உலகளவில் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதால் உலகிலுள்ள பாதி நாடுகள் தங்களது சராசரி மக்கள் தொகையை இழக்கும் அபாயத்தில் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் “மிகப் பெரிய ஆச்சர்யத்தை” அளிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக சமூகத்தில் “பேரக்குழந்தைகளை விட அதிகளவிலான தாத்தா, பாட்டிகள்” இருக்கும் சூழ்நிலை உருவாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
வீழ்ச்சி எவ்வளவு பெரியது?
உலகிலுள்ள அனைத்து நாடுகளின் 1950 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் லான்செட் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டுகளில் பெண்களுக்கு சராசரியாக 4.7 குழந்தைகள் இருந்தனர். ஆனால், கடந்த ஆண்டு பெண்களின் கருவுறுதல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து 2.4 குழந்தைகள் என்ற அளவை அடைந்துள்ளது.
- கருவில் உள்ள சிசுவை மாசுபாட்டில் இருந்து காப்பது எப்படி?
- சோதனைக் குழாயில் வளர்க்கப்படும் அழிவின் விளிம்பில் உள்ள மரங்கள்
இந்த விகிதாச்சாரத்தில் ஒவ்வொரு நாட்டுக்குமிடையே அதிகளவிலான வேறுபாடு நிலவுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலுள்ள பெண்கள் தங்களது வாழ்நாளில் சராசரியாக 7.1 குழந்தைகளை பெற்றெடுக்கும் சூழ்நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள சைப்ரஸில் பெண்கள் ஒரேயொரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்கின்றனர்.
பிரிட்டனை பொறுத்தவரை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை போன்றே 1.7 என்ற விகிதாச்சாரமே காணப்படுகிறது.
ஒரு பெண் தனது வாழ்நாளில் பெற்றெடுக்கும் குழந்தைகளின் சராசரி எண்ணிக்கையே மொத்த கருவுறுதல் விகிதமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
ஒரு நாட்டிலுள்ள பெண்களின் சராசரி கருவுறுதல் விகிதம் எப்போதெல்லாம் 2.1 என்றஅளவை விட குறைகிறதோ அப்போது அந்நாட்டின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்படுவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. குழந்தைகள் மரணம் அதிகமுள்ள நாடுகளிலேயே இந்த பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சியின் தொடக்க ஆண்டான 1950ல் இதுபோன்ற விகிதத்தை உலகிலுள்ள ஒரு நாடு கூட கொண்டிருக்கவில்லை. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இந்த ஆராய்ச்சியின் முதன்மை எழுத்தாளருமான கிறிஸ்டோபர் முர்ரே பிபிசியிடம் பேசும்போது, “உலகிலுள்ள பாதி நாடுகள் சராசரியை விட குறைந்த கருவுறுதல் விகிதத்தை கொண்டுள்ள மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. இந்த எண்ணிக்கையில் திடீர் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்றால் அந்த நாடுகளின் மக்கள் தொகை வீழ்ச்சியடைய துவங்கும்” என்று அவர் கூறுகிறார்.
எந்தெந்த நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன?
பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளில் பெண்களின் கருவுறுதல் விகிதம் மிகவும் சரிவடைந்துள்ளது.
தற்போது பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ள அனைத்து நாடுகளின் மக்கள் தொகையிலும் உடனடி மாற்றம் நிகழ்ந்து வருவதாக கூறவியலாது. ஏனெனில், மக்கள் தொகை மாற்றம் என்பது கருவுறுதல் விகிதம் மட்டுமல்லாது இறப்பு விகிதம், குடியேற்றம் போன்ற கூறுகளை பொறுத்து மாறுபடும்.
- ‘பூச்சிகளை அழிக்காதீர்கள்; நேசியுங்கள்’
- அதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புது சிக்கல்
தற்போது கருவுறுதல் விகிதம் குறைந்துள்ள நாடுகளில் இப்பிரச்னையின் வீரியம் வெளிப்படுவதற்கு இன்னும் ஒரு தலைமுறை கூட ஆகலாம். “மக்கள் தொகை வீழ்ச்சியால் பெரும்பாலான உலக நாடுகள் பிரச்சனைகளை சந்திக்கும் சவாலான காலத்தை நோக்கிய மாற்றம் விரைவில் ஏற்படும்” என்று பேராசிரியர் முர்ரே மேலும் கூறுகிறார்.
தற்போதைய சூழ்நிலையில் உலகில் பாதி நாடுகள் சராசரி கருவுறுதல் விகிதத்தை கொண்டுள்ளன என்றாலும், அவை பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய தொடங்கினால் அந்நாடுகளிலும் கருவுறுதல் விகிதம் குறையும்.
கருவுறுதல் விகிதம் குறைவதற்கான காரணம் என்ன?
கருவுறுதல் விகிதம் குறைவு என்றவுடனேயே மனதில் தோன்றும் விந்தணு எண்ணிக்கை குறைவு அல்லது மற்ற பொதுவான விடயங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
பெண்களின் கருவுறுதல் விகிதாச்சார குறைவுக்கு கீழ்க்காணும் மூன்று காரணங்கள் முன்வைக்கப்படுகிறது.
