காஸாவில் போரிலீடுமாறு இஸ்‌ரேலியப் பிரதமரை வலியுறுத்தினார் சல்மான்?

சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியை கொல்லப்பட்ட சம்பவத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் திட்டமொன்றாக, பலஸ்தீனத்தின் காஸாவில் ஹமாஸுடன் மோதலொன்றை ஆரம்பிக்குமாறு, இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை, சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் முயன்றாரெனக் கூறப்படுகிறது.

துருக்கி அதிகாரிகளிடமிருந்து கஷோக்ஜியின் கொலை தொடர்பாகக் கசியும் தகவல்களை எதிர்கொள்வதற்காக அமைக்கப்பட்ட அவசரகால குழுவொன்றால் பிரேரிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குள்ளேயே காஸா போரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காஸா போரின் மூலம் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடமிருந்து கவனம் பெறுவது கலைக்கப்பட்டு, இஸ்‌ரேலுக்குத் தேவையான இடங்களில் சவூதி அரேபியாவின் வகிபாகம் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவின் கவனம் திரும்பும் என, பின் சல்மானுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, துருக்கி ஆயுதங்களை வாங்குவதாக துருக்கி ஜனாதிபதி றிசெப் தயீப் ஏர்டோவானுக்கு கையூட்டளிப்பது உள்ளிட்ட முயற்சிகள் மூலம், துருக்கியை அடக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கஷோ க்ஜி கொல்லப்பட்ட சிறிது நேரத்தில், மேலதிகாரியொருவரை அலைபேசியில் அழைத்த சவூதி அரேபிய கொலைக் குழாமின் அங்கத்தவரொருவரான மஹெர் அப்துல்லாஸிஸ் முட்ரெப், நடவடிக்கை முடிந்து விட்டதென அவரது முதலாளியிடம் கூறுங்கள் எனத் தெரிவித்தாரென, நியூயோர்க் டைம்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

துருக்கி புலனாய்வு அமைப்பால் சேகரிக்கப்பட்ட, கஷோக்ஜியின் கொலை ஒலிப்பதிவு தொடர்பாக பரிட்சயமான மூவரை மேற்கோள்காட்டிய நியூயோர்க் டைம்ஸ், பெயர் குறிப்பிடப்படாதபோதும் முதலாளியென குறிப்பிடப்படுவது சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் பின் சல்மானென, ஐக்கிய அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், இதுவரையில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களில், கொலையுடன் பின் சல்மானை தொடர்புபடுத்துவதான உறுதியான ஆதாரமாக இதை ஐக்கிய அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் நோக்குகின்றனர்.

கஷோக்ஜியை இலக்கு வைக்க துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்ட 15 சவூதி அரேபியர்களில் முர்டெப் ஒருவராவார். பின் சல்மானுடனும் வழமையாக பயணிக்கும் பாதுகாப்பு அதிகாரியான முர்டெப் அலைபேசி அழைப்பில் அரேபிய மொழியிலேயே கதைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பின் சல்மானின் நெருங்கிய உதவியாளர்களிலொருவருக்கே அழைப்பெடுக்கப்பட்டதாக நம்புவதாக துருக்கிய புலனாய்வு அதிகாரிகள், ஐக்கிய அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

-tamilmirror.lk