செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முதன்முறையாக செளதி அரசாங்கம் மீது நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.
“வாஷிங்டன் போஸ்டில் அவர் எழுதிய செய்தியில் செளதி அரசாங்கத்தில் உயர்மட்ட நிலையில் இருப்பவர்களிடமிருந்து கஷோக்ஜியை கொல்ல ஆணை வந்ததாக எங்களுக்கு தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.
செளதியுடனான துருக்கியின் நட்பு குறித்து குறிப்பிட்ட அவர், இதில் அரசர் சல்மான் ஈடுபட்டிருக்க மாட்டார் என நம்புவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில், அக்டோபர் 2ஆம் தேதி கஷோக்ஜி கொலை செய்யப்பட்டார்.
கஷோக்ஜி தனது திருமணத்துக்கான ஆவணங்கள் விஷயமாக தூதரகத்துக்கு சென்ற போது, அங்கு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார் என துருக்கி விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஜமால் கசோஜி: கொலை செய்யப்பட்டது யாரால்? – செளதி விளக்கம்
- கஷோக்ஜி அபாயகரமான இஸ்லாமியவாதி என அமெரிக்காவிடம் சொன்னாரா சௌதி இளவரசர்?
கொலை செய்யப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் சடலம் வெட்டப்பட்டு, பிறகு அமிலத்தில் கரைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவானின் ஆலோசகரும், மூத்த துருக்கி அதிகாரியுமான யாசின் அக்டாய் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை செளதி அதிகாரிகளால் மறைக்கப்பட்டது, செளதி மற்றும் அதன் கூட்டனி நாடுகளுக்குடன் இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தியது.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகித்து இதுவரை 18 பேரை செளதி அரசு கைது செய்துள்ளது. அவர்கள் செளதியில்தான் தண்டிக்கப்படுவர் ஆனால் அவர்களை துருக்கி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறது.
எர்துவான் என்ன சொன்னார்?
“இந்த கொலையில் ஈடுபட்டவர்கள், செளதி அரசால் கைது செய்யப்பட்ட 18 பேரில் சிலர் என எங்களுக்கு தெரியும்” என வாஷிங்டன் போஸ்டில் தான் எழுதிய செய்தி தொகுப்பில் எர்துவான் தெரிவித்துள்ளார்.
“கஷோக்ஜியை கொலை செய்துவிட்டு அங்கிருந்து செல்லுங்கள் என தங்களுக்கு வந்த ஆணையை அந்த மனிதர்கள் கடைபிடித்திருப்பார்கள் என்று எங்களுக்கு தெரியும். மேலும் இறுதியாக, கஷோக்ஜியை கொலை செய்வதற்கான ஆணை, செளதி அரசின் உயர்மட்ட நபர்களிடமிருந்து வந்துள்ளது என்பதும் எங்களுக்கு தெரியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
- ”கஷோக்ஜி கொலை விசாரணையில் டிரம்ப் நேர்மையாக இல்லை”
- ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது எவ்வாறு? – மர்மம் விலகுமா?
“பாதுகாப்பு அதிகாரிகளை தவிர வேறு சிலரும் கஷோக்ஜியின் கொலையில் ஈடுப்பட்டுள்ளனர்; இந்த கொலைக்கு பின்னணியில் இருப்பவர்களை வெளியே கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
துருக்கி மண்ணில் இனி யாரும் இம்மாதிரியான குற்றத்தை செய்ய துணியக்கூடாது என்று தெரிவித்த எர்துவான், யாரேனும் அந்த எச்சரிக்கையை புறக்கணிக்க நினைத்தால், எதிர்வினைகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.
துருக்கியை விட்டுச் சென்ற செளதி தூதரக அதிகாரியின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ள எர்துவான், சிறிய கேள்விகளுக்கு கூட பதிலளிக்காது, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த செளதி அரசு வழக்கறிஞர் மீதும் புகார் கூறியுள்ளார்.
இதுவரை நடந்தது என்ன?
கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்ட செளதி, அவரின் உடலுக்கு என்ன ஆனது என்பது தங்களுக்கு தெரியாது என கூறி வருகிறது.
“முன்னரே திட்டமிடப்பட்டு, தூதரகத்தில் நுழைந்தவுடன் பத்திரிகையாளர் கஷோக்ஜி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார்” என துருக்கி விசாரணையாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல், திட்டமிட்டப்படி அவரின் உடல் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
யார் இந்த ஜமால் கஷோக்ஜி?
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.
ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 – 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார். -BBC_Tamil