இரான் மீது அமெரிக்கா இரண்டாம் கட்டமாக தடைகள் விதித்ததைத் தொடர்ந்து, இரானுடன் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களும் தாங்கள் விலகுவதாக அறிவிக்க, சில வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
அணுசக்தி உடன்படிக்கை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் தடைகளால், இரானின் பிரச்சனைகள் முடிவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது.
வெவ்வேறு துறைகளை சேர்ந்த பல நிறுவனங்கள் இரானிடம் இருந்து விலக முடிவு செய்துள்ளன.
அதில் சில நிறுவனங்கள் இந்த பிராந்தியத்தில் தங்களது தொழிலை புதிதாக தொடங்கியவை. ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் இருக்கும் சில நிறுவனங்கள், இரானில் விரைவில் தங்கள் வர்த்தகத்தை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.
இப்போது இரானில் வர்த்தகத்தை தொடங்க முடிவெடுத்ததற்காக அந்த நிறுவனங்கள் வருத்தப்படுகின்றன. இவற்றில் சில இந்திய நிறுவனங்களும் அடங்கும்.
எண்ணெய் மற்றும் எரிசக்தி துறை தொடர்பான நிறுவனங்கள்
நாயாரா எனர்ஜி (இந்தியா): இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் இரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் 50% குறைக்கப்படும் என்று இந்த நிறுவனம் ஜூன் மாதத்தில் அறிவித்தது.
இதனிடையே, இரான் மீதான அமெரிக்காவின் தடைகள் அமல்படுத்தப்பட்டாலும், இரானுடன் வர்த்தகத்தை தொடரும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
- 2000 கிலோ தங்க நாணயங்களை பதுக்கி வைத்த இரான் வணிகருக்கு தூக்கு
- அமெரிக்கா விதித்த தடை: இரான் மக்கள் என்ன சொல்கிறார்கள்?
இரானில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியா, அமெரிக்காவின் இந்தத் தடை அதிகாரபூர்வமாக சரியானதல்ல என்று கருதுகிறது. ஆனால், தடையை மீறி வர்த்தகம் செய்யும்போது அமெரிக்கா நடவடிக்கை எதாவது எடுத்தால், அதிலிருந்து இந்தியாவின் பெரிய நிறுவனங்களையும், நாட்டின் நிதி நிலைமையையும் பாதுகாக்கும் வழிகளையும் கவனமாக பரிசீலித்து வருகிறது.
சென்னை பெட்ரோலியம் (இந்தியா): இரானில் இருந்து வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அக்டோபரில் இருந்து நிறுத்துவதாக அறிவித்தது. இரான் மீது மீண்டும் தடை விதித்த பிறகு, தனது காப்பீடு பாதுகாப்பு சிக்கலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தில் சென்னை பெட்ரோலியம் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தின் காப்பீட்டு திட்டம் அக்டோபர் மாதத்தில் முடிவதாகவும், அதற்கு பிறகு இரானின் கச்சா எண்ணெய் தொடர்பான ஆராய்ச்சிகள், காப்பீட்டு வரம்புக்குள் வராது என்று யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்ததுதான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
2018-19 ஆண்டில் இரானில் இருந்து இரண்டு மில்லியன் டன் கச்சா எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் சென்னை பெட்ரோலியம் கையெழுத்திட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்கூஸ் (பிரிட்டன்): இரானுடன் இணைந்து 600 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலை ஒன்றை நிறுவும் ஒப்பந்தத்தில் இந்த பிரிட்டன் நிறுவனம் ஆகஸ்ட் மாதத்தில் கையெழுத்திட்டது. ஆனால் அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தடைக்குப் பிறகு இந்த பணிகள் நிறுத்தப்பட்டன.
- இரான் பொருளாதாரத் தடைகள்: அமெரிக்காவுக்கு சவால் விடும் ரூஹானி
- இரான் மீது தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?
