முதல் உலகப் போரின் இறுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த நாளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உலகத் தலைவர்களிடம், தேசியவாதத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார் பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மக்ரோங்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த இந்த நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பேசிய மக்ரோங், தேசியவாதம் துரோகம் செய்ததாக குறிப்பிட்டார்.
“எங்கள் நலன் முதலில். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதே” என்று சொல்வதன் மூலம், ஒரு நாடு கொண்டிருக்கும் அற விழுமியங்கள் நிராகரிக்கப்படுகின்றன என்றார் மக்ரோங்.
1914 முதல் 1918 வரை நடந்த முதல் உலகப் போரின் முடிவில் போர் நிறுத்தம் ஏற்பட்டதைக் குறிக்கும் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. இந்தப் போரில் 97 லட்சம் சிப்பாய்கள், 1 கோடி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
பல உலகத் தலைவர்கள் இந்த இருதரப்பு சந்திப்புகளையும் இந்த நிகழ்வை ஒட்டி மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வை ஒட்டி, நடந்த விருந்து ஏற்பாட்டினை செய்தவர்கள், டிரம்பும், புதினும் பக்கத்தில் அமராதவாறு இருக்கைகளை மாற்றி அமைத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
பெயர் தெரியாத ஒரு பிரான்ஸ் சிப்பாயின் கல்லறைக்கு கொட்டும் மழையில் குடைபிடித்துக்கொண்டு மக்ரோங்கும், பல தலைவர்களும் சென்றனர். அந்த நேரத்தில் நகரின் வீதிகளில் தேவாலய மணிகள் ஒலித்தன.
அப்போது தமது தாம் ஆற்றிய 20 நிமிட உரையில் அமைதிக்காகப் போராடுமாறு மக்ரோங் தமது சக உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.
வன்முறை, ஆதிக்கம் ஆகிய தவறுகளுக்காக வருங்கால தலைமுறை நம்மை பொறுப்பாளியாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். -BBC_Tamil