நியூசிலாந்தில் ஸ்டிவர்ட் தீவின் கடற்கரையில், கரை ஒதுங்கிய 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தன.
மேசன் பே கடற்கரையில் திமிலங்கள் குவிந்திருந்ததை சனிக்கிழமையன்று அங்கு நடந்து சென்ற ஒருவர் கண்டுபிடித்தார்.
அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது, பாதி திமிங்கலங்கள் உயிரிழந்திருந்தன, உயிருடன் இருந்த மற்ற திமிங்கலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் காப்பாற்றுவதற்கு கடினமான நிலையில் இருந்தன.
வலிமிகுந்த முடிவு
“உயிரிழந்த திமிங்கலங்களை தவிர, பிற திமிங்கலங்களை கடலில் விடுவதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது,” என பிராந்திய பாதுகாப்பு துறையின் ரென் லெப்பன்ஸ் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
“அந்த கடற்கரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், போதிய பணியாளர்கள் இருக்கவில்லை. திமிங்கலங்களின் மோசமான நிலையை பார்த்தபோது, அவற்றை இறக்கச் செய்வதுதான் மனிதாபிமான செயல் என்று தோன்றியது. எனினும், மனதிற்கு வலி கொடுக்கும் முடிவாக அது இருந்தது.”
- கடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் – தீர்வுக்கு என்ன வழி?
- ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு
நியூசிலாந்தில் திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்குவது அசாதாரணமான ஒன்று அல்ல. இந்த ஆண்டில் மொத்தம் 85 சம்பவங்கள் அதுபோல நடந்துள்ளன. பெரும்பாலும், ஒரே ஒரு திமிங்கலம்தான் கரை ஒதுங்கும், இப்படி கூட்டமாக அல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
திமிங்கலங்களோ அல்லது டால்பின்களோ ஏன் இவ்வாறு கரை ஒதுங்குகின்றன என்பதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை என்று செய்தி நிறுவனம் கூறுகிறது. மோசமான உடல்நிலை, திசை மாறியது, கடல் அலைகள் அல்லது கொல்லும் மீனால் துரத்தப்பட்டு கரை ஒதுங்கியிக்கலாம் என்பது இதற்கான காரணங்களாக இருக்கலாம்.
கடந்த வார இறுதியில் வட தீவின் வடமுனையில் 12 பிக்மி திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 4 உயிரிழந்தன.
மிச்சமுள்ள 8 திமிங்களை மீட்கலாம் என்று நம்பப்படுகிறது. அதற்கான முயற்சிகளை உள்ளூர் கடல் பாலூட்டி விலங்குகளுக்கான தொண்டு நிறுவனமான ஜோனா எடுத்து வருகிறது.
வரும் செவ்வாய்கிழமை திமிங்கலங்களை மீண்டும் கடலில் மிதக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு தன்னார்வலர்களின் உதவியையும் அவர்கள் கோருகின்றனர். -BBC_Tamil