இரான் பொருளாதாரத் தடைகள்: அமெரிக்காவுக்கு சவால் விடும் ரூஹானி

இரானின் எண்ணெய் வணிகத்தை கடுமையாக தாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன.

இரான் பொருளாதாரத்தை இலக்கு வைத்து நாட்டின் முக்கிய துறைகள் மீது அமெரிக்க மீண்டும் விதித்துள்ள தடைகளை “தகர்ப்பதாக” இரான் அதிபர் ஹசன் ரூஹானி சவால் விடுத்துள்ளார்.

இரானுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக 2015 அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் விலக்கிக் கொண்ட அனைத்து தடைகளையும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் மீண்டும் அறிவித்துள்ளது.

இத்தடைகளால் இரானின் எண்ணெய் ஏற்றுமதி, கப்பல் மற்றும் வங்கித்துறைகள் பாதிக்கப்படும். அதோடு, எண்ணெய் வளம் அதிகமான இந்த நாடு, பிற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதிலும் சிக்கல் ஏற்படும்.

ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களுக்கு பிறகும், இரான் எண்ணெய் வர்த்தகத்தைத் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி உறுதியாக பதிலளித்துள்ளார்.

ரூஹானி

பொருளாதார அதிகாரிகளுடன் பேசிய ரூஹானி, “இந்தத் தடைகளை பெருமையுடன் தகர்ப்போம்” என்று தெரிவித்தார்.

இரானுடனான அணுசக்தி உடன்படிக்கையில் தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் உள்பட பிற நாடுகள், இத்தடைகளை மீறி வணிகம் செய்யும் என்று சொன்னாலும், ஆனால் அது எந்த அளவு சாத்தியமாகும் என்ற சந்தேகங்களும் எழுகின்றன.

“அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக பின்வாங்கி வரும் சூழ்நிலையில், இரான் மீது புதிய வகையில் அமெரிக்கா தொடுத்துள்ள இந்த தாக்குதல் வெற்றி பெறாது என்பதில் துளியும் சந்தேகம் இல்லை,” என்று கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் இரானின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் தனது எண்ணெய் ஏற்றுமதியை நம்பியே உள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதன் பொருளாதாரம் சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆனால், இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான தங்களது ஆதரவு தொடருமென்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா இரான் மீது விதித்துள்ள தடையை மீறி அதனுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை மற்றொரு தடையின் மூலம் தன்னுடன் வர்த்தகம் மேற்கொள்வதை கடுமையாக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அமெரிக்கா இரான் மீது தடைவிதிப்பதற்கான காரணமென்ன?

இரானின் அணுசக்தி திட்டங்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்ததை அந்நாடு ஏற்றுக்கொண்டதையடுத்து, அதற்கு கைமாறாக இரான் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டு எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி விலக்கிக்கொண்டன.

இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த உடன்படிக்கையை “கொடூரமான ஒப்பந்தம்” என்று விமர்சித்ததுடன் அமெரிக்கா அதிலிருந்து வெளியேறுவதாகவும் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அடுத்தடுத்து தடை விதிக்கும் அமெரிக்கா - தாங்குமா இரான்?

அதன் விளைவாக 2016ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மற்ற நாடுகளினால் அறிவிக்கப்பட்ட பல்வேறு விதமான தடைகள் தற்போது ஒருதலைப்பட்சமாக அமெரிக்காவினால் விதிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகள் உள்பட மற்ற பல நாடுகள் இரான் அணுசக்தி தொடர்பான தனது வாக்குறுதியின்படி செயல்பட்டு வருவதாக கருதுவதுடன், அமெரிக்காவைப் பின்பற்றப்போவதில்லை என்பதில் தெளிவாக உள்ளன.

உலக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அமெரிக்கா, இரான் மீதான தடைகளை மீண்டும் அமல்படுத்தப்போவதாக அறிவித்தவுடனேயே அந்நாட்டில் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனங்கள் இரானைவிட்டு விட்டு வெளியேறப் தொடங்கியுள்ளதால் கச்சா எண்ணெயின் ஏற்றுமதி குறைந்த வண்ணம் வருகிறது.

அமெரிக்காவின் தடைகள் எப்படி அமல்படுத்தப்படும்?

அமெரிக்கா விதித்துள்ள இந்த புதிய தடைகள் அனைத்தும் இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்களை பாதிக்காது.

ஆனால், இரண்டாவது கட்டமாக விதிக்கப்பட்டுள்ள தடைகளின்படி, இரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஏதாவதொரு நிறுவனத்துடன் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமொன்று வர்த்தகத்தில் ஈடுபட்டால் அது பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

திங்கட்கிழமையன்று இரானின் எண்ணெய் வணிகம் மட்டுமல்லாது அதன் வங்கித்துறை மீதான தடைகளும் அமலுக்கு வருகின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் இரானின் தங்கம், உலோகம், வாகன உற்பத்தி போன்ற பல்வேறு துறைகளின் மீது தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து தடை விதிக்கும் அமெரிக்கா - தாங்குமா இரான்?

ஆனால், தனது நட்பு நாடுகளான இந்தியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் சில கட்டுப்பாடுகளுடன் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துகொள்வதற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

இரான் தாங்குமா?

இரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாத ஐரோப்பிய நாடுகள் இரானுடனான வணிகம் சார்ந்த பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு எஸ்.பி.வி (Special Purpose Vehicle) மூலம் புதிய நேரடி பணப்பரிமாற்ற முறையை கடைபிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளன.

அமெரிக்காவின் தயவில்லாமல் இரானுக்கு பணம் செலுத்தும் திட்டத்தை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தாலும் கூட, அந்நாட்டுடன் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிறுவனங்கள் வழக்கத்தைவிட அதிக அளவு பணத்தை செலவழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின் எஸ்.பி.வி பணப்பரிமாற்ற திட்டத்தின் வழியே வர்த்தகத்தை மேற்கொண்டாலும் பல நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாவது கட்ட தடையில் சிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

“இரானின் பொருளாதாரம் நேரடியாக அமெரிக்க நிதிய முறைமையில் இல்லை. ஆனாலும், இரானில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் அமெரிக்காவை சேர்ந்தவையாகவோ அல்லது அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுபவையாகவோ உள்ளதால் அந்நிறுவனங்கள் பிரச்சனையில் சிக்குவதற்காக வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது” என்று கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் கூறுகிறார்.

மிகப் பெரிய நிறுவனங்களை காட்டிலும் சிறு, குறு நிறுவனங்கள் எஸ்.பி.வி பணப்பரிமாற்ற முறையை கடைபிடிக்கும் என்று கருதுவதாக அவர் கூறுகிறார். எஸ்.பி.வி பணப்பரிமாற்ற முறையில் பணத்திற்கு ஈடாக ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பலவிதமான பொருட்களை இரான் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தடை விதிகளின்படி பிரச்சனையில் சிக்குமென்று ரீட் ஸ்மித் என்ற சர்வதேச சட்ட ஆலோசனை நிறுவனத்தின் தலைவரான லெய்க் ஹான்சன் கூறுகிறார்.

தற்காலிக சமரசம்?

அடுத்தடுத்து தடை விதிக்கும் அமெரிக்கா - தாங்குமா இரான்?

இரான் தனது எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்யத்திற்கு கொண்டுவர வேண்டுமென்று அமெரிக்கா வலியுறுத்தினாலும், அது நடக்கும்பட்சத்தில் உலகமெங்கும் வாகன எரிபொருளின் விலையில் பெரும் தாக்கம் இருக்குமென்பதால் தனது அழுத்தத்தை அமெரிக்கா தளர்த்திக்கொள்ள வாய்ப்பிருப்பதாக பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஸ்காட் லூகாஸ் கூறுகிறார்.

கடைசியாக 2010 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இரானின் எண்ணெய் வணிகத்தின் மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டிருந்தபோது அதன் ஏற்றுமதி அதிகபட்சமாக பாதியாக குறைந்தது.

அதேபோன்று, இந்த முறையும் இரானின் எண்ணெய் வணிகம் பாதிக்கப்படுமென்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாலும், இரான் மற்றும் அதன் வர்த்தக கூட்டாளிகள் தனது வணிகத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சிப்பார்கள்.

“இதுபோன்ற பல்வேறுபட்ட தடைகளை இரான் ஏற்கனவே கண்டும், சமாளித்து உள்ளதென்பதால் இந்த தடைகள் எவ்வளவு வேதனையை அளிக்கக்கூடியது என்ற மனநிலையில் இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச உறவுகள் பிரிவின் மூத்த அதிகாரியான எல்லி கூறுகிறார்.

இதற்கு முன்னர் பல முறை விதிக்கப்பட்டுள்ள தடைகளின் மூலம் பெற்ற அனுபவத்தை முதலாக கொண்டு தனது எண்ணெய் வணிகத்தை மேற்கொள்வதற்குரிய மாற்று வழிகளை கண்டுபிடிக்கும் நிலைக்கு இரானியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களின் முதலீடுகள் குறைந்துள்ளதால் அதன் மூலம் இழந்ததை சீனா, ரஷ்யா உடன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தி ஈடுகட்டுவதற்கு இரான் யோசிக்கும். -BBC_Tamil