- சில குழந்தைகள் பிறந்தவுடனேயே இறந்துவிடுவதால் விகிதாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
- கருத்தடை முறைகள் எளிதில் அணுகும் வகையில் இருத்தல்
- கல்வியிலும், அலுவலக வேலைகளிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வருவது
எந்த வகையில் தாக்கம் இருக்கும்?
குடியேற்றம் நடைபெறவில்லையென்றால், கருவுறுதல் விகிதம் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் பாதி நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், மக்கள் தொகையும் குறைவடையும்.
ஆக்ஸ்போடு பல்கலைக்கழகத்தில் மக்கள் தொகை குறித்து ஆய்வு செய்து வரும் நிறுவனத்தின் இயக்குனரான ஜார்ஜ் லீசன், ஒட்டுமொத்த சமூகமும் இந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொண்டால், இது மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளார்.
“மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றம் என்பது நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் தாக்கத்தை ஏற்படுகிறது. உங்களது வீட்டின் ஜன்னலிலிருந்து தெருக்களில் இருக்கும் மக்கள், வீடுகள், போக்குவரத்து நெரிசல், நுகர்வு ஆகியவற்றை காணுங்கள். அவையனைத்திலும் மக்கள் தொகையின் தாக்கம் உள்ளது” என்று பிபிசியிடம் பேசிய ஜார்ஜ் லீசன் கூறினார்.
“நாம் திட்டமிடும் அனைத்துக்கும் மக்கள் தொகைக்கும் மட்டுமே தொடர்பு இருப்பதாக கருதக்கூடாது. ஏனெனில், மக்களின் மாறிவரும் வயது கட்டமைப்பும், செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.”
- பெண்கள் ஏன் புகைப் பிடிக்கக்கூடாது? – அதிர்ச்சியளிக்கும் காரணம்
- #MeToo: புகார் செய்த பெண்கள் இப்போது என்ன நினைக்கிறார்கள்?
அதுமட்டுமின்றி, பணியிடங்களில் மக்கள் தொகையும், வயது கட்டமைப்பும் மாற்றங்களை ஏற்படுத்துமென்றும், பிரிட்டனில் அதிகபட்ச ஓய்வுப்பெறும் வயதான 68 என்பது இயலாதாத ஒன்றாக மாறுமென்றும் அவர் எண்ணுகிறார்.
குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் குடியேற்றத்தை அதிகரிப்பதற்கும், பெண்கள் இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்கும் திட்டங்களை தொடங்குவதற்கும் முயற்சிக்கலாம் என்று மற்றொரு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
“தற்போதுள்ள நிலவரங்களின்படி பார்த்தால், விரைவில் குறைந்த அளவிலான குழந்தைகளும், அதே சமயத்தில் அதிகளவிலான 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் இருக்கும் கடினமான சூழல் உண்டாகலாம்” என்று பேராசிரியர் முர்ரே குறிப்பிடுகிறார்.
“மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை ஏற்கனவே சந்தித்து வரும் ஜப்பானுக்கு இதுகுறித்து நன்றாக தெரியுமென்று நம்புகிறேன். அதேவேளையில், குறைந்த கருவுறுதல் விகித்தை கொண்ட மேற்கத்திய நாடுகளில் இந்த பிரச்சனை குடியேற்றத்தின் மூலம் சரிகட்டப்படுவதால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நான் கருதவில்லை” என்று அவர் மேலும் கூறுகிறார்.
“ஆனால், உலகளவில் குறைந்த கருவுறுதல் வீதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளும் தங்களது பிரச்சனையை குடியேற்றத்தின் மூலம் சரிசெய்ய முடியாது.
சீனாவின் நிலை என்ன?
1950ஆம் ஆண்டிலிருந்து மிகப் பெரிய மக்கள் தொகை (50 கோடியிலிருந்து 1.4 பில்லியன்) உயர்வை சந்தித்து வரும் சீனாவிலும் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது.
சீனாவின் சராசரி கருவுறுதல் விகிதம் கடந்த ஆண்டு 1.5 என்ற அளவை அடைந்துள்ளது.
அபரிதமாக உயர்ந்து வந்த தனது மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் சீனா அறிமுகப்படுத்திய ஒரு குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க அனுமதிக்கும் திட்டம் சமீபத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது.
பிறக்கும் அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைத்து சராசரி வயது வரை வாழ்வதில்லை என்பதாலும், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கின்றன என்பதாலும் வளர்ந்த நாடுகள் குறைந்தது சராசரி கருவுறுதல் விகிதத்தையாவது கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், சீனாவில் அதிர்ச்சியளிக்கும் வகையில் “பாலினத்தை அறிந்தவுடன் கருவை கலைப்பது, பெண் சிசுக்கொலை” போன்றவை அதிகளவில் நடைபெறுவதால் அந்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு 100 பெண் குழந்தைகளுக்கும் 117 ஆண் குழந்தைகள் பிறக்கிறார்கள்.
அதாவது, சீனா நிலையான மக்கள் தொகையை கொண்டிருப்பதற்கு இன்னும் நிறைய குழந்தைகள் பிறக்க வேண்டிய அவசியம் உள்ளது.
-BBC_Tamil