உலகம் முழுவதும் நெருங்கிய உறவுகளால் கொல்லபப்டும் பெண்கள் ; அதிரவைக்கும் தரவுகள்

ஒவ்வொருநாளும் சராசரியாக 137 பெண்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது இணை மூலமாகவே கொல்லப்படுகிறார்கள் என ஐநாவின் போதை மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஒரு புதிய தரவை வெளியிட்டிருக்கிறது.

”வீடுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களின் வீடே அவர்களுக்கான அபாயகரமான இடமாக விளங்குகிறது” என இந்த அலுவலகம் கூறுகிறது.

2017-ம் ஆண்டு கொல்லப்பட்ட 87 ஆயிரம் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரவுகளை கவனமாக பார்த்தால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பெண்கள் அவர்ளின் நெருக்கமான இணையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 20 ஆயிரம் பெண்கள் அவர்களின் மற்ற உறவுகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் பின்னுள்ள பெண்களின் நிலைமை குறித்து தெரிந்து கொள்ள பிபிசி 100 பெண்கள் விரும்பியது. அக்டோபர் மாதத்தின் மானிட்டரிங் அறிக்கையை நாங்கள் அலசினோம். அதில் சில கதைகளையும், எப்படி இந்த கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் இங்கே பகிர்கிறோம்.

தரவுகள்

ஆண்கள் கொலை செய்யப்படும்வீதம் இன்னமும் அதிகம்

ஐநாவின் போதை மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் சேகரித்துள்ள தரவுகளின் படி ” உள்நோக்கம் கொண்டு கொலை செய்யப்பட்டதால் வாழ்வை இழந்தவர்களில் பெண்களை விட நான்கு மடங்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆண்கள்”.

உலகம் முழுவதும் நடந்துள்ள மனிதர்களால் மனிதர்களே கொலை செய்யப்பட்ட நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் எட்டு பேர் ஆண்களே என ஐநாவின் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இருப்பினும், மனிதக்கொலைகளில் பாதிக்கப்படும் 10 பெண்களில் எட்டு பெண்கள் அவர்களின் நெருக்கமான உறவுகளால்தான் கொள்ளப்படுகிறார்கள் எனவும் இந்த அறிக்கை விவரிக்கிறது.

”நெருங்கிய இணையின் வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவது மனிதக்கொலைகளில் பெண்கள் பாதிக்கப்படும் வீதத்தை மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது” என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தரவுகள்

47 பெண்கள், 21 நாடுகள், ஒருநாள்

ஐநாவின் இப்புள்ளிவிவர அறிக்கையானது ஒவ்வொரு நாடுகளில் அரசுகளிடம் இருந்து பெற்ற மூலாதாரங்களை கொண்டே கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

நாங்கள் அக்டோபர் 1,2018 அன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட விவரங்கள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கவனித்தோம். பாலின காரணங்களுக்காக 21 வெவ்வேறு நாடுகளில் 47 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதை, வெவ்வேறு நாடுகளில் வெளியான செய்திகளை கொண்டு எங்களது பிராந்திய நிபுணர்கள் கணக்கிட்டுள்ளார்கள்.

இதில் பெரும்பாலான கொலைகள் குறித்து இன்னமும் விசாரிக்கப்பட வேண்டியதிருக்கிறது.

உள்ளூர் ஊடகங்களின் வெளியான செய்திகள் அடிப்படையில் ஐந்துபேரின் கதைகளை, பிபிசி சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொண்டு செய்திகளை சரிபார்த்தபிறகு உங்களிடம் பகிர்கிறோம்.

Judith Chesang
ஜூடித் சேஸங்

ஜூடித் சேஸங்(22), கென்யா

இவ்வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி, ஜூடித் சேஸங் மற்றும் அவரது சகோதரி நான்சி இருவரும் தங்களது சோள பயிர்களை அறுவடை செய்வதற்காக விவசாய நிலத்திற்குச் சென்றிருந்தனர்.

மூன்று வயது குழந்தைக்கு தாயான ஜூடித் சமீபத்தில்தான் தனது கணவர் லாபன் கமுரென்னிடம் விவாகரத்து பெற்றிருந்தார். மேலும் நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள தனது பெற்றோரின் கிராமத்திற்கு செல்லவும் முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அக்டோபர் 1 அன்று அவரது சகோதரி நிலத்தில் தனது வேலைகளை செய்யத் துவங்கிவிட்டார். ஜூடித்தின் கணவன் அங்கே வந்து தனது மனைவியை தாக்கி கொன்றுவிட்டார். லாபன் கிராமவாசிகளால் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவிக்கிறது.

