தவறான நடத்தை: நிசான் கார் நிறுவன தலைவர் கார்லோஸ் கைது

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத் தலைவர் கார்லோஸ் கோசென் தவறான நடத்தை குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார் தயாரிப்புத் துறையில் மிகப்பெரிய ஆளுமையான கார்லோஸ், வரும் வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள நிர்வாக குழு கூட்டத்திற்கு பின்னர் நிசானிலிருந்து நீக்கப்படுவார் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

கார்லோஸ் மீது தனது சம்பளத்தை குறைவாக காண்பித்ததாகவும், நிறுவனத்தின் சொத்துக்களை தனிப்பட்ட விடயங்களுக்காக பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கார்லோஸின் மற்ற தவறான நடவடிக்கைகள் குறித்த மேலதிக தகவல்களை தர முடியவில்லை என்று நிசான் தெரிவித்துள்ளது.

தனது நிறுவனத்தின் தலைவர் மீதான குற்றச்சாட்டு மீது பல மாதங்கள் நிறுவனத்துக்குள்ளேயே விசாரணைகள் நடத்தப்பட்டதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்கு கார்லோஸ் கிட்டத்தட்ட 44 மில்லியன் டாலர்கள் தொகையை குறைத்து மதிப்பு காட்டியுள்ளதாக ஜப்பானிய ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இது உறுதிப்படுத்தப்படவில்லை.

கார்லோஸ் கோசென்

ஜப்பானில் செயல்படும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களின் வருமானம் வருடத்துக்கு 100 மில்லியன் யென்னுக்கு மேல் இருந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற விதி கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.

“நிறுவனத்தின் மூதலீட்டாளர்களுக்கு நேர்ந்துள்ள கவலைக்கு ஆழ்ந்த மன்னிப்பை நிசான் தெரிவித்துக்கொள்கிறது” என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்த தகவல்களை ஜப்பானிய பொது வழக்கறிஞர் அலுவலகத்துக்கு தொடர்ந்து வழங்கி வருவதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் ‘நெருங்கிய தொடர்பு’ கொண்டுள்ள நிசான் நிறுவனத்தின் மூத்த அதிகாரி கிரெக் கெல்லியை பணிநீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. -BBC_Tamil