இந்தத் திட்டம் 570 மில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. இந்த சூரிய மின்சக்தி ஆலை திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், உலகிலேயே ஆறாவது மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி ஆலை என்ற பெயர் பெற்றிருக்கும்.
அமெரிக்காவின் முதல்கட்ட தடைகளுக்கு பிறகு, இரானுக்கும், பிரிட்டன் நிறுவனம் ஒன்றிற்கும் இடையில் ஏற்பட்ட மிகப் பெரிய ஒப்பந்தம் இது.
சாகா எனர்ஜி நிறுவனம் (நார்வே): 2017ஆம் ஆண்டு இரானுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சாகா எனர்ஜி நிறுவனம், மத்திய குவைத் பிராந்தியத்தில் 2.5 மில்லியன் யூரோ செலவில் இரண்டு கிகாவாட் திறன் கொண்ட சூரிய ஆற்றல் நிலையங்களை அமைக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால் இந்த முதலீடு செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக ஆகஸ்டு மாதத்தில் நிறுவனம் அறிவித்தது.
டோப்ராஸ் (துருக்கி): துருக்கியின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நிறுவனமான டோப்ராஸ், இரானில் இருந்து செய்யும் எண்ணெய் இறக்குமதிகளை மே மாதத்தில் குறைத்துக் கொண்டது.
நெதர்லாந்தைச் சேர்ந்த ராயல் டச் ஷெல் நிறுவனம், இந்தோனீசியாவின் பர்டாமீனா, கிரேக்கத்தின் ஹெலெநிக் பெட்ரோலியம் ஆகிய நாடுகளும் இரானுடனான ஒப்பந்தங்களை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.
பிரான்சின் டோடல் நிறுவனம், இரானின் தெற்கு பார்ஸ் எரிவாயு வயலை மேம்படுத்துவதற்கான 48 லட்சம் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது.
மின்சாரம் மற்றும் எரிவாயுத் துறையில் பணிபுரியும் பிரான்சின் ஏஞ்சி என்ற நிறுவனம் 2018 நவம்பரில் இரானுடனான தனது பொறியியல் துறை வர்த்தகத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அதேபோல், ரஷ்யாவின் லோக் ஆயில், இத்தாலியின் அனி ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளன.
காப்பீட்டு துறை நிறுவனங்கள்
ஏ.எக்ஸ்.ஏ (பிரான்ஸ்): பிரான்சின் ஏ.எக்ஸ்.ஏ என்ற காப்பீட்டு நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரானின் கடல்வழி வர்த்தகத் துறையில் காப்பீடு செய்வதை நிறுத்தியது. இரானுடன் 2015இல் அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஏ.எக்ஸ்.ஏ நிறுவனம் தனது வர்த்தகத்தைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
லாயிட்ஸ் லண்டன், (பிரிட்டன்): லாயிட்ஸ் லண்டன் காப்பீட்டு நிறுவனம், இரானில் தனது வர்த்தகத்தை முடித்துக் கொள்வதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அமெரிக்காவின் சி.எக்ஸ்.ஜி குழுமத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஜெர்மனியின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான அலயன்ஸ், இரானில் தனது தொழிலை குறைத்துக்கொண்டது.
கப்பல் துறை தொடர்பான நிறுவனங்கள்
சி.எம்.ஏ, சி.எம்.ஜி (பிரான்சு): இரானுடனான தனது வர்த்தகத்தை ஜூலை மாதத்துடன் முடித்துக் கொள்வதாக இந்த நிறுவனங்கள் அறிவித்தன.
டோர்மஜ் ஈ.எஸ் (டென்மார்க்): எண்ணெய் வயல்களில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுக்கும் இந்த நிறுவனம், இரானிடம் இருந்து புதிய ஒப்பந்தம் எதையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்துவிட்டது.
