக்கிறது”, என்றாரவர்.
பாடாங் கோத்தா சட்டமன்ற உறுப்பினர் செள (இடம்), அரசாங்கம் அம்மசோதாவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மற்ற பக்காத்தான் ரக்யாட் தலைவர்களும் மசோதாவில் திருத்தம் செய்வது போதாது, அது மொத்தமாக மீட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தினர்.
அமையாகக் கூடுதல் மசோதாவுக்கு எதிராக பல தரப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதை அடுத்து அதை மறு ஆய்வு திருத்தங்களைச் செய்யுமாறு அமைச்சரவை நடப்பில் சட்ட அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்னொரு நிலவரத்தில், மாநில டிஏபி தலைவருமான செள, ஊராட்சித் தேர்தல்கள் தொடர்பில் மாநில அரசுக்கு ஆலோசனை சொல்லும் பொறுப்பை இப்போது பிரபல வழக்குரைஞர் டாமி தாமஸ் ஏற்றிருப்பதாகக் கூறினார். முன்பு வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் இயோ யாங் போ அதனைச் செய்து வந்தார்.
“தாமஸ், மாநில அரசு ஊராட்சித் தேர்தல்கள் நடத்த சட்டமியற்ற வேண்டும் என்றும் பின்னர் அது அரசமைப்புக்கு எதிரானதா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பை நீதிமன்றங்களிடம் விட்டுவிட வேண்டும் என்றும் முன்மொழிந்திருக்கிறார்”, என்று நேற்று கூட்டத்தாரிடம் கூறினார்.
“தாமசின் பரிந்துரை குறித்து இவ்வாரம் மாநில ஆட்சிக்குழுவுக்கு விளக்கமளிப்பேன்”, என்றாரவர்.
ஊராட்சித் தேர்தல்களை நடத்தலாம் என்று நீதிமன்றங்களே அறிவித்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.