அரசாங்கம் நடப்பு சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு புத்திசாலிகளாக இருக்கும் வாக்காளர்களைச் சமாளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.
“இன்றைய கால கட்டத்தில் நாம் மிகவும் புத்திசாலிகளான எதிர்த்தரப்பை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் செய்வதில் தாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்றால் உங்களைக் கேள்வி கேட்பதற்கும் அவர்கள் தயாராக இருக்கின்றனர்.”
மக்கள் ” சிறிதளவு புத்திசாலித்தனம் குறைந்தவர்களாக இருப்பது” மிகவும் சௌகரியமானது என அவர் நகைச்சுவையாகக் கூறினார். காரணம் அவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆனால் மக்களுடைய வளர்ச்சிக்கு அறிவாற்றலைக் கொண்ட மக்கள் தேவை என்றார் அவர்.
“ஆகவே நாம் நிறைய உபகாரச் சம்பளங்களைக் கொடுக்கிறோம். பல்கலைக்கழகங்களையும் கட்டுகிறோம். அடுத்து மலேசியாவில் முட்டாள்களே இருக்க மாட்டார்கள். அந்த சூழ்நிலை அரசாங்கத்துக்குத் தலைவலியைக் கொடுக்கும்.”
“நடப்பு புதிய சூழ்நிலையில் அரசாங்கத்தைப் போன்று மக்களும் கெட்டிக்காரர்கள் என்பதை அரசாங்கம் இப்போது புரிந்து கொள்ள வேண்டும்”, என கோலாலம்பூரில் கூறினார்.
டாக்டர் மகாதீர், அம்னோ பொதுப் பேரவைக்கு முந்திய அனைத்துலக கருத்தரங்கில் பேசினார். அதில் பல அந்நியப் பேராளர்களும் தூதர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மாற்று ஊடகங்கள் ஒரு பிரச்னை
முழுமையான சுதந்திரம் பிரச்னைகளைக் கொண்டு வரும் என்றாலும் அரசாங்கம் மக்களுடைய கோரிக்கைகளுக்குப் பதில் சொல்ல வேண்டும். மக்களுக்கான சுதந்திரத்திற்கு பொருத்தமான அளவை அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
“சுதந்திரத்திற்கும் வரம்பு உண்டு. ஆனால் அந்த வரம்பை நிர்ணயம் செய்வதுதான் பிரச்னை.”
இதற்கு தொடர்புத் தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டிருப்பதும் ஒரு காரணமாகும். தாம் பிரதமராக இருந்த காலத்தில் அந்தத் தொழில்நுட்பம் அவ்வளவு சவாலாக இருந்தது இல்லை என்றார் அந்த முன்னாள் பிரதமர்.
“தகவல் தொழில்நுட்பம் அனைவருக்கும் தலைவலியாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக என்னுடைய காலத்தில் இவ்வளவு நவீன மயமாக இருந்தது இல்லை. ஆனால் நடப்பு அரசாங்கம் பத்திரிக்கைகளிடமிருந்தும் தொலைக்காட்சியிடமிருந்தும் அவ்வளவு எதிர்ப்பை எதிர்நோக்கவில்லை. ஆனால் மாற்று ஊடகங்கள்தான் பிரச்னையே.”
என்றாலும் அந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது என மகாதீர் வலியுறுத்தினார்.
“மலேசியாவில் நாம் பல உருமாற்றங்களைச் செய்ய முயலுகிறோம். பொருளாதாரத்தையும் சமூகத்தையும் உருமாற்றம் செய்வதில் அரசாங்கம் வெற்றி காணும் என நான் நம்புகிறேன். அவ்வாறு செய்வதின் மூலம் இந்த நாட்டு மக்கள் நமக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பர் என்றும் நான் கருதுகிறேன்.”