குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான அதிபரின் தடையை மீறும் நபர்களுக்கு புகலிடம் மறுக்க இயலும்.
தேசிய நலனை கருத்தில் கொண்டு அதிபர் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தலாம் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
அதிபர் டொனால்ட் டிரம்பின் 2018 அமெரிக்க இடைக்கால தேர்தல் பிரச்சாரத்தில் குடியேற்றம் முக்கிய கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமெரிக்காவில் உள்ள நாடுகளில் இருந்து தங்களின் வடக்கு எல்லையான மெக்ஸிகோ வழியாக கேரவன் வாகனங்களில் அமெரிக்காவுக்குள் நுழைபவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ள டிரம்ப், அவர்களை தடுத்து நிறுத்த அமெரிக்க துருப்புக்களை நாட்டின் எல்லைக்கு செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.
- அமெரிக்க குடியேறிகள் பிரச்சனை: 52 இந்தியர்களின் நிலை என்ன?
- 2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா
- குடியேறிகள் பிரச்சனை: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்
இவ்வாறு அடிக்கடி ஆயிரக்கணக்கில் குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை, படையெடுப்பு என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.
புதன்கிழமையன்று பதவி விலகிய அட்டர்னி ஜெனரலான (அரசு முதன்மை வழக்கறிஞர்) ஜெஃப் செஷன்ஸுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக அட்டர்னி ஜெனரலான மேத்யூ விடேகர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் கிறிஸ்டீன் நீல்சன் ஆகிய இருவரும் வியாழக்கிழமையன்று இடைக்கால இறுதி விதி என்ற புதிய விதியை அறிவித்துள்ளனர்.
நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி அமெரிக்காவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டவர்கள் மீது தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் நுழைவை தடுக்கும் நடவடிக்கைளை எடுக்க அதிபருக்கு அதிகாரமுள்ளதாக இவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழைபவர்கள் மீது அதிபர் இடைநிறுத்தம் அல்லது தடுத்து நிறுத்தும் ஆணையை வெளியிட்டால் அவர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாது.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தில் குடியேறிகள் தொடர்பான பிரச்சனையில் அதிகரித்து வரும் கண்டனங்களை மீறி அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழையும் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை தனித்தனியாக பிரித்து டிரம்ப் புதிய கொள்கையை அறிமுகம் செய்தார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் குடும்பங்களில் பெற்றோர் கைது செய்யப்பட்டால் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியான இடத்தில் வைக்கப்படுவார்கள் என்று டிரம்ப் அப்போது தெரிவித்தார்.
ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவுக்கு வரும் குடியேறிகள், அமெரிக்காவுக்கு அழுகல் போல பாதிப்பு உண்டாக்குவர் என முன்னர் டிரம்ப் தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. -BBC_Tamil