அமெரிக்க தேர்தல்: கீழவையில் தோல்வி, செனட்டில் வெற்றி, கொண்டாடும் டிரம்ப்

அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் அவை (கீழவை)யில் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், செனட் அவையில் குடியரசுக் கட்சி அதிகம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிறார் டிரம்ப்.

பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை பெற்றுள்ள ஜனநாயகக் கட்சி டிரம்பின் சட்டமியற்றும் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வலிமையை பெற்றுள்ளது.

அதே நேரத்தில் செனட் அவையை கட்டுப்படுத்தும் நிலையை டிரம்பின் குடியரசுக் கட்சி பெற்றுள்ளதால், அவரால் முக்கியமான நியமனங்களை செய்ய முடியும்.

2020 வரை டிரம்ப் மீண்டும் தேர்தலை சந்திக்கும் தேவை இருக்காது என்றபோதும், இந்த இடைக் காலத் தேர்தல் டிரம்ப்பின் செயல்பாடு மீதான வாக்கெடுப்பாக பார்க்கப்பட்டது.

அதிபர்பதவியில் இல்லாத கட்சி இடைக்காலத் தேர்தலில் ஒரு அவையில் பெரும்பான்மை பெறுவது வரலாறு காணாத போக்கு.

நான்சி பெலோசி
நான்சி பெலோசி

இடைக்காலத் தேர்தலில் டிரம்ப் செனட் இடங்களைக் குறிவைத்தே அதிகம் பிரசாரம் செய்தார். அவர் ஆதரித்த செனட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்று கூறும் வாஷிங்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் அலீம் மக்பூல், குடியரசுக் கட்சி செனட்டில் பெரும்பான்மை பெற்றுள்ளது மிக முக்கியமானது என்கிறார்.

கடந்த இரண்டாண்டுகளாக தாம் செய்தவற்றுக்கு தமது ஆதரவுத் தளத்தில் ஏற்பு கிடைத்திருப்பதாக தற்போது டிரம்ப் நினைப்பார் என்றும் பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

அதே நேரம் பிரதிநிதிகள் அவையில் ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்துள்ள பெரும்பான்மை வெள்ளை மாளிகைக்கு எதிரான ஈட்டு வலிமையைக் கொடுத்து ஒரு சமநிலையைப் பேண உதவும் என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் அவைத் தலைவராக வரவிருக்கும் நான்சி பெலோசி தெரிவித்தார்.

435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை கிடைப்பதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கு 23 கூடுதல் இடங்கள் தேவைப்பட்டன. அதற்கும் மேலேயே அவர்கள் பெற்றுள்ளனர். இப்போது அவர்களால் டிரம்ப்பின் பண விவகாரங்கள் குறித்தும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது குறித்த குற்றச்சாட்டு குறித்தும் ஜனநாயகக் கட்சியினரால் தற்போது விசாரிக்க முடியும்.

ஆனால், அப்படி விசாரணை நடத்தி மக்களின் வரிப்பணத்தை அவர்கள் வீணடித்தால், முக்கிய ஆவணங்களை சட்டவிரோதமாக கசியவிட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தாங்களும் செனட்டில் விசாரணை நடத்தமுடியும். இருவரும் இந்த விளையாட்டை விளையாடலாம் என்று தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் டிரம்ப். -BBC_Tamil