சிரியாவில் வி‌ஷ வாயு தாக்குதல்- 107 பேர் மருத்துவமனையில் அனுமதி..

சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் 15–ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது இன்னும் நீடித்து வருகிறது. அங்கு அரசுப்படைகள் அவ்வப்போது பொதுமக்கள் மீது விஷ வாயு தாக்குதலை மேற்கொள்கிறது. சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் ரஷியாவின் உதவிக்கொண்ட சிரிய அரசு அதுபோன்ற நடவடிக்கையை தொடர்கிறது. பயன்படுத்தவில்லை என மறுப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் அங்குள்ள அலெப்போ நகரத்தில் வி‌ஷ வாயு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால், அங்கு 107 பேர் சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இது பற்றி சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறும்போது, ‘‘சுவாச பிரச்சினையால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 31 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என்று தெரிவித்தது. இந்த வி‌ஷ வாயு தாக்குதலை கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

-athirvu.in