அந்தமானில் பழங்குடிகள் கொன்ற அமெரிக்கர்: “சுவிசேஷம் பரப்பவே சென்றார்”

அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து கொல்லப்பட்டார்.

அவர் ஒரு மிஷனரி. “ஜான் ஆலனின் நோக்கம் அத்தீவின் பழங்குடியினரிடம் சுவிசேஷத்தை கொண்டு செல்வதுதான்” என்று அவரது பயணத்தின் கடைசி நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு மிஷனரி கூறியுள்ளார்.

ஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜான் ஆலனின் குடும்பம், அந்தப் பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது. “ஜான் ஆலன் சாவ் கடவுளையும் வாழ்க்கையையும் நேசித்தார். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினார். சென்டிலீஸ் பழங்குடிகள் மீது அவருக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை” என்று கூறிய அவர்கள், அவர் தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு சென்றதாகவும், எனவே கைது செய்யப்பட்ட அவரது அந்தமான் நண்பர்களை விடுவித்துவிடலாம் என்றும் கூறியுள்ளனர்.

Map locator

சென்டினல் தீவில் இருப்பவர்களையும், அவர்களது வாழ்க்கை முறையையும் பாதுகாக்கவேண்டும் என்பதற்காக அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது.

ஃப்ளூ, தட்டம்மை போன்ற சாதாரண நோய்களுக்கு எதிராகக் கூட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது என்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும். இதனால்தான் அவர்களது தனிமை பேணப்படுகிறது.

ஜான் ஆலன் சாவ் இறப்பை ஒட்டி ஒரு போலீசார் ஒரு கொலை வழக்குப் பதிவு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்களும், அடையாளம் தெரிந்த ஏழு பேரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த ஏழு பேரில் குறைந்தது ஐந்து பேர் ஜான் ஆலனை அந்த தீவுக்கு அழைத்துச் சென்றதாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் என்று போலீஸ் சொல்கிறது.

The Sentinelese stand guard on an island beach in 2005. - 2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சென்டினல் தீவிலுள்ள இந்த கடற்கரையில் அத்தீவின் பழங்குடிகள் பாதுகாப்புக்காக நிற்பதைப் பார்க்கலாம்.2005ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் சென்டினல் தீவிலுள்ள இந்த கடற்கரையில் அத்தீவின் பழங்குடிகள் பாதுகாப்புக்காக நிற்பதைப் பார்க்கலாம்.

எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதைக் கண்டறிவதற்காக அதிகாரிகள் ஒரு ஹெலிகாப்டரையும், கப்பலையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.

“அந்த தீவில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் நிற்கிறோம். ஆனால், இன்னமும் ஜான் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு இன்னமும் சில நாட்கள் ஆகலாம்” என்று ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் கூறியுள்ளார் அந்தமான் நிக்கோபர் தீவின் தலைமை இயக்குநர் தேவேந்திர பதக்.

நிலைமையை எப்படி எதிர்கொள்வது என்பதில் உதவுவதற்கு அவர்கள் மானுடவியலாளர்கள், வனத்துறை அலுவலர்கள், பழங்குடி நல அலுவலர்கள் உள்ளிட்ட கள வல்லுநர்களின் உதவியை போலீசார் நாடியுள்ளனர். எவ்விதத்திலும் அவர்களையோ, அவர்களது வாழ்விடத்தையோ தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்று தேவேந்திர பதக் கூறியுள்ளார்.

அந்தமான் சென்ற பிறகு தொலை தூரத்தில் உள்ள வட சென்டினல் தீவுக்கு சில மீனவர்களை அழைத்துக்கொண்டு ஒரு படகில் சென்ற ஜான் தீவினை நெருங்கியவுடன், ஒரு சிறு படகில் தனியாக அந்தத் தீவின் கரையை அடைந்ததாகவும், கரையில் கால் வைத்த உடனேயே பழங்குடியினர் அவரை வில் அம்பு கொண்டு தாக்கியதாகவும் அவருடன் சென்ற மீனவர்கள் தெரிவித்தனர்.

பைபிளைத் துளைத்த அம்பு

அந்த தீவை நோக்கி தாம் மேற்கொண்ட முந்திய பயணம் ஒன்றின்போது அவர் “என் பெயர் ஜான். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்” என்று அவர் பழங்குடிகளைப் பார்த்து கத்தியதாகவும், ஒரு பழங்குடி எறிந்த அம்பு அவரது பைபிளை துளைத்ததாகவும் வாஷிங்டன் போஸ்டில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது குடும்பத்துக்கு அவர் எழுதிய கடைசி குறிப்பில், “நான் கிறுக்கன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசுவை அந்த மக்களுக்கு பிரகடனப்படுத்துவது அவசியமானது என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்ட அவர், ‘கடவுளே நான் இறக்க விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கத்தரிக்கோல், ஊக்கு பின், கால்பந்து ஆகியவற்றை ஜான் அந்த பழங்குடியினருக்கு பரிசளிக்க எடுத்துச் சென்றதாக பெயர் வெளியிட விரும்பாத ஒருவரை மேற்கோள் காட்டி ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இயேசுவின் ராஜ்ஜியத்தை அந்தத் தீவில் நிறுவவே இப்படிச் செய்வதாகவும், தாம் கொல்லப்பட்டால் பூர்வகுடிகளை குறை சொல்லவேண்டாம் என்றும் அவர் கூறியதாக, அந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் தெரிவித்துள்ளார். -BBC_Tamil