ஜப்பானியப் பத்திரிகையாளர் ஜம்பே யசுடாவை 3 ஆண்டுகளுக்கு முன்னர் அல் கொய்தாவின் சிரியா பிரிவு தீவிரவாதிகள் உளவுப் பார்த்தாகக் கூறி கடத்திச் சென்று பிணைக் கைதியாக வைத்திருந்தனர். சுமார் 40 மாதங்கள் சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த யசோடா கடந்த 2 நாட்களுக்கு முன் விடுவிக்கப்பட்டார். அலங்கோலமான நிலையில் நேற்று டோக்கியோ திரும்பிய அவர் தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.
அவர் கூறுகையில், இட்லிப் என்ற இடத்தில்தான் என்னை அடைத்து வைத்திருந்தனர் என்று நினைக்கிறேன். நான் இருந்த இடத்திலிருந்து எந்தச் சத்தமும் வெளியே கேட்கக் கூடாது. நாள் கணக்கில் குளிக்காததால் என் தலையில் நமைச்சல் எடுக்கும். நான் சொறிந்தால் கூட சத்தம் கேட்கும் என்பதால் அது கூட செய்ய முடியாது.
மூக்கு வழியாக மூச்சு விடக் கூடாது. வாய் வழியாகவே மூச்சு விட வேண்டும். கேனில் அடைக்கப்பட்ட உணவு என் முன்னால் வைப்பார்கள். ஆனால், அதை நான் உடைத்துச் சாப்பிடக் கூடாது. எந்தச் சத்தம் கேட்டாலும் தாக்குவார்கள். அதனால் 20 நாள்கள் வரை கூட சாப்பிடாமல் இருந்துள்ளேன்.
இறுதியில் என்னை காரில் ஏற்றிக் கொண்டு வந்து துருக்கி எல்லையில் விட்டுச் சென்றனர் என கூறியுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜம்பே யசுடா 2015- ம் ஆண்டு மாயமானார்.
2016- ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி யசுடா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அவ்வப்போது அவரின் வீடியோக்களைத் தீவிரவாதிகள் வெளியிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-dailythanthi.com