சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலைக்கு சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டதாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி ஐ ஏ மீது பழி சுமத்தவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி கஷோக்ஜி கொலை செய்யப்பட்டார். இளவரசர் சல்மானின் அனுமதி இல்லாமல் இது நடந்திருக்காது என அதிகாரிகள் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர்.
“அவர்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை” என்று சி ஐ ஏ-வின் மதிப்பீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப் பதிலளித்தார்.
“அவர்கள் பல விதத்தில் நினைக்கலாம். இன்னும் முடிவு எட்டப்படாத அறிக்கை என்னிடம் உள்ளது. இதற்கு பட்டத்து இளவரசர்தான் காரணம் என்று யாராலும் முடிவுக்கு வர முடியுமா என்று எனக்கு தெரியவில்லை” என அவர் தெரிவித்தார்.
கஷோக்ஜி கொலைக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு சௌதியின் முக்கியத்துவம் குறித்து அதிபர் டிரம்ப் அழுத்தமாக பேசி வருகிறார்.
இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவம் பட்டத்து இளவரசருக்கு “நன்கு தெரிந்திருக்கலாம்” என்று கூறியிருந்தார் டிரம்ப்.
“இந்த துயர நிகழ்வு நிச்சயமாக இளவரசரின் கவனத்திற்கு சென்றிருக்கும் – அவர் செய்திருக்கலாம், செய்யாமலும் இருந்திருக்கலாம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
சௌதி பட்டத்து இளவரசருக்கு இந்த கொலையில் நேரடி தொடர்பு இருப்பதாக ஒரு ஆதாரம் கூட இல்லை என அமெரிக்க ஊடகங்களில் கூறப்படும் அதே நேரத்தில், அவரது ஒப்புதல் இல்லாமல் இந்த கொலை நடந்திருக்காது என அதிகாரிகள் நம்புகின்றனர்.
கொலை குறித்து பட்டத்து இளவரசர் சல்மானுக்கு ஏதும் தெரியாது என்று கூறும் சௌதி அரேபியா, இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
- ஜமால் கஷோக்ஜி கொலை: அமிலத்தில் கரைக்கப்பட்டதா சடலம்?
- கஷோக்ஜி கொலை தொடர்பான ஆடியோவை ஏன் கேட்கவில்லை? – விளக்கும் டிரம்ப்
- கஷோக்ஜி விவகாரம்: மத்திய கிழக்கு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கங்கள்
எனினும், சௌதி பத்திரிகையாளர் கஷோக்ஜியின் எதிர்ப்பு குரலை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ‘அமைதி’யாக்கும்படி பட்டத்து இளவரசர் உத்தரவிட்டதற்கான தொலைபேசி ஆதாரங்கள் சி ஐ ஏ-விடம் இருப்பதாக அதன் இயக்குனர் ஹாஸ்பெல் துருக்கி அதிகாரிகளிடம் கூறியதாக துருக்கி நாளிதழான ஹ்யூரியெட் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த கூற்றுகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை. நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என டிரம்ப் தெரிவித்தார்.
வியாழனன்று சௌதி பட்டத்து இளவரசர் “சகோதர அரபு நாடுகளை” பார்வையிட சென்றுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் இந்த சுற்றுப் பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதில் இருந்து அவரது முதல் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் இதுவே.
இந்த மாத இறுதியில் அர்ஜென்டினாவின் ப்யோனஸ் ஏர்ஸில் நடைபெற உள்ள உலகத் தலைவர்கள் சந்திக்கும் ஜி20 மாநாட்டில், சௌதி பட்டத்து இளவரசர் சல்மானும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, துருக்கி மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில், 18 சௌதி நாட்டவர்கள் மீது தடை விதித்துள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதே நபர்கள் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளாலும் தடை விதிக்கப்பட்டுள்ளனர் – இவர்களுக்கு கஷோக்ஜி கொலையுடன் தொடர்பிருக்கலாம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நபர்களின் பட்டியலில் பட்டத்து இளவரசர் இல்லை என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். -BBC_Tamil