இரான் மீது அமெரிக்கா மீண்டும் தடைகள் விதிப்பு

2015ஆம் ஆண்டு இரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், இரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டது. அதிலிருந்து வெளியேறுவதாக கடந்த மே மாதம் அறிவித்த டிரம்ப் நிர்வாகம், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தது.

தற்போது இரண்டாம் கட்ட தடைகளை டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இரானின் எண்ணெய் மற்றும் கப்பல் துறை, அதன் மத்திய வங்கி உள்ளிட்டவற்றில் சிக்கல்களை ஏற்படுத்தும் விதமாக இந்தத் தடைகள் அமையும்.

கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட முதல் கட்ட பொருளாதார தடைகளின்படி, அமெரிக்க டாலர்களை வாங்குவதில் இரானுக்கு கட்டுப்பாடு, தங்கம் மற்றும் விலையுயர்ந்த உலோக வர்த்தகம் மற்றும் வாகன துறையில் வர்த்தகத்தில் ஈடுபடுவதில் இரானுக்கு சிக்கல் ஏற்படும்.

இருந்தபோதிலும், இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் எட்டு நாடுகளை அமெரிக்கா தண்டிக்கவில்லை.

இரான்

அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது ஏன்?

கடந்த 2015-ஆம் ஆண்டு இஸ்லாமிய குடியரசு நாடான இரான் மீதான சர்வதேச தடைகள் நீக்கப்பட்டு நிவாரணம் பெறுவதற்காக சர்ச்சைக்குரிய அணுசக்தி செயல்பாடுகளில், கட்டுப்பாடுகளை கடைபிடிக்க ஒப்புக்கொண்டது.

ஆனால் டிரம்ப் நிர்வாகமானது ”இரான் அணுகுண்டு தயாரிப்பதற்கான அனைத்து வழிகளையும் மூடுவதற்கான அடிப்படை குறிக்கோள்களை நிறைவேற்ற தவறிவிட்டது” என கூறியது.

டெஹ்ரானின் பெலிஸ்டிக் ஏவுகணை திட்டம் மற்றும் பயங்கரவாதத்துக்கான அதன் ஆதரவு உள்ளிட்ட தீய செயல்களுக்கு, அமெரிக்கா ஒப்பந்தம் என்ற பேரில் ஒத்துப்போகாது என்றது.

இரானை ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்றவைக்க வலியுறுத்துவதற்கான முயற்சியின் ஒருபகுதியாக அமெரிக்க அதிபர் மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தார்.

உடன்படிக்கையை முழுமையாக செயல்படுத்த, இரான் தனது கடமைகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இந்த உடன்படிக்கையில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட பிற நாடுகள் வலியுறுத்தியிருந்தன. -BBC_Tamil