ஒபாமா, ஹிலாரி, இந்திய பெண் எம்.பி. கமலா உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியவர் சிக்கியது எப்படி? – பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன், அமெரிக்காவில் ஒபாமா, ஹிலாரி, இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்ளிட்டவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியவர், போலீசில் சிக்கியதின் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க நாட்டில் அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக ஜனாதிபதி டிரம்ப், ஆளும் குடியரசு கட்சிக்காகவும் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஜனநாயக கட்சிக்காகவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு டிரம்பை கடுமையாக விமர்சித்து வருகிற ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன், நடிகர் ராபர்ட் டி நீரோ, இந்திய வம்சாவளி பெண் எம்.பி. கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பலருக்கு தபாலில் வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டன.

ஆனால் அந்த பார்சல்கள், உரியவர்களை சென்று அடைவதற்கு முன்பாக ‘சீக்ரட் சர்வீஸ்’ என்னும் அமெரிக்க ரகசிய போலீஸ் படையினர் தடுத்து நிறுத்தி, அவற்றில் இருந்த குழாய் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

இது தொடர்பாக அமெரிக்க மத்திய புலனாய்வு படை எப்.பி.ஐ. அதிகாரிகள் துப்பு துலக்க களத்தில் இறங்கினர்.

அவர்கள் மின்னல் வேகத்தில் துப்பு துலக்கி இந்த பார்சல்களை அனுப்பியவர், 56 வயதான சீசர் சயோக் என கண்டறிந்தனர். இதையடுத்து அவரை நேற்று முன்தினம் புளோரிடா மாகாணம், பிளாண்டேசன் நகரில் கைது செய்தனர். அவர் அங்கு வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை ஒன்றில் இருந்தபோது எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார்.

அவர் சிக்கியது எப்படி என்பது பற்றி எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் வரே கூறும்போது, “வெடிகுண்டு பார்சல்களில் ஒன்றில் அவரது கைரேகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கைரேகையைக் கொண்டுதான் வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பியவர் சீசர் சயோக் என கண்டுபிடித்தோம்” என கூறினார்.

எப்.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், “ குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்வதில் டி.என்.ஏ., (மரபணு பரிசோதனை), செல்போன் அந்தரங்க தகவல்கள் உதவிகரமாக அமைந்தன” என்றனர்.

வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பி அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சீசர் சயோக் கைது செய்யப்பட்டு விட்டதை ஜனாதிபதி டிரம்ப் பாராட்டி உள்ளார். வைக்கோல் போரில் ஊசியை தேடி கண்டுபிடிப்பதுபோல இந்த வழக்கில் குற்றவாளியை எப்.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என அவர் கூறி உள்ளார்.

வெடிகுண்டு பார்சல்களை ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு தபாலில் பார்சலாக அனுப்பிய சீசர் சயோக், புளோரிடா மாகாணத்தில் உள்ள அவென்சுரா நகரில் வசித்து வந்தவர் ஆவார். இவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 2002-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, ஓராண்டு காலம் அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தவர் ஆவார்.

28 வயதில் ஒரு திருட்டு வழக்கிலும் சிக்கி உள்ளார். தாயாருடன் வசித்து வந்த நிலையில், தான் திவால் ஆகி விட்டதாக அறிவிக்க வேண்டும் என்று 2012-ம் ஆண்டு சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தற்போது இவர் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு வேனில் ‘பீட்சா’ எடுத்து சென்று வினியோகம் செய்கிற வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இவர், டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர் ஆவார். 2016, 2017 ஆண்டுகளில் டிரம்ப் பங்கேற்று பேசிய பொதுக்கூட்டங்களில் இவர் கலந்து கொண்டுள்ளார்.

டிரம்பை விமர்சித்து வந்த ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பியதின் பின்னணி என்ன என்பது குறித்து சீசர் சயோக்கிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

-dailythanthi.com