உயிர்களைக் காத்த கருப்பினக் கதாநாயகனை சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீஸ்

அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், புறநகர்ப் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணிபுரிந்துவந்த கருப்பினத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு பணியாளர் போலீஸாரால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

வன்முறையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரியை அவர் துரத்திப் பிடித்து மக்கள் உயிரைப் பாதுகாத்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

காவல் கனவு

மதுபானக் கூடத்தில் ஜெமல் ராபர்சன் பாதுகாப்பு பணியாளாராக பணிபுரிந்துவந்தார். உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு அந்தப் பகுதியில் ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு வன்செயலில் ஈடுபட்டார். அவரை துரத்திப் பிடித்த ஜெமல், அவரை துப்பாக்கி முனையில் முட்டிப்போட வைத்துள்ளார்.

பின் அந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை எதையும் விசாரிக்காமல் கறுப்பினத்தவரான ராபர்சனை நோக்கி சுட்டுள்ளது.

இசைக் கலைஞரான ராபர்சன்னுக்கு காவல் துறையில் சேர வேண்டுமென்ற கனவு இருந்தது.

ராபர்சன் பல தேவாலயங்களில் இசைக் கலைஞராக பணியாற்றி உள்ளார்.

எப்படி நடந்தது?

மாதுபானக் கடையில் சண்டை ஏற்பட்டது. இதில் நான்கு பேர் சுடப்பட்டனர். இதனை தொடர்ந்து காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்கிறார் குக் கண்ட்ரி ஷெரீப் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் சோஃபியா அன்சாரி.

உயிரைக் காத்த கதாநாயகனை சுட்டுக் கொன்ற போலீஸ்

ராபர்சன் அங்கு காவலராக பணியாற்றுகிறார். துப்பாக்கிக்கான உரிமத்தையும் வைத்திருக்கிறார். மதுபானக்கடையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை துரத்தி பிடித்தார் என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த ஆடம் ஹாரிஸ்.

“போலீஸாருக்கு தகவல் அளித்துவிட்டு பிடிபட்டவருடன் காத்திருந்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்த ராபர்சனை குற்றவாளி என தவறுதலாக நினைத்துவிட்டனர் என நினைக்கிறேன். அவர்கள் ராபர்சனை நோக்கி சுட்டனர்.”என்கிறார்.

அவர் ஒரு பாதுகாப்பு அலுவலர் என அங்கு சூழ்ந்திருந்த அனைவரும் கத்தினோம். கருப்பினத்தவர் கையில் துப்பாக்கி வைத்திருப்பதை பார்த்துவிட்டு போலீஸார் சுட்டனர் என்கிறார் ஹாரிஸ் .

தவறான தகவல்

அந்தப் பகுதி போலீஸ் உயரதிகாரி, “மதுபான கடையின் உள்ளே பலர் துப்பாக்கி முனையில் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றனர்” என எங்களுக்கு தகவல் வந்தது.

ராபர்சன் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வினை என்ன?

ராபர்சன் இறுதிச் சடங்கிற்காக 12,000 டாலர்கள் நிதி திரட்டுப்பட்டுள்ளது.

இந்த நிதியை திரட்டிய கோஃபண்ட்மீ பக்கத்தில், “ஜெமல் ஒரு கூடைப் பந்து வீரர், இசைக் கலைஞர், இறைவனை நேசித்தவர். ஆனால், அறிவற்ற வன்முறையிலிருந்து பலரை காக்கும் முயற்சியில் மரணித்துள்ளார்.” என குறிப்பிட்டுள்ளது.

மக்கள் ராபர்சன்னை கதாநாயகனாக கொண்டாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் நடக்கும் போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கருப்பினத்தவரை குறிவைத்து நடப்பவற்றின் எண்ணிக்கை அதிக விகிதாரசாரத்தில் இருப்பதாக எஃப்.பி.ஐ. தரவுகள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil