வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் நிருபர்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தை மீறி ரஷியா செயல்பட்டுள்ளது. இதனால் அந்த ஒப்பந்தத்தில் இருந்து நாங்கள் விலகுவோம். அமெரிக்கா தனக்கான அணு ஆயுதங்களைத் தயாரிக்கும். அணு ஆயுதங்களை கொண்டு விளையாட விரும்புகிற சீனா, ரஷியா உள்ளிட்ட எவருக்கும் விடப்படுகிற அச்சுறுத்தலாக இது அமைகிறது” என்று கூறினார்.
நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரொனால்டு ரீகனுடன் கையெழுத்து போட்ட ரஷிய அதிபர் மிக்கேல் கார்பச்சேவ் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர், “நடுத்தர தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் முடிவு, அணு ஆயுதங்களை கை விட வேண்டும் என்ற முடிவில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்” என்று எச்சரித்தார்.
டிரம்பின் முடிவு வருந்தத்தக்கது என்று ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி ஹெய்கோ கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கருத்து தெரிவிக்கையில், “இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது, ரஷியாவை தனது சொந்த பாதுகாப்பை பார்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வைத்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.
-athirvu.in