இந்தோனேசியா சந்தித்தது 98 விமான விபத்து – உலகில் நடந்த விமான விபத்துக்கள்

இந்தோனேசியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.

வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் கடலில் விழுந்து  விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்க்ப்பட்டு உள்ளது.

இது இந்தோனேஷியா சந்திக்கும் 98ஆவது விமான விபத்து என ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சி தகவல்வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதிலும் ஏராளமானோர் விமானங்களில் பயணிக்கும் நிலையில் விமானங்கள் பல விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பிரபல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆய்வு ஒன்றின் முடிவுகள், இது இந்தோனேசியா சந்திக்கும் 98-வது விமான விபத்து என தெரிவித்துள்ளதோடு இதுவரை உலகில் எந்தெந்த நாடுகளில் எத்தனை விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்னும் புள்ளி விவரத்தையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி மிக அதிக விமான விபத்துகளை சந்தித்துள்ள நாடு அமெரிக்காவாகும், அது 829 விமான விபத்துகளை சந்தித்துள்ளது.அதற்கு அடுத்தபடியாக ரஷ்யா 521 விமான விபத்துக்களையும், பிரேஸில் 188 விபத்துக்களையும், கொலம்பியா 182 விபத்துக்களையும், கனடா 179 விபத்துக்களையும் சந்தித்துள்ளன.

இங்கிலாந்து இதுவரை 104 விமான விபத்துக்களையும் பிரான்ஸ் 104 விபத்துக்களையும் கண்டுள்ளன. மெக்சிகோ, இந்தோனேசியா 98 விமான விபத்துக்களையும், இந்தியா 94 விமான விபத்துக்களையும், சீனா 73 விமான விபத்துக்களையும், இத்தாலி  68 விமான விபத்துக்களையும் சந்தித்து உள்ளன.

-dailythanthi.com