பாஸ்: நஜிப்பும் நஸ்ரியும் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துகின்றனர்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீது அண்மையில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் முரண்பாடான போக்கைப் பின்பற்றுவதின் மூலம் மூத்த பிஎன் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பாஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியது.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தியுள்ளனர்”, என்று பாஸ் உதவித் தலைவர் மாஹ்புஸ் ஒமார் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அந்தக் குழு தனது கடமைகளை முடிப்பதற்காக அரசாங்கம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என பிரகடனம் செய்ததின் மூலம் குழு குறித்து நஜிப் நேர்மாறாக நடந்து கொள்கிறார் என அவர் சொன்னார். அத்துடன் அந்த அறிக்கை வழி நாடாளுமன்றத்தையும் நஜிப் அப்பட்டமாக அவமானப்படுத்தியுள்ளார் என்றார் அவர்.

“அவர்கள் நாடாளுமன்றத்தின் ஒர் அங்கமாக இருக்கும் ஒரு குழுவை அமைத்தால் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்கி அதனைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் ஏன் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்?

நாடாளுமன்றத் தேர்வுக் குழு அமைப்பு குறித்த விவரங்களையும் அந்தக் குழுவுக்கு அமைச்சர் ஒருவர் தலைமை தாங்குவார் என்பதையும் முன் கூட்டியே வெளியிட்டதின் மூலம் எந்த ஒரு தேர்வுக் குழுவின் அமைப்பையும் பணிகளை வரையறுப்பதற்கு நாடாளுமன்றத்துக்கு உள்ள உரிமையை நஸ்ரி மீறி விட்டதாகவும் மாஹ்புஸ் ஒமார் குறிப்பிட்டார்.

“அது குறித்து நாடாளுமன்றம் மட்டுமே முடிவு எடுக்க முடியும், எடுக்க வேண்டும்”, என்றார் அவர்.

TAGS: