மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி செல்லும் குடியேறிகளில், தஞ்சம் கோரியவர்களுக்கு தற்காலிக பணி அனுமதி வழங்கியுள்ளது மெக்ஸிகோ.
குடியேறிகளுக்காக மெக்ஸிகோ அறிவித்துள்ள இத்திட்டத்தில், தற்காலிக அடையாள அட்டைகள், மருத்துவ பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு கல்வி சேவைகளும் வழங்கப்படும்.
ஆனால் இந்த சேவைகளை பெற குடியேறிகள் மெக்ஸிகோவின் சியாபஸ் மற்றும் வஹாக மாநிலங்களில் தங்க வேண்டும்.
குடியேறிகளை நாட்டிற்குள் நுழையாமல் தடுக்க அமெரிக்க – மெக்சிகோ எல்லையில் 800 படை துருப்புகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்தியிருக்கிறது.
“தேசிய அளவிலான இந்த அவசர நிலைக்கு ராணுவத்தை அழைக்கவுள்ளேன்” என இந்த வார தொடக்கத்தில், டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
- “வாழ்விற்கான பெரும் போராட்டம்!” – மத்திய அமெரிக்காவில் நடப்பது என்ன?
- காணாமல் போன மகன் பெற்றோரை சந்தித்த நாள் – ஒரு நெகிழ்ச்சி கதை
மேலும் குவாட்டமாலா, எல் சல்வேடார் மற்றும் ஹாண்டூரஸிற்கு தனது உதவிகளை நிறுத்தப்போவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த மக்கள் கூட்டம் ஹாண்டூரஸிலுருந்து ஒரு வாரத்திற்கு முன்பாக புறப்பட்டது.
மெக்ஸிகோவின் திட்டம் என்ன?
மெக்ஸிகோவின் அதிபர் பேநியன் நியடோவால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், மெக்ஸிகோவில் தஞ்சம் கோரிய மத்திய அமெரிக்கர்களுக்கும், அல்லது எதிர்காலத்தில் கேட்கவிருப்போருக்குமான அதிகாரபூர்வ திட்டம்.
இந்த திட்டத்தின் பெயர் எஸ்டாஸ் என் டு காஸா
அதாவது ‘இது உங்களின் வீடு’ என்று பொருள்.
“இன்று மெக்ஸிகோ உங்கங்களுக்கான ஆதரவு கரத்தை நீட்டுகிறது” என்று இத்திட்டத்தை அறிவித்த அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த திட்டம் மெக்ஸிகோவின் சட்டத்திட்டங்களை மதிப்பவர்களுக்கு மட்டுமே. மேலும் மெக்ஸிகோவில் தஞ்சம் வழங்கப்பட்டவர்களுக்கான நிரந்தர தீர்வை நோக்கிய முதற்படி இது என்றும் அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி குடியேறிகளுக்கு
- தற்காலிக அடையாள அட்டை, பணி அனுமதி
- மருத்துவ வசதி
- குழந்தைகளுக்கு பள்ளி
- உள்ளூர் விடுதிகளில் தங்கும் வசதி
ஆகியவை வழங்கப்படும். ஆனால் இதை ஏற்க விரும்பாத குடியேறிகளுக்கு என்ன நடக்கும் என அதிபர் தெரிவிக்கவில்லை.
குடியேறிகள் குறித்து நிரந்தர தீர்வு காணுமாறு டிரம்ப் நிர்வாகத்திடமிருந்து மெக்ஸிகோ அதிகாரிகளுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது என பிபிசியின் மத்திய அமெரிக்காவுக்கான செய்தியாளர் வில் கிராண்ட் தெரிவிக்கிறார்.
தற்போது எங்குள்ளனர் ஆயிரக்கணக்கான குடியேறிகள்?
தற்போது குடியேறிகள் அரியாகா என்ற நகரில் உள்ளனர்.
அதில் பல குடியேறிகள் அமெரிக்காவை நோக்கிச் செல்லும் தங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
“இங்குள்ள பலர் எல்லையை கடக்க திட்டமிட்டுள்ளனர். என்னுடைய திட்டமும் அதுதான்” என்று குடியேறிகளில் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“இது நல்லதொரு திட்டம்தான். ஆனால் அமெரிக்காவுக்கு செல்லும் எங்களின் திட்டத்தை நான் பாதியில் கைவிடப்போவதில்லை” என்று குடியேறிகள் மத்தியில் இருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.
குடியேறிகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் கணக்குப்படி அக்டோபர் 22ஆம் தேதிவரை 7000 பேர் இந்த கூட்டத்தில் இருந்ததாக ஐ.நாவுக்கான செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் அதன்பின் கூட்டத்தினர் பிரிந்து சென்றதால் தற்போது எண்ணிக்கையை சரியாக சொல்ல இயலவில்லை.
தங்களது நாடுகளான குவாட்டமாலா, ஹாண்டூரஸ் மற்றும் எல் சல்வேடாரில் வறுமை, வன்முறை மற்றும் பிற துன்பங்களுக்கு அஞ்சி தப்பி வருவதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களால் சட்டப்படி குடியேற முடியுமா?
வியாழக்கிழமையன்று, “குடியேறிகளின் கூட்டத்தில் இருப்பவர்களே திரும்பிச் செல்லுங்கள். அமெரிக்காவில் சட்டவிரோதமாக நாங்கள் யாரையும் அனுமதிப்பதில்லை” என்று டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
ஆனால் குடியேறிகள் பலர் அமெரிக்காவில் தஞ்சம் கோரப்போவதாக தெரிவித்தனர்.
சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு தங்களது நாடுகளில் வன்முறைக்கு பயந்து தப்பி வரும் மக்கள் சட்டப்பூர்வமாக தஞ்சம் கோர முடியும்.
ஆனால் ஜூன் மாதம் அமெரிக்க ஆட்டார்னி ஜெனிரல் ஜெஃப் ஷெஷன்ஸ், “வீடுகளில் வன்முறை அல்லது குழு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக அமெரிக்காவில் தஞ்சம் வழங்குவதில்லை” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் யாரேனும் சட்ட விரோதமாக நுழைந்தால் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பொருளாதார குடியேறிகள் ஒரு தரமான வாழ்க்கைக்காக கடும் வறுமையிலிருந்து தப்பி வருபவர்களாக இருப்பினும், அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். அவர்களுக்கு அகதிகளை போன்ற பாதுகாப்புகளும் வழங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -BBC_Tamil