வெறுப்பின் காரணமாக ஏற்படும் குற்றங்கள் 2017ஆம் ஆண்டு அமெரிக்காவில் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து கடந்த மூன்றாண்டுகளாக வெறுப்பினால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன.
2017ஆம் ஆண்டில் மட்டும் 7175 வெறுப்பு குற்றங்கள் நடந்துள்ளதாகவும், 2016ஆம் ஆண்டில் இது 6121 என்ற அளவில் இருந்ததாகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைப்புகள் தெரிவிக்கின்றன.
கருப்பினத்தவர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரகவே இவ்வகை குற்றங்கள் அதிகளவில் நடப்பதாக அந்த எஃப்.பி.ஐ அறிக்கை விவரிக்கிறது.
அதாவது 2017 ஆம் ஆண்டு, கருப்பினத்தவர்களுக்கு எதிராக 2013 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், யூதர்களுக்கு எதிராக 938 குற்றங்கள் அமெரிக்காவில் நடந்துள்ளதாகவும் விவரிக்கிறது அந்த அறிக்கை.
தற்காலிக அட்டர்னி ஜெனரலான மேத்யூ விட்டேகர் இந்த அறிக்கையை நடவடிக்கையில் இறங்குவதற்கான அறிக்கை என்று குறிப்பிடுகிறார்.
இந்த குற்றங்களை கண்டித்துள்ள அவர் அமெரிக்க மதிப்புகளை சிதைப்பதாக கூறுகிறார்.
வெறுப்பு குற்றங்கள்
குறிப்பிட்ட சில இனம், மதம், பாலினம் ஆகியவற்றுக்கு எதிரான நமது சார்புநிலையால் ஏற்படும் குற்றங்கள்தான் வெறுப்பு குற்றங்கள் என எஃப்.பி.ஐ விவரிக்கிறது.
சில இனத்திற்கு எதிரான நமது சார்பு மனபான்மைதான் 59.6 சதவிகித குற்றங்களுக்கு காரணமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
மதம் சார்ந்த காரணங்கள் 20.6 சதவிகித குற்றங்களுக்கு காரணமாக இருப்பதாகவும், பாலியல் சார்நிலை 15.8 சதவிகித குற்றங்களுக்கு காரணமாக அமைவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
2017ஆம் ஆண்டு கணக்குப்படி 5000 குற்றங்கள் நேரடியாக மனிதர்களை தாக்குவது மூலமாக நிகழ்ந்துள்ளன, 3000 குற்றங்கள் மனிதர்களின் சொத்துகளை அழிப்பதன் மூலம் நிகழ்ந்துள்ளன.
2015ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் அரபியர்கள் மீதான குற்றங்கள் வெறுப்பு குற்றங்களாக அடையாளப்படுத்தப்படவில்லை.
யூதர்கள்
யூதர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தப்படியே உள்ளன. யூதர்களுக்கு எதிரான குற்றங்கள் 2016ஆம் ஆண்டைவிட 37 சதவிகிதம் 2017ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
கடந்த மாதம், பீட்ஸ்பெர்க்கில் 11 யூதர்கள் சுட்டக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற யூதர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?
- அமெரிக்கா: யூதர்களை சுட்டுக்கொன்ற வெள்ளை ‘இனவெறி’ நபர்
- ஒற்றுமையை கற்றுத் தரும் ஓர் இஸ்ரேல் கிராமம்
- கொல்ல விரும்பியவருக்கு சிகிச்சை அளித்த செவிலி – நெகிழ்ச்சி கதை
எதிர்வினை என்ன?
இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அனைத்து குடிமை சமூக அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
அமெரிக்க இஸ்லாமிய உறவுக்கான அமைப்பு, இவை கவலை அளிப்பதாக கூறுகிறது.
“நம்மால் சிறப்பாக செயல்படமுடியும், சிறப்பாக செயல்படுவோம்” என்று இந்த குற்றங்கள் தொடர்பாக அந்த அமைப்பின் துணை இயக்குநர் சூஃபியான் கருத்து தெரிவித்துள்ளார். -BBC_Tamil