சிரியா போரில் வெற்றியை நெருங்க அசாத்துக்கு ரசாயண ஆயுதங்கள் எப்படி உதவின?

சிரியாவில் 350,000 க்கும் அதிகமாக மக்கள் பலியாக காரணமாக இருந்த ஏழாண்டு கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு, தன்னை பதவியில் இருந்து தூக்கி எறிய முயன்ற சக்திகளுக்கு எதிராக அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கியிருப்பதைப் போலத் தெரிகிறது.

இந்த ரத்தக்களறியான, கொடூரமான போரில் வெற்றிக்கு மிக நெருக்கமாக அசாத் வந்திருப்பது எப்படி?

பிபிசி பனோரமா மற்றும் பிபிசி அரபிக் ஆகியவை இணைந்து நடத்திய புலனாய்வில், போரில் வெல்லும் உத்தியில் ரசாயன ஆயுதங்கள் எந்த அளவுக்கு முக்கிய பங்கு வகித்தன என்பது முதல்முறையாகதெரிய வந்துள்ளது.

1. பரவலாக இருந்த ரசாயண ஆயுதங்களின் பயன்பாடு

சர்வதேச ரசாயண ஆயுதங்கள் உச்சி மாநாட்டில் (CWC), நாட்டில் குவித்து வைக்கப்பட்டுள்ள ரசாயண ஆயுதங்களை அழிப்பதற்கு அதிபர் கையெழுத்திட்டு, ஒப்புக் கொண்ட செப்டம்பர் 2013 முதல் சிரியாவில் குறைந்தது 106 ரசாயண தாக்குதல்கள் நடைபெற்றன என்று நம்புவதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளது என பிபிசி குழு தீர்மானித்துள்ளது.

சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரின் புறநகர் பகுதியில் ஏராளமான ரசாயண ஆயுதத் தாக்குதல்களை நடத்தி, ஒரு மாதம் கழித்து சர்வதேச ரசாயண ஆயுதங்கள் உச்சி மாநாட்டின் தீர்மானத்துக்கு சிரியா ஒப்புதல் அளித்தது. அவற்றில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் சரீன் வாயு இருந்தது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறும் கொடூரமான படங்கள் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அரசாங்கத்தால் மட்டுமே இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியும் என்று மேற்கத்திய நாடுகள் கூறின. ஆனால், அசாத் எதிர்தரப்பினர் மீது குற்றஞ்சாட்டினார்.

சிரியா

இதற்குப் பதிலடியாக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டியது. ஆனால், சிரியாவின் ரசாயண ஆயுதங்களை அழிப்பதற்கு அசாத்தை முக்கிய கூட்டாளியான ரஷ்யா சம்மதிக்க வைத்ததை தொடர்ந்து அமெரிக்கா அதை தளர்த்திக் கொண்டது. சிரியா அரசாங்கம் அறிவிக்கை செய்தபடி, 1,300 டன்கள் அளவிற்கான அனைத்து ரசாயண ஆயுதங்களையும், ரசாயண ஆயுதங்கள் தடுப்புக்கான அமைப்பு (OPCW) அழித்துவிட்டது என்றாலும், அந்த நாட்டில் ரசாயண ஆயுதங்களின் தாக்குதல் தொடர்ந்தது.

ரசாயண ஆயுதங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியவை'' என்கிறார் எதிர்தரப்பினரின் வசமிருந்து 2016ல் அரசின் பிடிக்குள் வந்த அலெப்போ நகரில் வசித்த அபு ஜாபர்.ஒரு பேரல் குண்டு அல்லது ஒரு ராக்கெட் தாக்குதல் நடந்தால் அதை உணர்வதற்குள்ளாகவே, ரசாயணங்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக மக்கள் உயிரிழப்பர். யாரோ ஆக்சிஜனை பறிப்பதால், மூழ்குவதைப் போல, அவர்கள் மெல்ல சாவார்கள். அது கொடூரமானது” என்கிறார் அவர்.

ஆனால் தன்னுடைய ராணுவத்தினர் ஒருபோதும் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியது இல்லை என்று அசாத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

“2013ல் அழித்துவிட்ட பிறகு எங்களிடம் ரசாயண ஆயுதங்களே கிடையாது” என்று இந்த ஆண்டின் முற்பகுதியில் அவர் தெரிவித்தார்.

“ஓபிசிடபுள்யூ அமைப்பு இதுபற்றி புலனாய்வு செய்துவிட்டது. எங்களிடம் அந்த ஆயுதங்கள் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.”

ரசாயண ஆயுதங்கள் என்பவை என்ன?

நச்சுத் தன்மை மூலமாக வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தக் கூடிய அல்லது ஊறு விளைவிக்கக் கூடியது தான் ரசாயண ஆயுதம் என்று ரசாயண ஆயுதங்கள் உச்சிமாநாட்டின் திட்டங்கள் அமல் செய்யப்படுவதை உலக அளவில் கண்காணிக்கும் ஓபிசிடபுள்யூ அமைப்பு கூறியுள்ளது.

ராணுவ இலக்காக இருந்தாலும் கூட, சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி, ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. அதுபோன்ற ஆயுதங்களால் ஏற்படும் பாதிப்புகள் இயல்பாகவே கண்மூடித்தனமானவையாகவும், கட்டுப்படுத்த முடியாத பாதிப்பை ஏற்படுத்துபவையாகவும், தேவையற்ற துன்பங்களைத் தரக் கூடியவையாகவும் இருக்கும் என்பதால் அவை தடை செய்யப் பட்டுள்ளன.

சிரியாவில் பகைமை எண்ணத்துடன் நச்சு ரசாயனங்களின் பயன்பாடு இருந்தது என்ற புகார் குறித்து 2014-ல் இருந்து சிரியாவில் உள்ள ஓபிசிடபுள்யூவின் உண்மை கண்டறியும் அமைப்பு (FFM) மற்றும் ஓபிசிடபுள்யூவின் கலைக்கப்பட்டுவிட்ட கூட்டுப் புலனாய்வு அமைப்பு (JIM) ஆகியவை புலனாய்வு செய்துள்ளன.

Presentational grey line

செப்டம்பர் 2013-க்கும் ஏப்ரல் 2018-க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த 37 சம்பவங்களில் ஆயுதங்களாக ரசாயணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அல்லது பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக அவை கண்டறிந்துள்ளன.

18 பிற நிகழ்வுகளில் ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று நம்புவதற்கான, காரணங்களுடன் கூடிய ஆதாரம் இருப்பதாக, சிரியா குறித்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தன்னாட்சி பெற்ற சர்வதேச விசாரணை ஆணையம் (COI) மற்றும் ஐ.நா.வின் அத்தாட்சி பெற்ற அமைப்புகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச ரசாயண ஆயுதங்கள் உச்சி மாநாட்டில் சிரியா கையெழுத்திட்டதற்கு பிறகு நடந்ததாகக் கூறப்படும் ரசாயணத் தாக்குதல்கள் குறித்த 164 அறிக்கைகளை பனோரமாவும் பிபிசி அரபிக்-கும் ஆய்வு செய்தன.

அந்த 164 சம்பவங்களில், 106 நிகழ்வுகளில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக நம்பும் வகையில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக பிபிசி குழு கண்டறிந்துள்ளது.

இவற்றில் ஒரு சில தாக்குதல்கள் மட்டுமே தலைப்புச் செய்திகளாக வந்த நிலையில், தொடர்ந்து திரும்பத் திரும்ப ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதை தகவல்கள் காட்டுகின்றன.

“ஆபத்தான வாய்ப்புகளை பயன்படுத்துவதால் பயன் கிடைக்கும் என்று அரசுப் படையினர் நம்பும் வகையில், சில விளைவுகளை ரசாயன ஆயுதங்களின் பயன்பாடு ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் ஆபத்தான அந்த வாய்ப்பை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஏனெனில் திரும்பத் திரும்ப அவர்கள் அவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சிரியாவில் உள்ள ஓபிசிடபுள்யூவின் முன்னாள் தலைமை நிர்வாகி ஜூலியன் டான்கரே கூறியுள்ளார்.

செப்டம்பர் 2013-ல் இருந்து நடைபெற்ற ரசாயணத் தாக்குதல்கள் குறித்த 164 அறிக்கைகளை பிபிசி குழு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

பரவலாக பாரபட்சமற்ற மற்றும் போரில் ஈடுபாடு இல்லாத பல வகையான தரப்புகளில் இருந்து அறிக்கைகள் பெறப்பட்டன. சர்வதேச அமைப்புகள், மனித உரிமை குழுக்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் சிந்தனையாளர்கள் இதில் அடங்குவர்.

ஐ.நா. மற்றும் நடத்தும் புலனாய்வுகளுக்கு ஏற்ப, பிபிசி ஆராய்ச்சியாளர்கள், பல்வேறு தன்னாட்சி நிபுணர்களின் உதவியுடன், அறிக்கை தரப்பட்ட ஒவ்வொரு தாக்குதல் பற்றியும் பொதுத் தளங்களில் கிடைத்த தகவல்களை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள் மற்றும் விடியோக்களும் இதில் அடங்கும்.

சிறப்பு முக்கியத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்ட ஆய்வுக்கான நடைமுறைகளை பிபிசி குழு பின்பற்றியது.

ஒரே ஒரு தகவல் ஆதாரம் மட்டும் இருந்த சம்பவங்கள் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என முடிவு செய்யப்பட்ட சம்பவங்கள் அனைத்தையும் பிபிசிஆராய்ச்சியாளர்கள் புறக்கணித்துவிட்டனர். இறுதியில், 106 சம்பவங்களில் ரசாயண ஆயுதம் பயன்படுத்தப் பட்டதாக நம்புவதற்கு, நம்பகமான போதிய ஆதாரங்கள் இருப்பதாக அது கண்டறிந்துள்ளது.

சிரியாபடத்தின் காப்புரிமைANADOLU AGENCY

சிரியாவில் களத்தில் ஒளிப்பதிவு செய்வதற்கு பிபிசி குழுவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவும் அனுமதிக்கப்படவில்லை. எனவே ஆதாரங்களை திட்டவட்டமாக உறுதி செய்ய முடியாமல் போனது.

இருந்தபோதிலும், ஒவ்வொரு நேர்விலும் கிடைத்த ஆதாரங்களின் பலத்தை குழுவினர் சீர்தூக்கிப் பார்த்தனர். ஒவ்வொரு சம்பவத்திலும் கிடைத்த விடியோ காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் ஆகியவையும் இதில் அடங்கும்.

