1எம்டிபி பற்றிய பேச்சை எதிரணி கண்டுக்கொள்வதில்லை: லிம் சாடல்

1எம்டிபி ஊழல் பற்றிய பேச்சு வரும்போது எதிரணி நெறுப்புக் கோழியாக மாறி தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்கிறது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் சாடினார்.

“இதுதான் உண்மை நிலவரத்தை எதிர்கொள்ள மறுப்பவர்களின் பிரச்னை. நீங்கள் (மணலுக்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும்) நெறுப்புக் கோழி போன்றவர்கள்…….தீயதைப் பார்ப்பதில்லை, கேட்பதில்லை, பேசுவதில்லை. அதுதான் தோற்றுப் போனீர்கள்”,என மக்களவையில் கேள்வி நேரத்தின்போது லிம் கூறினார்.

“உண்மையிலிருந்து விலகி ஓடாதீர்கள். நடந்தது மிகப் பெரிய ஊழல். அதை மூடி மறைக்க பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும், சில தரப்புகள் அதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றன.

“பரவாயில்லை. எங்களைப் பொறுத்தவரை நாடாளுமன்றமோ நீதிமன்றமோ மலேசியர்களுக்கு நீதி கிடைக்கப் பாடுபடுவோம்” , என்றார்.

நாட்டிலிருந்து பணம் வெளியேறுவது பற்றிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில் 1எம்டிபியை மேற்கோள்காட்டிப் பேசியதற்கு ஷம்சுல் அனுவார் நசாரா(பிஎன் -லெங்கோங்) ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து லிம் இவ்வாறு கூறினார்.