சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட விவகாரத்தில் உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்களை சௌதி அரேபியா பெற்றபோதும், அந்நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ‘வரலாறு காணாத அளவு முதலீடு செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ள’ சௌதி அரேபியா தங்களது ‘திடமான கூட்டாளி’ என்று டிரம்ப் வெளியிட்ட அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கஷோக்ஜி கொல்லப்பட்டது குறித்து சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு ‘நன்றாக தெரிந்திருக்கும்’ என்றும் டிரம்ப் அதில் ஒப்புக்கொண்டுள்ளார்.
“அந்நிலையிலும், சௌதி அரேபியாவுடனான அமெரிக்காவின் உறவு தொடரும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சௌதி அரேபியா சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கொல்லப்பட்டார்.
கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோ பதிவு குறித்து தனக்கு விவரிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் அதை கேட்கப்போவதில்லை என்று ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.
- கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோவை ஏன் கேட்கவில்லை? – விளக்கும் டிரம்ப்
- ஜமால் கஷோக்ஜி கொலை: அமிலத்தில் கரைக்கப்பட்டதா சடலம்?
பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியை கொலை செய்வதற்கான உத்தரவை சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது தொடர்பான ஆதாரங்களின் விரிவான மதிப்பீட்டை சி ஐ ஏ செய்துள்ளதாகவும் அதன் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜியின் கொலையை விசாரிப்பதில் அதிபர் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டி, வெள்ளை மாளிகைக்கு வர அமெரிக்க அதிபர் தனக்கு விடுத்த அழைப்பை கஷோக்ஜியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் நிராகரித்தார்.
டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல கருத்தை தோற்றுவிப்பதற்கு என எண்ணுவதாக ஹட்டீஜ் ஜெங்கிஸ் கூறினார்.
முன்னதாக, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி, சௌதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த சம்பவத்தால் சௌதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. -BBC_Tamil