ஏமன் நாட்டில் ஹவுத்திப் போராளிகளுடன் ஆவேசப் போர்: 150-க்கும் அதிகமானவர்கள் பலி..

சனா: ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரான் அரசின் ஆதரவுடன் அதிபர் அப்ட்-ரப்பு மன்சூர் ஹாதி தலைமையிலான சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசை கடந்த 2015-ம் ஆண்டு நிலைகுலையச் செய்த ஹவுத்தி போராளிகள் தலைநகர் சனா நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக மற்றொரு போட்டி அரசாங்கத்தை நடத்திவரும் இவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

அந்நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம் அமைந்துள்ள ஹொடெய்டா மாகாணத்தில் ஹவுத்தி போராளிகளின் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஈரான் அரசு மறைமுகமாக ஆயுத உதவிகளை அளித்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், ஹொடெய்டாவில் ஹவுத்தி போராளிகளுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் கடந்த பத்து நாட்களாக சண்டை வலுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்றிலிருந்து கடந்த 24 மணிநேரமாக நிகழ்ந்த மோதலில் 150-க்கும் அதிகமானவர்கள் இருதரப்பிலும் உயிரிழந்ததாக ஏமன் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஹொடெய்டாவின் மேற்கு கடலோரப் பகுதிக்குள் அரசு ஆதரவாளர்கள் படையை தடையின்றி நுழையவிட்ட ஹவுத்தி படையினர், திடீரென்று நாற்பரங்களிலும் சூழ்ந்து கொண்டு நடத்திய இந்த தாக்குதலில் அரசு ஆதரவுப்படை வீரர்கள் அதிகமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

-athirvu.in