வடமேற்கில் உள்ள இட்லிப் மாகாணத்தில் அதிகபட்ச தாக்குதல்கள் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள ஹமா மற்றும் அலெப்போ மாகானங்களிலும், டமாஸ்கஸ் அருகே கிழக்கில் உள்ள கவுடா பகுதியிலும் நிறைய தாக்குதல்கள் நடந்திருப்பதாக பிபிசி தகவல்களின்படி தெரிய வந்துள்ளது.

இந்த இடங்கள் அனைத்தும் போரின் பல்வேறு காலக்கட்டங்களில் எதிர்த்தரப்பினரின் வசம் இருந்துள்ளன.

அந்தத் தகவல்களின்படி, இட்லிப் மாகாணத்தில் கான் ஷேய்கவுன் நகரில் 2017 ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்தது தான் மிக மோசமான தனிப்பட்ட சம்பவம் என்று தெரிய வந்துள்ளது. அன்றைய தினம் 80-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர் என்று எதிர்த்தரப்பினரின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரசாயண ஆயுதங்கள் உயிர்ப்பலி ஏற்படுத்தும் அளவுக்கு கொடூரமானவை என்றாலும், பொது மக்கள் கொல்லப்பட்ட மற்றும் ஊனமாக்கப்பட்ட பெரும்பாலான சம்பவங்களில் பழமையான ஆயுதங்கள் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கொத்துக் குண்டுகள் மற்றும் வெடிக்கும் ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2. சிரியா அரசுக்கு எதிரான ஆதாரங்கள்

2013 சரின் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ரஷியா சமரசத்தின் பேரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிரியாவில் அறிவிக்கப்பட்ட ரசாயண ஆயுதப் பொருட்கள் அனைத்தையும் அகற்றுதல் அல்லது அழித்தலை முடித்துவிட்டதாக, ஒபிசிடபுள்யூ கூட்டு அமைப்பைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஜூன் 2014ல் அறிவித்தனர்.

“அங்கிருப்பதாக எங்களுக்குத் தெரிந்த அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன,” என்று OPCW ஆய்வாளர்களில் ஒருவரான டாங்கரே தெரிவித்துள்ளார்.

சிரியா

ஆனால், தங்களுக்குத் தரப்பட்ட தகவல்கள் மட்டுமே ஆய்வாளர்களிடம் இருந்தன என்று அவர் விளக்கியுள்ளார்.

“அங்கிருப்பதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டவற்றை மட்டுமே எங்களால் சோதனை செய்ய முடிந்தது” என்று அவர் கூறினார்.

“ரசாயண ஆயுதங்கள் உச்சி மாநாடு விஷயம் என்பதெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையிலானவை.”

இருந்தபோதிலும், சிரியாவின் அறிவிக்கையில் “இடைவெளிகள், மாறுபாடுகள் மற்றும் முரண்பாடுகளை” OPCW அடையாளம் கண்டது. அவை குறித்து தீர்மானிக்க இந்தக் கண்காணிப்பு அமைப்பு இன்னும் முயற்சி செய்து வருகிறது.

மீதமிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் தெளிவுபடுத்துவதற்கு அந்தக் குழு தொடர்ந்து முயற்சித்து வருவதாக ஜூலை 2018-ல் அப்போதைய OPCW-ன் டைரக்டர் ஜெனரல் அஹமது உஜும்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் தெரிவித்தார்.

சிரியாவில் அறிவிக்கை செய்யப்பட்ட ரசாயண ஆயுதப் பொருட்கள் அகற்றப்பட்டுவிட்டன அல்லது அழிக்கப்பட்டு விட்டன என்று ஜூன் 2014-ல் அறிவிக்கப்பட்டாலும், ரசாயணத் தாக்குதல்கள் தொடர்ந்து வருவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாயின.

கான் ஷேய்கவுனில் 2017 ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்த தாக்குதலில் அப்துல் ஹமீது யூசுப் என்பவர் தனது மனைவி, 11 மாதமான இரட்டைக் குழந்தைகள், இரண்டு சகோதரர்கள், தனது பெற்றோர் வழி உறவினர் ஒருவரையும் தன்னுடன் அருகில் வசித்த பலரையும் இழந்திருக்கிறார்.

பக்கத்து வீடுகளில் வசித்தவர்களும், குடும்பத்தினரும் வீட்டிற்கு வெளியில் திடீரென தரையில் விழுந்த காட்சிகளை அவர் விவரிக்கிறார்.

“அவர்கள் நடுக்கத்தில் இருந்தனர், வாயில் நுரை தள்ளியது” என்று அவர் தெரிவித்தார்.

“அது கொடூரமாக இருந்தது. அப்போது தான் அது ரசாயண ஆயுதம் என்று நான் அறிந்து கொண்டேன்.”

சுயநினைவை இழந்து மயக்கமான பிறகு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, எழுந்த பிறகு தனது மனைவி மற்றும் பிள்ளைகள் பற்றி கேட்டிருக்கிறார்.

“15 நிமிடங்கள் கழித்து அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வந்தார்கள் – இறந்த நிலையில். என் வாழ்வில் மிகவும் மதிப்புமிக்கவர்களை நான் இழந்துவிட்டேன்.”