தரவுகள்

ஆஃப்ரிக்காவில்தான் தங்களது நெருங்கிய உறவினர்கள், நெருக்கமான இணையால் கொல்லப்படும் வீதமானது அதிகமாக இருக்கிறது என ஐநாவின் அறிக்கை தெரிவிக்கிறது. லட்சத்திற்கு 3.1 மரணங்கள் இவ்வகையில் நிகழ்கிறது.

அதே சமயம், ஆசியாவில்தான் நெருக்கமான உறவுகள் மற்றும் இணைகளால் பெண்கள் கொல்லப்படுவது அதிகமாக காணப்படுகிறது. 2017-ல் மட்டும் 20 ஆயிரம் பெண்கள் இவ்வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.

Neha Chaudhary
நேஹா சரத் சவுதரி

நேஹா சரத் சவுதரி (18), இந்தியா

நேஹா சரத் சவுதரி சந்தேகத்துக்குரிய ”ஆணவ ” கொலையால் அவரது பதினெட்டாவது பிறந்தநாளின்போது இறந்துள்ளார்.

அன்றைய தினம் அவரது ஆண் நண்பருடன் அவர் பிறந்தநாள் கொண்டாட வெளியில் சென்றுள்ளார்.

அப்பெண்ணின் பெற்றோர் நேஹாவின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என பிபிசியிடம் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அப்பெண்ணின் பெற்றோரும் இன்னொரு ஆண் உறவினரும் அவர்களது வீட்டில் இக்கொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண்கள் மீதான வன்முறை – அச்சுறுத்தல்களும் தீர்வும்

விசாரணை இன்னமும் தொடர்கிறது மேலும் மூன்று பேர் காவல்துறையின் விசாரணையை எதிர்கொள்ள நீதிபதி காவலில் இருக்கின்றனர்.

நேஹாவின் பெற்றோரும் மற்றும் அவரது ஆண் உறவினரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரிக்க உத்தேசித்துள்ளதாக அவர்களின் வழக்குரைஞர் வாயிலாக பிபிசி அறிந்துகொண்டுள்ளது.

ஒவ்வொருவருடமும் நூற்றக்கணக்கானோர் காதலில் விழுந்ததற்காகவும் அல்லது தங்களின் குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துகொண்டதற்காகவும் கொலை செய்யப்படுகின்றனர்.

ஆணவ கொலைகள் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகள் அரிதாகவே கிடைக்கிறது. ஏனெனில் இதுபோன்ற குற்றங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்படாதவையாகவோ அல்லது ஆவணப்படுத்தப்படாதவையாகவோ உள்ளன.

Zeinab Sekaanvandஜீனப் சிகான்வன்

ஜீனப் சிகான்வன் (24), இரான்

ஜீனப் சிகான்வன் தனது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலடப்பட்டுள்ளார். ஜீனப் வட கிழக்கு இரான் பகுதியில் குர்து இனத்தின் பழமைவாத மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். திருமணம் செய்துகொண்டு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள விரும்பி தனது பதின்பருவத்திலேயே அவர் வீட்டை விட்டு ஓடி விட்டார்.

அவரது கணவன் தவறாக நடந்து கொண்டதாகவும் மேலும் அவருக்கு விவாகரத்து வழங்க மறுத்ததாகவும், அவளது புகாரை வாங்க போலீசார் மறுத்துள்ளதாகவும் ஆமென்ஸ்டி இன்டெர்னேஷல் தெரிவித்துள்ளது.

17 வயதில் தனது கணவனை கொன்றதற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

கணவனை கொன்ற குற்றத்தினை ஒப்புக்கொள்ளச்சொல்லி போலீசாரால் அடிக்கப்பட்டதாகவும் சித்திரவதை செய்யப்பட்டுளதாகவும் அவரது ஆதரவாளர்களும் ஆம்னெஸ்டியும் தெரிவித்துள்ளனர்.

Sandra Lucia Hammer Mouraசான்ட்ரா லூசியா ஹாமெர் மூரா

சான்ட்ரா லூசியா ஹாமெர் மூரா (39), பிரேசில்

சான்ட்ரா லூசியா ஹாமெர் மூரா தனது 16 வயதில் அகட்ட அகுயர் ரிபெய்ரோவை மணந்தார்.

ஆறு மாதங்களாக அவர்கள் பிரிந்திருந்த வேளையில் சான்ட்ரா தனது கணவனால் கொல்லப்பட்டார்.

சான்ட்ரா கழுத்தில் குத்தியால் குத்தப்பட்டு இறந்ததை பிபிசி பிரேசிலிடம் காவல்துறை உறுதிசெய்துள்ளது.

