2,000 றோகிஞ்சாக்கள் மியான்மார் திரும்புவர்

மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, பல இலட்சக்கணக்கான றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவர்களில் 2,000க்கும் மேற்பட்டோரை, மீண்டும் மியான்மாரில் ஏற்க, மியான்மார் அரசாங்கம் தயாராகி வருகிறது. இவர்கள், எதிர்வரும் வியாழக்கிழமை, மியான்மாருக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

றோகிஞ்சா அகதிகளை, மீண்டும் மியான்மாரில் குடியமர்த்துவதற்காக, மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக, முதற்தொகுதியாக 5,000 பேர், மியான்மாரில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். அவர்களில் சுமார் 2,000 பேரே இவர்களாவர்.

ஆனால், இவ்வாறு செல்வதற்காக பங்களாதேஷால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் உள்ளோரில் 20க்கும் மேற்பட்டோர், தாங்கள் தப்பி வந்த, வடக்கு ராக்கைன் பகுதியில் மீளக்குடியமர்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதற்குப் பதில் வழங்கியுள்ள பங்களாதேஷ், எவரையும் வலுக்கட்டாயமாக அனுப்பப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

மறுபக்கமாக, பங்களாதேஷிலுள்ள றோகிஞ்சா அகதிகள், மியான்மாருக்குத் திரும்புவதற்கான சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என, ஐக்கிய நாடுகளும் தெரிவிக்கிறது. அத்தோடு, மீளக்குடியமர்த்தப்படவுள்ள அகதிகள், முதலில் தாங்கள் குடியமர்த்தப்படவுள்ள இடங்களுக்குச் சென்று, அவ்விடங்களைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும், அதன் பின்னரே அவர்கள் மீளக்குடியமர வைக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

-tamilmirror.lk