சிரியா

அந்த நாளில் பெருமளவிலான மக்கள் சரீன் ரசாயணத்தின் பாதிப்புக்கு ஆளாக்கப்பட்டனர் என்று ஓபிசிடபுள்யூவின் கூட்டுப் புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது.

சயனைடைவிட 20 மடங்கு மிகவும் பயங்கரமான உயிர்க்கொல்லியாக சரீன் கருதப்படுகிறது. நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் அது பாதிப்பை ஏற்படுத்தும். நரம்புகளில் எரிச்சல் ஏற்படும் அறிகுறிகளை செயல் இழக்கச் செய்யும் சுரப்பியின் செயல்பாட்டை அது மழுங்கடித்துவிடும். இருதயமும், சுவாசம் தொடர்புடைய மற்ற தசைகளும் இழுத்துப் பிடிக்கும். இதனால் சில நிமிடங்களில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் ஏற்படும்.

கான் ஷேய்கவுனில் விமானத்தில் இருந்து ஒரு குண்டு வீசி சரீன் தாக்குதல் நடத்தியதற்கு சிரியா அரசாங்கம் தான் பொறுப்பு என்று நம்புவதாக கூட்டுப் புலனாய்வு அமைப்பு கூறியுள்ளது.

கான் ஷேய்கவுன் புகைப்படங்களைப் பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த நகரைத் தாக்கிய விமானம் புறப்பட்டதாக மேற்கத்திய நாடுகள் நம்பும் சிரிய விமான தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு உத்தரவிட்டார்.

கான் ஷேய்கவுன் சம்பவம் பொய்யான குற்றச்சாட்டு என்று அதிபர் அசாத் கூறினார். “ரசாயண ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எதிர்ப்பாளர்களின் ஆயுதக் கிடங்கின் மீது சிரிய விமானப் படை குண்டு வீசியது, அதனால் நச்சுப் புகை வெளியானது,” என்று ரஷியா கூறியது.

ஆனால், கான் ஷேய்கவுனில் பயன்படுத்தப்பட்ட சரீன் ரசாயனம் சிரியா அரசாங்கத்துக்கு உரியது என்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்ததாக, இந்தத் தாக்குதல் பற்றி புலனாய்வு செய்த ஓபிசிடபுள்யூ குழுவின் உறுப்பினர் ஸ்டீபன் மோகில் கூறியுள்ளார்.

சிரியாவின் கையிருப்பில் இருந்து அழிக்கப்பட்ட ரசாயண ஆயுதங்களில் இருந்து 2014-ல் எடுத்துவரப்பட்ட மாதிரி ரசாயனமும், சம்பவ இடத்தில் கிடைத்த சரீன் ரசாயனப் பொருளும் “சரியாகப் பொருந்தியுள்ளன” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கான் ஷேக்கவுனில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி ரசாயணம் – சிரியா ஏற்கெனவே வைத்திருந்த மீத்தைல் பாஸ்போனைல் டை புளோரைடு (DF) என்ற அழிவுக்கான ரசாயணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சரீன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டுப் புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியா

“அதாவது அனைத்து ரசாயண ஆயுதங்களும் அழிக்கப்படவில்லை என்பது இதன் மூலம் அர்த்தமாகிறது,” என்று மோகில் கூறியுள்ளார்.

“அந்த ரசாயண ஆயுதம் அறிவிக்கப்பட்ட தொகுப்பைச் சார்ந்தது அல்ல என்றும், நாங்கள் சென்ற இடத்தில் அவை இல்லை என்று மட்டுமே யூகிக்க முடிகிறது” என்று, சிரியா ரசாயண ஆயுதங்களை அழிக்கும் ஓபிசிடபுள்யூ பணியை மேற்பார்வையிட்ட திரு. டான்கரே தெரிவித்துள்ளார்.

“அங்கு என்ன இருந்தது என எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதோ அவற்றை சோதிப்பது மட்டுமே எங்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு என்பது தான் உண்மை. அறிவிப்பில் உள்ள குறைபாடுகளை புலனாய்வு செய்வதற்கு தனிப்பட்ட வேறு நடைமுறை உள்ளது.”

ஆனால் பிபிசி குழுவால் ஒப்பீடு செய்யப்பட்ட மற்ற 105 தாக்குதல்கள் பற்றிய தகவல் என்ன?

அவற்றின் பின்னணியில் யார் இருந்ததாக நம்பப்படுகிறது?

இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழுவினர் இரண்டு தாக்குதல்களில் கொப்புளங்களை ஏற்படுத்தும் சல்பர் மஸ்டர்ட் ரசாயனத்தைப் பயன்படுத்தியுள்ளதாக கூட்டுப் புலனாய்வு அமைப்பு முடிவுக்கு வந்துள்ளது. தகவல்கள் வெளியான வேறு மூன்று தாக்குதல்களை ஐ.எஸ். நடத்தியிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பிபிசி -யின் தகவல்களில் தெரிய வருகிறது.

ஐ.எஸ். அல்லாத ஆயுதம் தாங்கிய வேறு எதிர்த்தரப்பு குழுவினர் யாரும் ரசாயணத்தாக்குதல் நடத்தினரா என்பது குறித்து கூட்டுப் புலனாய்வு அமைப்பினரும் ஓபிசிடபுள்யூ அமைப்பினரும் இதுவரை முடிவுக்கு வரவில்லை. இதுகுறித்த நம்பகமான ஆதாரம் எதுவும் பிபிசியின் புலனாய்விலும் கண்டறியப்படவில்லை.

சிரியா

இருந்தபோதிலும், பல சமயங்களில் தீவிரவாதிகள் தான் ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்று சிரியா அரசாங்கமும், ரஷியாவும் குற்றஞ்சாட்டியுள்ளன. இதுபற்றி ஓபிசிடபுள்யூவுக்கு புகார் தெரிவித்துள்ளன. அந்த அமைப்பும் புகார்கள் பற்றி விசாரணை செய்துள்ளது. ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தியதாக கூறப்படுவதை, ஆயுதம் ஏந்திய எதிர்தரப்பினர் மறுத்துள்ளனர்.

காணொளி, புகைப்படங்கள், நேரடி சாட்சியங்கள் ஆகிய ஆதாரங்களின்படி பார்த்தால், 106ல் குறைந்தது 51 தாக்குதல்கள் வானில் இருந்து நடத்தப்பட்டதவை என்று தெரிய வருகிறது. வானில் இருந்து நடத்தப்பட்ட அனைத்துத் தாக்குதல்களும் சிரியா அரசாங்கப் படைகளால் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பிபிசி நம்புகிறது.

அசாத்துக்கு ஆதரவாக 2015-ல் இருந்து ரஷிய விமானங்கள் ஆயிரக்கணக்கான தாக்குதல்கள் நடத்தியுள்ளன என்றாலும், சிரியாவில் ரஷியப் படையினர் ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்று, விசாரணை ஆணையத்தின் ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல, தாங்கள் புலனாய்வு செய்ய சம்பவங்களில், வான்வழியாக தாக்குதல் நடத்தும் வல்லமை தீவிரவாத குழுக்களிடம் இருப்பதற்கான எந்த ஆதாரங்களையும் கண்டறிய முடியவில்லை என்று ஓபிசிடபுள்யூ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் விமானம் மூலம் ரசாயனத் தாக்குதல் நடத்தியிருக்க முடியுமா என்பது பற்றி புலனாய்வு செய்த அமைப்பை சேர்ந்த டோபியாஸ் ஸ்ச்னெய்டர் , அவ்வாறு ஏதும் கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார். வான் வழியாக ரசாயணத் தாக்குதல் நடத்தியது அசாத் ஆட்சி மட்டும் தான்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.
<figure class="media-landscape no-caption full-width"><span class="image-and-copyright-container"><img class="responsive-image__img js-image-replace" src="https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/FDF2/production/_104001056_gettyimages-1052358668.jpg" alt="சிரியா" width="976" height="549" data-highest-encountered-width="624" /><span class="off-screen">படத்தின் காப்புரிமை</span><span class="story-image-copyright">ANADOLU AGENCY</span></span></figure>
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கப் பிராந்திய திட்டங்களின் தலைவர் டாக்டர் லினா காட்டிப்
சிரியாவில் நாங்கள் பார்த்த பெரும்பான்மையான ரசாயனத் தாக்குதல்கள், ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் வேலையாகத் தான் இருக்கும் என்பதைக் காட்டும் பாணியில் உள்ளன. சிரியாவில் வேறு குழுக்கள் செய்தவை போல அல்ல” என்று கூறியுள்ளார்.

“மரபுவழி ஆயுதங்கள் மூலம் ஒரு பகுதியைத் திரும்பப் பிடிப்பதற்கு ராணுவத் திறமை இல்லாதபோது, சில நேரங்களில் ஆட்சியாளர்கள் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துகிறார்கள்” என்று அந்தப் பெண்மணி குறிப்பிட்டுள்ளார்.

தகவல் தெரிவிக்கப்பட்ட 106 தாக்குதல்களில் – கான் ஷேக்கவுன் – கொடூரத் தாக்குதலில் சரீன் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் குளோரின் தான் பொதுவாகப் பயன்படுத்தப்படும் நச்சு ரசாயனம் என்று ஆதாரங்கள் காட்டுகின்றன.

“இரட்டைப் பயன்பாட்டு” ரசாயனம் என்று குளோரின் கருதப்படுகிறது. அது பல வகைகளில் மக்களுக்கு அமைதிவழியில், சட்டபூர்வப் பயன்பாடுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு CWC தடை விதித்துள்ளது.

தகவல் தெரிவிக்கப்பட்ட 106 தாக்குதல்களில், 79 நேர்வுகளில் குளோரின் பயன்படுத்தப் பட்டிருப்பதாக கருதப்படுகிறது என்று பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன. தாங்கள் புலனாய்வு செய்தவற்றில் 15 இடங்களில் குளோரின் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று OPCW மற்றும் JIM குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

குளோரின் வேகமாக ஆவியாகி, கலைந்துவிடும் என்பதால், ஒரு தாக்குதலில் குளோரின் பயன்படுத்தப்பட்டதா என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“குளோரின் தாக்குதல் நடந்த ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால், மிகக் குறுகிய அவகாசத்திற்குள் சென்றால் தவிர, அந்தச் சுற்றுப்புற சூழ்நிலையில் இருந்து பொருள் சார்ந்த ஆதாரத்தைத் திரட்டுவது சாத்தியமற்றது” என்று OPCW-வின் முன்னாள் ஆய்வாளர் திரு. டாங்கரே கூறுகிறார்.