தனது மொபைல் போனில் தாம் குற்றம் செய்ததை அவளது கணவர் ஒப்புக்கொள்ளும் காணொளியை போலீசார் கண்டுபிடித்தனர். சான்ட்ரா ஏற்கனவே இன்னொருவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டதாகவும், தமக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அக்காணொளியில் கூறியுள்ளார்.

தாம் கைது செய்யப்படப்போவதில்லை என்றும் ஏனெனில் ஜோடியாக இறைவனிடம் செல்லப்போவதாகவும் அக்காணொளியில் கூறியிருந்த ரிபெய்ரோ, தனது படுக்கையறையில் தூக்கு போட்டு இறந்தார்.

இந்த கொலை வடிமானது ”கொலை-தற்கொலை” என அறியப்படுகிறது. அதாவது தாம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னர் ஒன்று அல்லது பலரை கொலை செய்வதை கொலை-தற்கொலை வடிவ குற்றமாக குறிப்பிடப்படுகிறது.

Marie-Amélie Vaillat
மேரி-அமேலி வைலட்

மேரி-அமேலி வைலட் (36), பிரான்ஸ்

மேரி-அமேலி தனது கணவன் செபாஸ்டியன் வைலட்டால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த இணையானது திருமணம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்திருந்தது.

தாம் கத்தியால் கொலை செய்ததை போலீசிடம் ஒப்புக்கொண்ட செபாஸ்டியன், பின்னர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.

குடும்ப வன்முறையை எதிர்கொள்வது குறித்து புதிய திட்டங்களை பிரெஞ்சு அரசு அறிவித்த அதே நாளில்தான் மேரி-அமேலி கொலை நடந்துள்ளது.

பெண்கள் கொலை செய்யப்படுவது குறித்து தகவல் தெரிவிப்பது ஏன் அவசியம்?

இந்த செய்திகளை நாங்கள் சேகரிப்பதற்காக பிபிசி மானிட்டரிங்கின் சர்வதேச செய்தியாளர்கள் நெட்வொர்க் மற்றும் உலகம் முழுவதுமுள்ள தொலைக்காட்சி, ரேடியோ, செய்தித்தாள்கள், நாளிதழ்கள் மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் அக்டோபர் 1 அன்று பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்திகள் குறித்து அலசி ஆராய்ந்து.

இதில் உலகம் முழுவதும் அந்த ஒருநாளில் மட்டும் 47 பெண்கள் கொலை செய்யப்பட்ட செய்திகளை கண்டறிந்தது. அதில் சிலவற்றை மட்டுமே நாங்கள் இங்கே பகிர்ந்துள்ளோம். சில செய்திகளில் கொலைக்கான நோக்கம் தெளிவாக இல்லை அல்லது குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை.

பிறப்புறுப்பு சிதைப்பை முற்றிலும் ஒழித்த சூடான் கிராமம்

புதிய ஐநாவின் அறிக்கையில், பெண்களுக்கெதிரான வன்முறையில் மிகப்பெரிய அளவில் இன்னமும் அதிகாரிகளிடம் சரியாக தகவல் தெரிவிக்கப்படாமல் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கிறது என விவரிக்கப்பட்டுள்ளது.

பிபிசி மானிட்டரிங்கிற்காக இத்திட்டத்தை முன்னெடுத்த ரெபேக்கா ஸ்கிப்பேஜ், ”ஊடகங்கள் இவ்விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டதில் இருந்து உலகம் முழுவதும் வெவ்வேறு சமூகங்கள் பெண்கள் மீது எத்தகைய பார்வையை கொண்டிருக்கிறது என தெரியவருகிறது” என்றார்.

”நாங்கள் அந்த ஒருநாளில் கொல்லப்பட்டவர்கள் விவரம் குறித்ததுதான் அறிய விரும்பினோம் ஆனால் நாங்கள் அம்மாதம் முழுவதும் அதற்காக தேடவேண்டியிருந்தது. இத்தகைய கொலைகள் குறித்து செய்தி வெளியிடுவதில் தாமதம் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம்” என்றார் ரெபேக்கா.

பிபிசி மானிட்டரிங்கிற்காக பணிபுரிந்த மர்யம் அஜ்வெர், ” ஊடகங்களை சென்றடைய இக்கதைகள், சரியான அறிக்கை வெளியிடப்பாடாமல் முடிகிறது, மேலும் சரிபார்க்கமுடியாமல் போகிறது அல்லது இக்கொலைகள் விசாரிக்கப்படாமலே அமுங்கிவிடுகிறது” என்கிறார். -BBC_Tamil