அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் – ஈரான் அதிபர் வலியுறுத்தல்..

‘இஸ்லாமிய கல்விக்கூடங்களுக்கான உலகளாவிய சிந்தனையில் நெருக்கம்’ என்னும் அமைப்பான (World Forum for Proximity of Islamic Schools of Thought) ஆண்டுதோறும் இந்த சர்வதேச கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது.

இந்த அமைப்பின் 32-வது கருத்தரங்கம் நவம்பர் 24 (இன்று) தொடங்கி 26-ம் தேதிவரை ஈரான் தலைநகரான டெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.இந்த 3 நாள் கருத்தரங்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் இருந்து வந்துள்ள சுமார் 350 இஸ்லாமிய அறிஞர்கள், முப்திகள், சிந்தனையாளர்கள் மற்றும் மூத்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

சமீபத்தில் ஈரான் மீது அமெரிக்க உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் இந்த கருத்தரங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், இந்த கருத்தரங்கில் இன்று துவக்கவுரையாற்றிய ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றுதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் மூர்க்கத்தனமான அடக்குமுறையை வென்றாக வேண்டுமென்றால் முஸ்லிம்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டியதை தவிர வேறு வழியே இல்லை. இஸ்லாமிய நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையும், சகோதரத்துவமும் நிலவ வேண்டும். இதை கடமையாக நாம் கருத வேண்டும்.வெறும் வாய்மொழியாக மட்டுமில்லாமல் கூட்டு செயல்பாட்டினால் இந்த கடமை அமைய வேண்டும். சவுதி அரேபியாவை நாங்கள் சகோதர நாடாகவே பார்க்கிறோம். அந்நாட்டுடன் இணைந்து பணியாற்றவும் தயாராக இருக்கிறோம் என்றும் ரவுஹானி குறிப்பிட்டுள்ளார்.

-athirvu.in