- இரான்: அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறும் இந்தியா
- இரான் மீதான தடை: சர்வதேச நீதிமன்றத்தை மதிக்காத அமெரிக்கா
அதேபோல், உலகின் மிகப்பெரிய கப்பல் நிறுவனமான டென்மார்கின் மேர்சக் என்ற நிறுவனம், அமெரிக்க தடைகளை கருத்தில் கொண்டு, இரானில் தனது வர்த்தகத்தை இந்த ஆண்டு நவம்பர் நான்காம் தேதி முதல் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது.
விமான போக்குவரத்து நிறுவனங்கள்
ஏர் பிரான்ஸ்: பொருளாதார காரணங்களுக்காக செப்டம்பர் மாதத்திற்குள் இரானில் தனது விமான சேவைகளை நிறுத்திக் கொள்வதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் ஆகஸ்டு மாதம் அறிவித்தது. ஆனால், அமெரிக்க தடைகள் தான் இதற்கு காரணம் என்று அந்த நிறுவனம் குறிப்பிடவில்லை.
பிரிட்டிஷ் ஏர்வேஸ்:பிரிட்டனின் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இரானில் இருந்து புறப்படும் தனது விமான சேவைகளை நிறுத்தப்போவதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இதற்கு பொருளாதார ரீதியான காரணம் எதுவும் இல்லை என்றும் அறிவித்த ஒரே மாதத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஏர் பஸ் (பிரான்ஸ்): ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 100 விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டிருந்தது. மூன்று விமானங்களை மட்டுமே வழங்கியிருந்த நிலையில், 2018 ஆகஸ்டு ஆறாம் தேதியன்று அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக ஏர் பஸ் அறிவித்தது.
போயிங் (அமெரிக்கா): 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை இரானுடன் மேற்கொண்டிருந்தது போயிங் நிறுவனம். அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதும், போயிங்கும் இந்த விமான விற்பனை ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.
வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள்
வால்வோ (ஸ்வீடன்): மத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்க சந்தைகளுக்காக இரானை மிகப்பெரிய மையமாக மாற்றும் திட்டம் வால்வோ நிறுவனத்திடம் இருந்தது. அமெரிக்காவின் இரண்டாம் கட்ட தடைகளை கருத்தில் கொண்டு இரானில் தனது வர்த்தகத்தை நிறுத்திக்கொள்வதாக வால்வோ அறிவித்துவிட்டது.
ஆட்டோமொபைல் உதிரிப் பாகம் தயாரிக்கும் ஜெர்மனியின் டோயேர் நிறுவனம், ஸ்வீடனின் அஸ்கான்யா என்ற கனரக ஆட்டோமொபைல் நிறுவனம், ஜெர்மனியின் டேம்லர், சுவிட்சர்லாந்தின் ஆட்டோனியம், பிரான்சின் ரேனா, தென் கொரியாவின் ஹூண்டாய், ஜப்பானின் மாஜ்டா, பிரான்சின் புஜோ சித்ரோயின் ஆகிய நிறுவனங்கள் இரானுடனான தங்களது வர்த்தக ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளன.
வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்கள்
சீனாவின் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் வர்த்தகத்தில், இரானுக்கும் சீனாவிற்கும் இடையில் மிகப் பெரிய பரிவர்த்தனை வங்கியாக இருந்தது சீனாவின் குன்லுன் வங்கி.
அதேபோல், தைவானின் மேகா சர்வதேச வணிக வங்கி, ஜப்பானின் மிட்சுபிஷி நிதிக் குழும்ம், மீஜுஹோ வங்கி ஆகியவையும் இரானுடனான வர்த்தக தொடர்புகளை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளன.
