நியூயார்க்கிலுள்ள பில் கிளிண்டன் மற்றும் ஹிலரி கிளிண்டன் வீட்டில் வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சந்தேகத்திற்குரிய இதுபோன்ற பொருள் ஒன்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியூ யார்க் புறநகரிலுள்ள தாராள நன்கொடையாளரும், பைனான்சியருமான ஜார்ஜ் சோரோஸின் வீட்டிற்கு குண்டு அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்த செய்தி வந்துள்ளது.
பில் கிளிண்டன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர். ஹிலரி கிளிண்டன் 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்.
நியூயார்க் நகரில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் சாப்பாகுவாவில் அமைந்துள்ள கிளிண்டனின் வீட்டில் கடிதங்களை ஸ்கேன் செய்யும்போது தொழில்நுட்பவியலாளர் ஒருவர் இந்த வெடிகுண்டை கண்டுபிடித்தாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்த பொருள் சரியாக எங்கு கண்டறியப்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை.
அமெரிக்க ரகசிய சேவை நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி ஹிலரி முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்த பார்சல் அக்டோபர் 23-ம் தேதி மீட்கப்பட்டது.
அதையடுத்து, இன்று அக்டோபர் 24 காலை முன்னாள் அதிபர் பரக் ஒபாமா முகவரிக்கு அனுப்பப்பட்ட ஒரு பார்சலையும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ரகசிய சேவை அலுவலர்கள் கைப்பற்றினர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி செய்தது சி.என்.என்.
நியூயார்க் மாநகரில் உள்ள தி டைம் வார்னர் கட்டடமும் ஒரு பார்சல் காரணமாக காலி செய்யப்பட்டது. இந்த கட்டடத்தில் இடம் பெற்றிருந்த சி.என்.என். செய்தி நிறுவனம் தமது செய்தி அங்கிருந்து அறையை காலி செய்தது என்று சி.என்.என். நிறுவனத் தலைவர் ஜெஃப் சக்கர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கட்டடத்தின் தபால் அறையில் ஒரு சந்தேக பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், உலகெங்கிலும் உள்ள சி.என்.என். அறைகள் முன்னெச்சரிக்கையாக சோதனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil