அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது. அப்போது 200 பேர் பாரில் இருந்ததாகத் தெரிகிறது.
இதில் அதிகாரி ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். புதன்கிழமை உள்ளூர் நேரப்படி 23.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்தது.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆட்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதைக் காட்டு காணொளி ஒன்று ஒளிபரப்பாகியுள்ளது. அதிகாரிகள் வந்தபோது துப்பாக்கிச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும் வென்ட்சுரா கவுண்டி ஷெரீஃபின் செய்தித் தொடர்பாளர் எரிக் பஸ்சௌவ் தெரிவித்தார். சம்பவம் நடந்தவுடன் அங்கு வந்த ஷெரீஃபின் செர்ஜன்ட் ரான் ஹீலஸ் பல முறை சுடப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் அறிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறவிருந்தார் அவர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள், துப்பாக்கியோடு புகை கக்கும் கையெறி குண்டுகளை பயன்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.டஜன் கணக்கான முறை துப்பாக்கி சுடப்பட்டதாகவும், அங்கு பீதி நிலவியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். -BBC_Tamil