இரான்-ஜப்பான் இடையிலான கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் பெருமளவிலான பரிவர்த்தனைகள் மிட்சுபிஷி நிதிக் குழுமத்தின் மூலமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரான்சின் பேமெண்ட் சேவை நிறுவனமான இஞ்சினியரிங் குழுமம், அமெரிக்காவின் இரண்டாம் கட்டத் தடைகளுக்கு பிறகு இரானுக்கான தனது சேவைகளை நவம்பர் நான்காம் தேதியில் இருந்து நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. 2018ஆம் ஆண்டில் இரானிடம் இருந்து 16 மில்லியன் யூரோ மதிப்பிலான நிகர லாபத்தை இந்த நிறுவனம் பெறும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரியாவின் உபர் வங்கி இரானில் முதலீடு தொடர்பான அனைத்து திட்டங்களையும் நிறுத்துவதாகவும், அமெரிக்கா 2015 ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் கையெழுத்தான ஒப்பந்தங்களை மட்டும்தான் தொடர்வதாக உபர் வங்கி அறிவித்தது. மேலும், இரானுடனான நிதி உறவுகளை முடித்துக் கொள்ளுமாறும் இந்த வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
ஆகஸ்ட் ஆறாம் தேதிக்குள் இரானுடனான வர்த்தக தொடர்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என இந்தியாவின் யூகோ வங்கி மற்றும் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு எஃப்.ஐ.ஈ.ஓ ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
பெல்ஜியத்தின் கே.பி.சி வங்கி, ஜெர்மனியின் டி ஜெட் வங்கி ஆகியவையும் இரானுடனான தங்கள் வர்த்தகத்தை முடித்துக்கொண்டன.
தொழில் மற்றும் பொறியியல் துறை நிறுவனங்கள்
இரானில் 250 மில்லியன் டாலர் செலவில் பெட்ரோலியத் தொழிற்சாலை ஒன்றை கட்டும் ஒப்பந்தத்தை, தென் கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் ரத்து செய்தது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியாவின் ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்காவின் புதிய தடைகளை அடுத்து நவம்பர் முதல் இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக அக்டோபர் மாதம் அறிவித்தது.
அதே போல், அமெரிக்காவின் தடைகளை மதிப்பதாக கூறிய ஜெர்மனியின் பி.ஏ.எஸ்.எஃப் நிறுவனம், இரானுடனான வர்த்தகத்தை தொடர முயல்வதாக கூறினாலும் பெருமளவிலான வர்த்தகத்தை குறைத்துவிட்டது.
தென் கொரியாவின் எஸ்.கே இஞ்சினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம், இரானுடனான 1.88 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
புதிய ஒப்பந்தங்கள் எதனையும் இரானுடன் மேற்கொள்ளப் போவதில்லை என்று ஜெர்மனியின் பிலஃபிங்கர் இஞ்சினியரிங் நிறுவனம் அறிவித்துள்ளது.
- இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன?
- தாலிபன், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தை பலனளிக்குமா?
2017இல் 2.80 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்ட தென் கொரியாவின் டாயிலிம் இண்டஸ்ட்ரீஸ், தற்போது அதனை ரத்து செய்துள்ளது.
ஆஸ்ட்ரியாவின் ஓ.எம்.வி, இத்தாலியின் டானீலி உட்பட பல நிறுவனங்களும் இரானுடனான தங்கள் வர்த்தகத்தை நிறுத்திவிட்டன.
சாலை மற்றும் ரயில் பாதை கட்டுமான நிறுவனங்கள்
ரயில்வே லைன் உருவாக்கும் ஜெர்மனியின் டோய்சே நிறுவனம், செப்டம்பர் முதல் இரானுடனான வர்த்தகத்தை நிறுத்தியது. சுவிட்சர்லாந்தின் ஆஸ்டாட்லர் ரயில் நிறுவனம், இத்தாலியின் க்ரோபோ வந்தோரா, ஜெர்மனியின் ஜீமென்ஸ் ஆகிய நிறுவனங்களும் தங்கள் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டன.
தொலை தொடர்பு நிறுவனங்கள்
ஜெர்மனியின் டோய்சே டெல்காம், இரானுடனான வர்த்தகத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இரானில் இணையதள சேவைகளை மேம்படுத்தும் 750 மில்லியன் டாலர் திட்டத்தை தென்னாப்ரிக்காவின் எம்.டி.என் குழுமம் நிறுத்தி வைத்துள்ளது. -BBC_Tamil