பஹ்ரைன் நாட்டில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் சிறை

துபாய், வளைகுடா நாடான பஹ்ரைனில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடக்கிறது. அங்கு மன்னராட்சியை ஒழித்து விட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை கொண்ட ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவினர் போராட்டம் நடத்தினர்.

அந்த போராட்டத்தை ராணுவம் ஒடுக்கியது. அதைத் தொடர்ந்து அங்கு குழப்பமான நிலை நீடித்து வருகிறது.

எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிரானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு தடை செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்று, அல் வெபாக் இயக்கம். இது ஷியா பிரிவினரின் இயக்கம் ஆகும். இதன் தலைவராக இருப்பவர், ஷேக் அலி சல்மான்.

இவர், பஹ்ரைன் அரசை வீழ்த்துவதற்காக, கத்தார் நாட்டுக்காக சொந்த நாட்டிலேயே உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

பஹ்ரைன் நாட்டுக்கும், கத்தார் நாட்டுக்கும் இடையே பகைமை நிலவி வருகிறது.

பஹ்ரைன் நாடு, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் சேர்ந்து கொண்டு, கத்தார் நாட்டுடனான எல்லா உறவுகளையும் கடந்த ஆண்டு முறித்துக்கொண்டு விட்டது.

இந்த நிலையில்தான் கத்தார் நாட்டுக்காக ஷேக் அலி சல்மான் உளவு வேலை பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது அங்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்றம், அவர் மீதான உளவு குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என கூறி கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் அப்பீல் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை விசாரித்த அப்பீல் கோர்ட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்ய முடியும்.

ஷேக் அலி சல்மான், மன்னராட்சிக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டிவிட்டதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இந்த நிலையில் இப்போது ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைனில் வரும் 24–ந் தேதி பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து ஷேக் அலி சல்மான் இயக்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

-dailythanthi.com