யுக்ரேன் – ரஷ்யா மோதல் எதிரொலி: ‘புதினுடனான சந்திப்பு ரத்தாகலாம் ‘ – டிரம்ப்

ரஷ்யா மற்றும் யுக்ரேன் இடையே கடல்பகுதியில் நடந்த மோதலை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதாக இருந்த தனது திட்டத்தை ரத்து செய்யக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேனின் மூன்று கடற்படை கப்பல்களை தாக்கி அவற்றை ரஷ்யா கைப்பற்றியது குறித்த முழு தகவல் அறிக்கையை படிப்பதற்கு தான் காத்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் வெய்னோ ஐரிஸில் நடக்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இடையே இவ்விரு தலைவர்களும் சந்திப்பதாக இருந்தது.

இதனிடையே யுக்ரேன் மற்றும் ரஷ்யா இடையான பிரச்சனையில், யுக்ரேனை ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க வேண்டுமென அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ரஷ்யா மீது கடுமையான தடைகள் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் அரசுத்துறை பேச்சாளரான ஹீதர் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

யுக்ரேன் – ரஷ்யா பிரச்சனை குறித்து தனது தேசிய பாதுகாப்பு குழு அளிக்கவுள்ள அறிக்கை விரிவாகவும், முடிவை தீர்மானிக்கும் விதமாகவும் அமையும் என்று வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.

”ஒருவேளை நான் புதினை சந்திக்காமல் போகலாம். ரஷ்யாவின் இந்த ஆக்ரமிப்பு தாக்குதல் எனக்கு பிடிக்கவில்லை. இந்த ஆக்ரமிப்பு நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை” என்று டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று க்ரைமியா பிராந்தியத்தில் நின்று கொண்டிருந்த யுக்ரேன் நாட்டின் மூன்று கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியது.

யுக்ரேன் - ரஷ்யா மோதல் எதிரொலி: புதினுடனான சந்திப்புக்கு ரத்தாகலாம் - டிரம்ப்

தங்களின் கப்பல்களில் ஒன்றை ரஷ்யா ஆக்ரோஷத்துடன் மோதியதாக யுக்ரேன் கூறியது. ஆனால் தங்கள் கடல் எல்லைக்குள் அவை நுழைந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

இதனைதொடர்ந்து யுக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு வெளியே பலர் திரண்டனர். அவர்கள் தீப்பந்தங்களை தூக்கி எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய தூதரகத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து யுக்ரேன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் குறிப்பிட்ட எல்லை பகுதியில் ஒரு புதிய ராணுவ சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ரஷியா

ரஷ்யா தாக்குதல் நடத்த சாத்தியமான எல்லை பகுதிகளுக்கு இந்த புதிய 30-நாள் சட்டம் பொருந்தும் என்று யுக்ரேன் அதிபரான பெட்ரோ போரோஷென்கோ தெரிவித்தார்.

இந்த புதிய சட்டத்தின்படி போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களை அதிகாரிகள் தடுக்கலாம். ராணுவ பணியாற்ற மக்களுக்கு அரசு உத்தரவிடலாம்.

இதற்கிடையே, ரஷ்யாவால் இணைப்பட்டுள்ள க்ரைமியாவின் கடற்கரை பகுதியில், ரஷ்யாவால் சுடப்பட்டு பின் கைப்பற்றப்பட்ட யுக்ரேன் கப்பல்களில் இருந்தவர்களின் வாக்குமூலத்தை ரஷிய பாதுகாப்பு படை வெளியிட்டது.

பிடிப்பட்டவர்கள் ரஷ்ய தொலைக்காட்சியில் வாக்குமூலம்

பிடிப்பட்டவர்களில் ஒருவரான வொலோயிமிர் லிசோவ்யி, யுக்ரேனின் “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள்” குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

யுக்ரேனின் கடற்படை கமாண்டர் அவர்கள் பொய் கூற வற்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

ஞாயிறன்று பிடிப்பட்ட 24 யுக்ரேனியர்களை 60 நாட்கள் காவலில் வைக்குமாறு க்ரைமியாவில் உள்ள நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. -BBC_Tamil