அபிம்: பொதுக் கூட்ட மசோதா மேலோட்டமானது; தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன

2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் அமைப்புக்களுடன் அபிம் என்ற முஸ்லிம் இளைஞர் இயக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது.

பொதுக் கூட்டங்களுக்கு “வசதி செய்து கொடுக்க” போலீசுக்கு அந்த மசோதா வழங்கும் அதிகாரங்கள் “மிகவும் மேலோட்டமானவை”, அவை “தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள்” உள்ளதை அதன் தலைவர் அமிடி அப்துல் மானான் சுட்டிக் காட்டியுள்ளார்.

“நாங்கள் அந்த மசோதாவை நன்கு பரிசீலினை செய்தோம். நாங்கள் அந்த நகல் சட்டத்துக்கும் அது அமலாக்க விரும்பும் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்,” என அவர் விடுத்த அறிக்கை கூறியது.

ஆயுதங்கள் இல்லாமல் அமைதியாகக் கூடுவதற்கு குடிமகனுக்கு உள்ள உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கின்ற, அதனைப் பாதுகாக்கின்ற கூட்டரசு அரசியலமைப்பின் 10வது பிரிவை அந்த மசோதாவின் பல விதிகள் மீறுவதை அபிம் சுட்டிக் காட்டியது.

“2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவின் 15வது பிரிவின் கீழ் பொதுக் கூட்டங்கள் மீது, தான் அவசியம் எனக் கருதும் நிபந்தனைகளை விதிப்பதற்கு போலீசுக்கு முழு விருப்ப அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் அந்த மசோதாவின் 21வது பிரிவின் கீழ் பொதுக் கூட்டம் ஒன்றை ஒடுக்குவதற்கு அவசியம் எனக் கருதும் எந்தப் பலத்தையும் பயன்படுத்துவதற்குப் போலீசுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதையும் அபிம்  கடுமையாகக் கருதுகிறது. போலீஸ் கரங்களில் அதிகாரங்கள் குவிக்கப்படுவதாகவும் அது எண்ணுகிறது.”

“நாங்கள் அந்த இரண்டு விதிமுறைகள் பற்றியும் மிகவும் கவலைப்படுகிறோம். போலீசாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தவும் வரம்புக்குள் வைத்திருக்கவும் தெளிவான வழிமுறைகள் இல்லாத சூழ்நிலையில் பொதுக் கூட்டத்தை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் போலீசாருக்கு கொடுக்கப்படும் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள் நிறைய உள்ளன,”  என அமிடியின் அறிக்கை குறிப்பிட்டது.

பொதுக் கூட்டங்களுக்கு 30 நாட்கள் முன்னதாகவே அறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன என்றும்  தவறான புரிந்துணர்வுகளைத் தவிர்ப்பதற்கு வழிபாட்டு மய்யங்களில் பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அந்த மசோதா ஏன் தடை விதிக்கிறது என்றும் அரசாங்கம் விளக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் மற்ற அமைப்புக்களுடன் அபிமும் இணைந்து கொண்டது.