“அந்த வகையில், அதைப் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட எந்த ஆதாரமும் மிச்சமிருக்காது என்ற நிலையில், ஏன் பல முறை திரும்பத் திரும்ப அது நடந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திட முடியும்.”

3. ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்தியது முக்கியத்துவமானது போல தெரிகிறது.

தகவல் தெரிவிக்கப்பட்ட ரசாயணத் தாக்குதல்கள் அலை அலையாக வந்தன.

தகவல் தெரிவிக்கப்பட்ட 106 ரசாயணத் தாக்குதல்களின் நேரங்கள் மற்றும் நடந்த இடங்களை ஆய்வு செய்தபோது, அவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்ற பாங்கு தெரிய வருவதைப் போல உள்ளது.

தகவல் தெரிவிக்கப்பட்டவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் ஒரே பகுதி மற்றும் சுற்றுப் பகுதிகளில் தொகுப்பாக, ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2014ல் இட்லிப், 2015ல் இட்லிப், 2016 இறுதியில் அலெப்போ , 2018 ஆரம்பத்தில் கிழக்கு காவ்டா பகுதிகளில் அரசுப் படைகள் தாக்குதல் நடத்திய சமயங்களுடன் இந்தத் தொகுப்புகள் ஒத்துப்போகின்றன.

“உள்ளூர் மக்கள் அங்கிருப்பதை ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத விஷயமாக நினைக்கும் சமயங்களில் எல்லாம் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன” என்று டாக்டர் காட்டிப் கூறியுள்ளார்.

“உச்சகட்ட தண்டனையாக ரசாயன ஆயுதங்கள் இருப்பதுடன், மக்களிடம் அச்சத்தை உருவாக்குவதுடன், மோதல் காரணமாக ராணுவ பலம் குறைந்துவிட்ட சமயத்தில் இது மலிவானதாகவும், சவுகர்யமானதாகவும் இருக்கிறது.” என்று அவர் தெரிவித்தார்.

“ரசாயண ஆயுதங்களைவிட மக்களை அச்சுறுத்தும் வேறு விஷயம் எதுவும் கிடையாது. ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போதெல்லாம் குடியிருப்புவாசிகள் அந்தப் பகுதியைவிட்டு ஓடிவிடுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் திரும்பி வருவது கிடையாது.”

பல ஆண்டுகள் போர் நடைபெற்ற அலெப்போ நகரம், இதுபோன்ற அணுகுமுறை நடைபெற்ற இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

நகரை முழுமையாக வசப்படுத்துவதற்கு, அரசுப் படைகள் இறுதிக்கட்ட தாக்குதலைத் தொடுத்தபோது, கிழக்குப் பகுதியில் குறிப்பிட்ட எல்லைக்குள் மக்களையும், எதிர்ப்பாளர்களையும் ராணுவத்தினர் சிக்க வைத்துவிட்டனர்.

அரசின் எதிர்ப்பாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் முதலில் மரபுவழி ஆயுதங்கள் மூலம் குண்டுமழை பொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து, ரசாயணத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அலெப்போ நகரம் சீக்கிரமே அரசின் கைக்கு வந்துவிட்டது. மக்கள், அரசின் எதிர்ப்பாளர்கள் வசம் உள்ள வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

“தனது தேவைகளுக்கு முக்கியத்துவமானதாக கருதும் பகுதிகளில் ஆட்சியாளர்கள் ராணுவ ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பது, நாங்கள் கண்ட பாங்குகள் மூலம் தெரிய வருகிறது” என்று டாக்டர் காட்டிப் தெரிவித்துள்ளார்.

“உள்ளூர் மக்களை ஓட வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தப் பகுதிகளை பிடிக்கும் கடைசிகட்ட நடவடிக்கையின் போது ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.”

2016 நவம்பரின் பிற்பகுதியில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் அலெப்போ நகரில் 11 முறை குளோரின் தாக்குதல்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. போரிட்டவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் சரணடைந்து, காலி செய்ய ஒப்புக்கொள்வதற்கு முன்பு, தாக்குதலின் கடைசி இரண்டு நாட்களில் ஐந்து தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

சிரியா எதிர்த்தரப்பினருக்கு தடயவியல் விஞ்ஞானியாக செயல்பட்ட அபு ஜாபர், முற்றுகையின் கடைசி இரண்டு நாட்களில் அலெப்போவில் இருந்திருக்கிறார். ரசாயணத் தாக்குதல்களால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பலருடைய உடல்களை அவர் பரிசோதனை செய்திருக்கிறார்.

நான் பிணவறைக்குச் சென்றேன். உடல்களில் இருந்து குளோரின் வாடை அதிகமாக வீசியது,'' என்று அவர் கூறியுள்ளார்.அந்த உடல்களை நான் பரிசோதனை செய்தபோது, குளோரின் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கான, தெளிவான அடையாளங்களை நான் கண்டேன்.”

குளோரினை பயன்படுத்தியதால் பேரழிவு விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாபடத்தின் காப்புரிமைLOUAI BESHARA

“அந்த வாயு மக்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. பதற்றத்தையும் பயங்கரத்தையும் பரப்புகிறது” என்று அவர் தெரிவித்தார்.

