பாகிஸ்தான் தெய்வ நிந்தனை வழக்கு: எட்டு ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்தவர் விடுதலை

தெய்வ நிந்தனை செய்த வழக்கொன்றில் கிறிஸ்தவ பெண்ணை விடுதலை செய்து பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. நாடு முழுவதும் இதுவொரு முக்கியதுவம் வாய்ந்த வழக்காக பார்க்கப்பட்டது.

அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட சச்சரவொன்றில் அசியா பீபி எனும் பெண் முகமது நபியை அவமனாப்படுத்திய வழக்கில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால், தான் அவ்வாறாக அவமானப்படுத்தவில்லை என்று கூறிவந்தார். எட்டு ஆண்டுகள் தனிமை சிறையிலும் இருந்தார்.

தெய்வ நிந்தனை சட்டங்கள் வலுவாக உள்ள பாகிஸ்தானில் இவரது வழக்கு பலத்த சச்சரவையும் பிரிவினையையும் ஏற்படுத்தியது.

இந்த வழக்கு மேல் முறையீட்டுற்கு வந்ததை தொடர்ந்து, கலவரம் ஏற்படும் என்ற அச்சத்தில் இஸ்லாமாபாத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தீவிர மதசார்பாளர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மேல்முறையீடு

இந்த மேல்முறையீட்டு மனு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சாகிர் நிசாருக்கு முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அசியா பீபியை விடுதலை செய்தார்.

பழிவாங்கல்

தெய்வநிந்தனை சட்டம் பெரும்பாலும் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆசியாவுக்கு ஆதரவாக முறையீடு செய்த அந்த மாகாண ஆளுநர் சல்மான் தசீர், அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது. .

அவரை கொன்ற பாதுகாவலருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனாலும், அவர் பலரால் கதாநாயகனாக கொண்டாடப்படுகிறார்.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?

நான்கு குழந்தைகளுக்கு தாயான ஆசியா 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அண்டை வீட்டாருடன் விவாதத்தில் ஈடுப்பட்டார்.

அந்த வாக்குவாதமும் சாதாரணமான ஒரு விஷயத்திற்காகதான் தொடங்கியது. அவர்கள் லாகூர் அருகே பழம் பறித்துக் கொண்டிருந்த போது, ஒரு பக்கெட் தண்ணீர் பகிர்ந்து கொள்வதில்தான் பிரச்சனை தொடங்கியது.

தாங்கள் பயன்பாட்டுக்காக வைத்திருந்த தண்ணீரை எடுத்து ஆசியா அருந்திவிட்டார். இதனால், எங்கள் நம்பிக்கையின்படி அந்த தண்ணீரின் புனிதம் கெட்டுவிட்டது. இனி அந்த தண்ணீர் பயன்படுத்த முடியாது என்று கூறி சச்சரவிட்டனர்.

ஆசியா மதம் மாற வேண்டும் என்று அவர்கள் வாதிட்டதாகவும், அதற்கு மறுப்பாக முகமது நபியை ஆசியா இறை நிந்தனை செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

சச்சரவிட்டதை ஒப்புக் கொண்ட ஆசியா தொடக்கத்திலிருந்தே இறை நிந்தனை குற்றத்தை மறுத்து வந்தார்.

அவரது வழக்கறிஞர் அரசு தரப்பில் நிறைய முரண்பாடுகள் இருப்பதாக கூறி வந்தார்.

அவருக்கு ஆதரவாக

இஸ்லாம்தான் பாகிஸ்தானின் அரச மதம். இது அவர்களின் சட்டத்திலும் பலமாக எதிரொலிக்கும்.

மக்களும் தெய்வ நிந்தனை சட்டத்திற்கு ஆதரவாகவே இருக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், ஆசியாவை ஆதரித்தவர் பஞ்சாப் மாகாண ஆளுநரான சல்மான். ஆசியாவை மன்னிக்க வேண்டும், தெய்வ நிந்தனை சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கோரி வந்தார்.

இதன்காரணமாக. 2011 ஆம் ஆண்டு, அவரது பாதுகாவலராலேயே கொல்லப்பட்டார்.

னி என்ன?

ஆசியாவின் விடுதலைக்கு எதிராக மோசமான கலவரம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரம், அவருக்கு அடைகலம் தர பல நாடுகள் முன்வந்துள்ளன.

அவர் விடுதலை அடைந்ததும், அவரை கட்டி அணைத்து கண்ணீர் விடுவேன். இறைவனுக்கு நன்றி சொல்வேன் என்று ஆசியாவின் மகள் ஈசம் ஆசிக் ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்து இருந்தார். -BBC_Tamil