காஸா போர் நிறுத்த முடிவுக்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் ராஜிநாமா

காஸாவிலுள்ள பாலத்தீனிய தீவிரவாதிகளோடு நடத்தி வருகின்ற 2 நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு போர்நிறுத்தும் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சரவையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் லீபர்மென் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அமைச்சரவையின் இந்த நடவடிக்கை “பயங்கரவாதத்திடம் சரணடைவது” என்று இஸ்ரேல் பெய்டெய்னியு கட்சியின் தலைவரான அவிக்டோர் லீபர்மென் விமர்சித்துள்ளார்.

ஹமாஸ் குழுவோடு நீண்டகால போர்நிறுத்தத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

திங்கள்கிழமையும், செவ்வாய்கிழமையும் தீவிரவாதிகள் இஸ்ரேலை குறிவைத்து நடத்திய 460 ராக்கெட் குண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவிலுள்ள 160 இலக்குகளை குறிவைத்து இஸ்ரேலிய படைப்பிரிவுகள் தாக்குதல் நடத்தியுள்ளன.

காசா

காஸாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸூம், பிற பாலத்தீன குழுக்களும் எகிப்து மத்தியஸ்தம் செய்த போர்நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், இஸ்ரேல் அதனை ஏற்குமானால், அதனை தாங்கள் கடைபிடிப்பதாகவும் செவ்வாய்கிழமை மதியம் அறிவித்தன.

தேவைப்படும்போது மட்டுமே ராணுவ நடவடிக்கைகளை தொடர ஆணையிட்டுள்ளதாக தொடக்கத்தில் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை கூறியது.

ஆனால், தாங்கள் ஆதரவு அளிக்காத போர்நிறுத்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள பாதுகாப்பு அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக லீபர்மெனும், இன்னொரு அமைச்சரும் உறுதி செய்துள்ளனர்.

இந்த போர்நிறுத்தம் புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது, கடந்த இரவு முழுவதும் ராக்கெட்டு குண்டு தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படாததால் இஸ்ரேலின் தெற்கு பகுதியிலுள்ள பள்ளிகளும், கடைகளும் திறந்துள்ளன.

இருப்பினும், கையெறி குண்டுகளை வீசி இஸ்ரேல்-காஸா எல்லையை கடக்க முயன்ற பாலத்தீனர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது,

வரைபடம்

இந்நிலையில், பாலத்தீன ராக்கெட்டு தாக்குதல்களை சமாளிப்பதற்கு இஸ்ரேலிய அரசின் நடவடிக்கைகள் போதாது என கூறி இஸ்ரேலின் எல்லையில் வாழும் டஜன்கணக்கான சமூகங்கள் சாலைகளை தடுத்து போராட்டம் நடத்தியுள்ளன.

இந்த போர்நிறுத்தம் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு நியாயப்படுத்தியுள்ளார்.

“அவசர காலத்தில், பாதுகாப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கின்றபோது, பொதுமக்கள் எதிரிகளிடமிருந்து எப்போதும் காக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு மாறான கருத்து இருக்கவே முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

வெற்றியாக ஹமாஸ் சுட்டிக்காட்டும் இந்த போர்நிறுத்தத்தால் காஸாவில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் எதிர்ப்பு, தன்னைத்தானே பாதுகாத்து, அதன் மக்களை பாதுகாத்துள்ளது” என்று இந்த குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா தெரிவித்திருக்கிறார்.

காசாவில் இஸ்ரேலிய சிறப்பு படைப்பிரிவுகள் நடத்திய ரகசிய நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை வெளியான பின்னர் சமீபத்திய இந்த வன்முறை வெடித்தது.

இதனால் ஏற்பட்ட மோதல்களில் 7 பாலத்தீன தீவிரவாதிகளும், ஓர் இஸ்ரேலிய சிப்பாயும் கொல்லப்பட்டனர். -BBC_Tamil