கலிஃபோர்னியாவில் இதுவரை இல்லாத அளவு ஏற்பட்ட கொடுமையான காட்டுத்தீ ஏற்படுத்திய சேதத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.
கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 71 பேர் கொல்லப்பட்டனர்.
1000க்கும் அதிகமானோரை காணவில்லை. ஆனால், இந்த எண்ணிக்கை மாறலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கலிஃபோர்னியாவில் உள்ள பாரடைஸ் நகரில் இருந்து பேசிய டிரம்ப், “இதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
“நிர்வாக மேலாண்மையை நாம் சரியாக செய்ய வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் குழுக்களுடன் இணைந்து பணிபுரிய வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மேலும், “இம்மாதிரியான ஒரு சம்பவம் இனி நடைபெறாது என நான் நம்புகிறேன்” என்றார்.
இந்த காட்டுத்தீக்கு, வானிலை, பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை மாற்றம் என பெரிய காரணங்களை நிபுணர்கள் கூறுகின்றனர்.
துயரத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, புகலிடங்களில் நோரோ
வைரஸ் தாக்குதலில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வடக்கு கலிஃபோர்னியாவின் காற்றுதரம் உலகிலேயே மிக மோசமானதாக மாறியுள்ளது.
அடுத்த சில தினங்களில் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. அது புகையை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் மண் சரிவுகள், வெள்ள பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளும், பயிர்கள் சேதமாக வாய்ப்புகளும் உள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் சட்ட அமலாக்கங்கள், அரசியல்வாதிகள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருபவர்களை டிரம்ப் பாராட்டியுள்ளார்
“இதனை பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாகவுள்ளது. இதுவரை எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது மோசமாக பாதிப்படைந்துள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதே முதல் கடமை” என அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பலர் டிரம்பை வரவேற்றாலும், டிரம்பை பைத்தியம் என்று குறிக்கும் பலகையை ஒருவர் பிடித்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
தீ தொடங்கிய எட்டு நாளைக்கு பிறகு தடயவியல் குழுக்களையும் மோப்ப நாய்களையும் கொண்டு ராணுவப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 1,101 பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த எண்ணிக்கை மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காட்டுத்தீ 50 சதவீகிதம் அளவு அணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை முழுமையாக அணைக்க இந்த மாதம் இறுதிவரை தேவைப்படலாம் என்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏன் காட்டுத்தீ?
பொதுவாக கலிஃபோர்னியாவின் காட்டுத்தீ சமயம் கோடை காலத்தில் தொடங்கி இலையுதிர் காலத்தின் தொடக்கம் வரை இருக்கும். ஆனால் தற்போது நிபுணர்கள் வருடத்தின் அனைத்து நாட்களிலும் காட்டுத்தீக்கான ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறைந்த ஈரப்பதம், சூடான காற்று மற்றும் காய்ந்த நிலப்பகுதி ஆகியவை தீப்பரவுவதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறுப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான வெப்பம் பதிவாகிறது. மழை அளவும் குறைந்துள்ளது.
அதிகரித்திருக்கும் வெப்பத்தை காரணம் காட்டி, ஆளுநர் ப்ரவுன், “இது வழக்கத்திற்கு மாறான சாதாரண நிகழ்வல்ல, வழக்கத்திற்கு மாறான அசாதரண நிகழ்வு” என்று கூறி உள்ளார்.
1933 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலீஸில் ஏற்பட்ட கிரிஃபித்ஸ் பார்க் தீ விபத்தைவிட இது மோசமானது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த தீ விபத்தில் 31 பேர் இறந்தனர். -BBC_Tamil