“வானில் எல்லா நேரமும் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சுற்றிக் கொண்டிருந்தன. அத்துடன் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது ரசாயன ஆயுதங்கள்தான்” என்று அவர் கூறினார்.

திரவ குளோரின் விடுவிக்கப்படும்போது, வேகமாக அது வாயுவாக மாறுகிறது. அது காற்றைவிட கனமானது.தாழ்வான பகுதியில் காற்றை மூழ்கடித்துவிடும். அடித்தளங்களிலும், குண்டு வீச்சில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான முகாம்களிலும் உள்ள மக்கள் இதில் சிக்குவார்கள். இந்தப் பாதிப்பில் சிக்கிக் கொள்வார்கள்.

கண்கள், தொண்டை மற்றும் நுரையீரல் போன்ற ஈரமான திசுக்களுடன் குளோரின் சேரும்போது, அந்தத் திசுக்களை சேதப்படுத்தும் ஓர் அமிலம் உற்பத்தியாகிறது. குளோரினை சுவாசிக்கும்போது, நுரையீரலில் உள்ள காற்றுப் பைகள் சுரக்கும் திரவம், பாதிக்கப்பட்டவர்களை நிலைகுலையச் செய்துவிடும்.

“மேலே சென்றால் ராக்கெட்களில் இருந்து வீசப்படும் குண்டுகளுக்கு இரையாவார்கள். கீழே சென்றால், குளோரினால் கொல்லப்படுவார்கள். வெறிபிடித்த நிலைக்கு மக்கள் செல்வார்கள்” என்று அபு ஜாபர் கூறியுள்ளார்.

குளோரினை ஓர் ஆயுதமாக ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்று சிரியா அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அலெப்போவில் நடந்த 11 தாக்குதல்களும், வானில் இருந்து தான் நடந்துள்ளன. அரசின் எதிர்ப்பாளர்கள் வசம் இருந்த பகுதிகளில் தான் நடந்துள்ளன” என்று பிபிசி-யிடம் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலெப்போ நகருக்காக இறுதிப் போர் நடந்த சமயத்தில் 120,000 க்கும் அதிகமானவர்கள் அந்த நகரைவிட்டு வெளியேறினர் என்று, அங்கு களத்தில் இருந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். உள்நாட்டுப் போரில் அது ஒரு திருப்புமுனையாக இருந்தது.

டமாஸ்கஸ் அருகே தீவிரவாதிகளின் பிடியில் நீண்டகாலம் இருந்த கிழக்கு காவ்டா பகுதியிலும், இதேபோன்ற ரசாயணத் தாக்குதல் பாணி கையாளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளின் வசமிருந்த பகுதியில் உள்ள நகரங்களில் 2018 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் பல தாக்குதல்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தீவிரவாதிகளின் பிடி விலகிய சம்பவங்களுடன் இந்தத் தாக்குதல்கள் ஒத்துப் போகின்றன என்பதை ஒப்பீடுகள் தெரிவிக்கின்றன.

கிழக்கு காவ்டாவில் மிகப் பெரியதான டவுமா நகரில் நான்கு மாதங்களில் நான்கு ரசாயனத் தாக்குதல்கள் நடந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் படைகள் தரைவழி தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு வான்வழியாக தீவிர தாக்குதல் நடத்தியபோது, ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

மருத்துவ நிபுணர்களும் மீட்புப் படையினரும் தெரிவித்தபடி, கடைசி மற்றும் மிக மோசமான சம்பவம் ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்துள்ளது. அப்போது அடுக்கு மாடி வளாகத்தில் ஒரு பால்கனியில் மஞ்சள் தொழிற்சாலை வாயு சிலிண்டர் வீசப்பட்டது. ஒரு நாள் கழித்து அரசின் எதிர்ப்பாளர்கள் சரணடைந்தனர்.

அடுக்குமாடி பிளாக்கின் அடித்தளத்தில் மறைந்திருந்த 30 குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் இதில் பலியானதாக அரசுக்கு எதிரான அணியின் ஆதரவு அமைப்பினர் வெளியிட்ட காணொளிகள் காட்டுகின்றன.

சிரியா

அன்றைய தினம் இரவு அந்த இடத்தைப் பார்வையிட்ட இயக்கவாதியான யாசர் அல்-டோமானி, இறந்து கிடந்தவர்கள் வாயில் நுரை தள்ளியிருந்தது என்றும், ரசாயண ஆயுதங்களால் ஏற்பட்டதைப் போன்ற கொப்பளங்கள் இருந்தன என்றும் கூறியுள்ளார்.

மற்றொரு காணொளியில் அதே போன்ற உடைகள் அணிந்த குழந்தைகள் அடுக்குமாடி பிளாக்குகளில் இறந்து கிடந்தது தெரிய வருகிறது. அதேபோன்ற கொப்புளங்களுடன் அவை உள்ளன. அடையாளம் காண்பதற்காக அவை வரிசையாக வைக்கப்பட்டிருந்ததை காணொளி காட்டுகிறது.

18 பேரிடம் பிபிசி குழுவினர் பேசினர். அடுக்குமாடி பிளாக்கில் இருந்து உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுவதைப் பார்த்ததாக அவர்கள் உறுதிப் படுத்தினர்.

