பக்கத்தானுடன் கூட்டு: அலியாஸ் எம்டியுசியை பிரநிதிக்கவில்லை

தொழிலாளர் சட்டங்களுக்கு முன்மொழியப்பட்டிருக்கும் திருத்தங்களுக்கு எதிராக அரசாங்கத்துடன் “போர் தொடுக்க” தயாராக இருப்பதாகக் கூறப்படுவதை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) மிகத் தீவிரமாக மறுத்துள்ளது.

“இந்த அறிக்கையில் நிச்சயமாக உண்மை இல்லவே இல்லை. அது காங்கிரஸ்சின் அதிகாரப்பூர்வமான கொள்கையைப் பிரதிநிதிக்கவில்லை”, என்று அக்காங்கிரஸ்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ஹாலிம் மான்சோர் கூறினார்.

இன்று முடிவுற்ற பிகேஆர் மாநாட்டில் உரையாற்றிய எம்டியுசியின் பொருளாளர் அலியாஸ் அவாங் இப்ராகிம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிய அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்க எம்டியுசி தயாராக இருப்பதாக கூறியிருந்தது  மீது அவர் கருத்து தெரிவித்தார்.

எம்டியுசி அரசியல் சார்புடையதல்ல என்பதை அப்துல் ஹாலிம் மீண்டும் வலியுறுத்தினார். அது இந்நாட்டு தொழிலாளர் நலன்கள் மீது மட்டுமே அக்கறை கொண்டுள்ளது.

“எங்களுக்கு அரசியல் நோக்கம் எதுவும் கிடையாது. நாட்டின் தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதுதான் எங்கள் கடப்பாடு”, என்று பெட்டாலிங் ஜெயாவில் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

அவாங் கோம்பாக் தொகுதி பிகேஆர் உறுப்பினர் என்ற தகுதியில் பேசியுள்ளார். எம்டியுசியின் சார்பில் அல்ல என்றாரவர்.

“அலியாஸ் அவாங் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம். ஏனென்றால் அது அவரின் சொந்தக் கருத்தாகும். அதற்கும் எம்டியுசியின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

தொழிலாளர் சட்டங்களுக்கான திருத்தங்களை அரசாங்கம் கையாளும் முறை மீது ஏமாற்றம் அடைந்திருந்த போதிலும், அதன் நோக்கத்தை அடைவதற்கு எம்டியுசி இவ்வளவு தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்பதாகாது என்று அப்துல் ஹலிம் மேலும் கூறினார்.

“நாங்கள் மிக முதிர்ச்சி அடைந்த தொழிலாளர் அமைப்பு. நாட்டின் 10 மில்லியன் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான எங்களுடையப் போராட்டத்தில் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்துவதற்காக எங்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் மிகக் கவனமாக தீட்டப்படுகின்றன”, என்றாரவர்.

அனைத்து இணை உறுப்பினர்களையும் பிரதிநிதிக்கும் எம்டியுசியின் பொதுமன்றம் சட்டத்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை அழிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான செயல்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

TAGS: