இஸ்தான்புல் : பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சவுதி மன்னர் சல்மானின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதி வந்தவர் ஜமால் கஷோகி. இவர் அக்.,2 ம் தேதி தனது முதல் மனைவியை விவாதகரத்து செய்ததற்கான ஆவணங்களை பெறுவதற்காக இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா துணை தூதரகத்திற்கு சென்றார். தூதரக அலுவலகத்திற்கு சென்ற ஜமால் மாயமானார்.
இதற்கு சவுதி அரேபிய தூதரக அதிகாரிகளே காரணம் எனவும், அவர்கள் ஜமாலை கொலை செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதவை சவுதி அரசு மறுத்து வந்தது. பின்னர் சர்வதேச நாடுகள் கொடுத்த நெருக்கடியை தொடர்ந்து, ஜமால் கொல்லப்பட்டதை சவுதி அரேபியா ஒப்புக் கொண்டது. தூதரக அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலின் போது அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சவுதி அரேபியாவுடனான ஆயுத ஒப்பந்தத்தை ஜெர்மனி ரத்து செய்தது. ஜமால் கஷோகி மரணத்தில் உள்ள மர்மம் விலகும் வரை சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் விற்க முடியாது என ஜெர்மனி உறுதியாக தெரிவித்துள்ளது. ஒப்பந்தத்தை தொடர சவுதி அரேபியாக அரசு கோரிக்கை விடுத்தும், அதை ஏற்க மறுத்ததுடன், தங்களின் முடிவில் உறுதியாக இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
-dinamalar.com