தகவல் தெரிவிக்கப்பட்ட அந்தத் தாக்குதல் நடைபெற்ற இரண்டு நாட்கள் கழித்து, அடுக்குமாடியின் பிளாக் பகுதியை ரஷிய ராணுவ நிபுணர்கள் பார்வையிட்டனர். குளோரின் அல்லது வேறு எந்த ரசாயனப் பொருட்களும் இருப்பதற்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று அவர்கள் கூறினர். பிரிட்டன் உதவியுடன் தீவிரவாதிகள் தான் அந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று ரஷிய அரசாங்கம் கூறியது. அது “கற்பனைகளின் தொகுப்பு என்றும், பொருத்தமற்றது” என்றும் கூறி பிரிட்டிஷ் அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ இரண்டு வாரங்கள் கழித்து ஓபிசிடபுள்யூ-வின் உண்மை அறியும் அமைப்பின் குழு அந்தப் பகுதியை ஆய்வு செய்தது. பால்கனியில் கேஸ் சிலிண்டர் கிடந்ததற்கான மாதிரிகளை அந்தக் குழுவினர் எடுத்துச் சென்றனர். அந்த மாதிரிகளில், வெவ்வேறான குளோரின் கலக்கப்பட்ட ஆர்கானிக் ரசாயணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஜூலை மாதம் அந்தக் குழு தெரிவித்தது. வெடிமருந்துகளின் மிச்சம் இருந்ததாகவும் தெரிவிக்கப் பட்டது.

முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து அந்தக் குழு இன்னும் ஆய்வு செய்து வருகிறது. ஆனால் உயிரிழந்தவர்கள் குளோரின் பாதிப்பால்தான் இறந்தனர் என்று மேற்கத்திய நாடுகள் மனதார நம்புகின்றன.

சிரியாபடத்தின் காப்புரிமைHASAN MOHAMED

டவ்மா சம்பவத்திற்கு ஒரு வாரம் கழித்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் படைகள் மூன்று இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தின. அந்த இடங்கள் “சிரியா ஆட்சியாளர்களின் ரசாயண ஆயுதங்கள் திட்டத்துடன் தொடர்புடைய இடங்கள்” என தெரிவிக்கப்பட்டது.

கிழக்கு கவ்டா தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதாக சிரியா ராணுவம் அறிவிப்பு செய்ததற்கு சில மணி நேரங்கள் முன்னதாக மேற்கத்திய நாடுகளின் தாக்குதல்கள் நடந்தன. சிரியா ராணுவம் அறிவித்த சமயத்தில் 140,000 பேர் வீடுகளை விட்டு ஓடிவிட்டனர். 50,000 பேர் வரை , நாட்டின் வடக்குப் பகுதியில் தீவிரவாதிகளின் வசம் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

“அழிவின் தன்மையை நான் பார்த்தேன். மக்கள் அழுதுகொண்டு, தங்கள் வீடுகள் அல்லது குழந்தைகளுக்கு பிரியா விடை கொடுத்தனர். பரிதாபகரமான, வேறு வழியில்லாத உணர்வுகளை முகத்தில் காண முடிந்தது. அது உண்மையில் துன்பகரமானது. என்னால் அதை மறக்க முடியாது. வேண்டிய மட்டும் அனுபவித்துவிட்டதாக கடைசியில் மக்கள் கூறினர்,” என்று டவ்மாவில் தனது கணவர் மற்றும் மகனுடன் வாழும் மானுவல் ஜராடே கூறியுள்ளார்.

ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற புகார் குறித்து பிபிசியின் கேள்விகளுக்கு சிரியா அரசாங்கம் பதில் அளிக்கவில்லை. டவ்மாவில் தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்கு, பனோரமா குழுவினர் டமாஸ்கஸ் செல்ல அரசாங்கம் அனுமதிக்கவில்லை. நேர்காணல் நடத்துவதற்கான கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.

சிரியா மக்களுக்கு சர்வதேச சமூகம் கை கொடுக்கத் தவறிவிட்டதா என்று கேட்டதற்கு, “ஆமாம், அப்படித்தான்” என்று ஓபிசிடபுள்யூ ஆய்வாளர் ஜூலியன் டாங்கரே பதில் அளித்தார்.

“அசாத் ஆட்சிக் காலம் வாழ்வா சாவா போராட்டமாகிவிட்டது. திரும்பி வருவோம் என்பதற்கான உத்தரவாதம் இல்லை பாருங்கள். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.”

எனவே அதிபர் அசாத் இத்துடன் தப்பிவிட்டாரா? அப்படியில்லை என்று தோன்றுகிறது என்கிறார் ஐ.நா.வுக்கான பிரிட்டன் தூதர் கரேன் பியர்ஸ்.

ஆதாரங்கள் சேகரிக்கப்படுகின்றன'' என்று அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.ஒரு நாள் நீதி கிடைக்கும். இதற்குக் காரணமானவர்களை கூண்டில் ஏற்ற முடிந்தவரையில் நாங்கள் முயற்சி செய்வோம். அதை விரைவுபடுத்துவோம்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தயாரிப்பாளர்கள் அலிஸ் கம்மிங்ஸ் மற்றும் கேத் மீட். ஆன்லைன் தயாரிப்பு டேவிட் கிரிட்டன், லூசி ரோஜர்ஸ், ஜெர்ரி பிளெட்சர், டேனியல் டன்போர்டு மற்றும் நாஸ்ஸோஸ் ஸ்டைலியனவ். -BBC_Tamil