அமைதியாகக் கூடுதல் தொடர்பில் நிலவும் குழப்பத்தைத் தீர்க்க நஜிப் விளக்கம்

அமைதிப்பேரணி மசோதா கொடூரமானது என்று கூறப்படுவதை மறுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எல்லாரும் குறைகூறுவதைப்போல் அல்லாமல் முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுக் கூட்டங்களைக் குறுகிய காலத்தில்கூட நடத்த முடியும் என்றார்.

“அமைதிக்கான கூடுதல் மசோதா இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட இடங்களில் ஒன்றுகூடுவதாக இருந்தால் போலீசிடம் தெரிவித்து விட்டால் போதும், அடுத்து ஒரு சில நாள்களிலேயே கூட்டத்தை நடத்தலாம்.

“வரையறுக்கபடாத இடங்களில் நடத்துவதாக இருந்தால்தான் 10-நாள்களுக்கு முன்னால் அறிவிக்கை கொடுக்க வேண்டும். அப்போதுதான் கூட்டம் நடத்தப்படும் இடங்களில் உள்ளவர்களின் கருத்தறிய வசதியாக இருக்கும்”, இன்று கோலாலம்பூரில் செய்தியாளர் கூட்டமொன்றில் பிரதமர் பேசினார்.

“வரைய்றுக்கப்பட்ட இடங்களில் எந்த நேரத்திலும் ஒன்றுகூடலாம்…ஒன்றுகூடல் பற்றி போலீசுக்குத் தெரிவித்துவிட்டால் போதுமானது. 24மணி நேரத்தில்கூட அதை நீங்கள் செய்யலாம்.”

நடப்பில் உள்ள சட்டத்துடன் ஒப்பிட்டால் இது ஒரு பெரிய மாற்றம் என்றாரவர்.

பர்மாவில் உள்ள சட்டங்களைவிட இது கொடியது என்று கூறப்படுவதையும் அவர் நிராகரித்தார். மாற்றரசுக் கட்சியினர் அப்படியெல்லாம் சொல்லி மக்களைக் குழப்பப் பார்க்கிறார்கள் என்றாரவர்.

“மக்கள் எங்கெங்கு ஒன்றுகூடலாம் என்பதை வரையறுப்போம். அவைதாம் வரையறுக்கப்பட்ட பகுதிகள் என்ப்படும். அவை பொதுமக்கள் நலனுக்கு இடையூறாக இருக்க மாட்டா. அவை, விளையாட்டரங்குகள், வெட்ட வெளிகள் போன்றவை.

“தெரு ஆர்ப்பாட்டத்துக்கு இடமில்லை”

தெரு ஆர்ப்பாட்டங்களுக்கும் இவ்விதிகள் பொருந்துமா என்று வினவியதற்கு அதற்கு இடமில்லை என்று நஜிப் கூறினார்.

“தெரு ஆர்ப்பாட்டங்கள் கூடாது. தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்க மாட்டோம். அது திட்ட வட்டம். அது அமைதியைக் கெடுக்கும் என்பதுடன் மற்றவர்களின் பிழைப்பையும் கெடுக்கும்.”

குடிமக்கள் அமைதியாக ஒன்றுகூடி தங்கள் கருத்துகளைச் சொல்ல ஒரு தளத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்றாரவர்.

“உலகின் 12 வெவ்வேறு நாடுகளின் சட்டங்களை ஆய்ந்து நமக்குப் பொருத்தமானதும் அனைத்துலக நெறிமுறைகளுடன் ஒத்துப்போகக்கூடியதுமான ஒரு சட்டத்தை உருவாக்கி  இருக்கிறோம்”, என்று நஜிப் குறிப்பிட்டார்..