2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்துள்ள கருத்துக்களை மக்களுடைய எண்ணங்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார்.
அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என வழக்குரைஞர் மன்றம் வழங்கியுள்ள யோசனை அவசியமற்றது என அவர் கூறியதாக சின் சியூ நாளேடு வெளியிட்ட செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
“அரசாங்கம் மக்கள் பேராளர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பிஎன்-னுக்கு 140 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எங்களை ஆதரிக்கும் சில சுயேச்சை உறுப்பினர்களும் இருக்கின்றனர்.”
“வழக்குரைஞர் மன்றத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் பாடாங் ரெங்காஸ் தொகுதியில் எனக்கு எதிராகப் போட்டியிடுமாறு நான் லிம்-மைக் கேட்டுக் கொள்கிறேன்,” என்றார் நஸ்ரி.
அரசாங்கம் அந்த மசோதா மீது கருத்துக்களைப் பெற நாடாளுமன்றத் தேர்வுக் குழு பொது விசாரணை நடத்த வேண்டும் என்று லிம் யோசனை கூறியிருந்தார். அரசாங்கம் “நேர்மையற்ற அவசரத்துடன்” அந்த மசோதாவை நிறைவேற்ற முயலுவதாகவும் அவர் குறை கூறியிருந்தார்.
திருத்தங்களுக்கு இன்னும் இடம் இருக்கிறது
அந்த உத்தேச சட்டம் அனைத்துலகத் தரங்களுக்கு இணையாக இல்லை என்றும் ஆட்சேபக் குறிப்பு ஒன்றை வழங்குவதற்காக நாளை நாடாளுமன்றத்தை நோக்கி வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர் என்றும் லிம் அறிவித்தார்.
நாளை மக்களவையில் அந்த மசோதா மீதான விவாதங்கள் தொடங்கியதும் திருத்தங்கள் செய்வதற்கு நிறைய இடம் இருப்பதாகவும் நஸ்ரி, சின் சியூ-விடம் கூறினார்.
ஆகவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எட்டுத் திருத்தங்களுக்கு மேலாக இன்னும் அதிகமான திருத்தங்கள் கொண்டு வரப்படலாம் என்றார் அவர்.
என்றாலும் அந்த நடவடிக்கையை அரசாங்கத்தின் “தோல்வியாக” கருதக் கூடாது. மாறாக பொது மக்களுடைய கருத்துக்களை அரசாங்கம் ஏற்கிறது என்பதை அது நிரூபிக்கிறது.
அந்த மசோதாவைத் தற்காத்துப் பேசிய நஸ்ரி, கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் நிகழ்ந்த கலவரங்களைப் போன்ற சூழ்நிலைகளைத் தவிர்க்க அது அவசியம் என்றார்.
தொழிற்சங்கங்களையோ அல்லது தேர்தல் பிரச்சாரத்தையோ அந்த மசோதா பாதிக்காது என அவர் வலியுறுத்தினார்.