நிதியமைச்சர் லிம் குவான் எங் வெளியிட்ட பொருளாதாரக் கொள்கைகளை விட, சிறந்த ஒன்றைத் தங்களால் உறுதியாக உருவாக்க முடியும் என மசீச இளைஞர் பிரிவு கூறியுள்ளது.
அதற்காக புதியக் குழுவொன்றை உருவாக்கி ஆலோசனைகள் வழங்க – குறிப்பாக பொதுமக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டறிய, தயாராக இருப்பதாக கட்சியின் புதிய இளைஞர் தலைவர் நிக்கோல் வோங் கூறினார்.
“நாட்டை நிர்வகிக்க, மக்களின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது முக்கியம் … எனவே, வர்த்தகத்தை வலுபடுத்துவது அந்த வழிகளில் ஒன்றாகும்,” என்று இன்று, மசீச இளைஞர் பிரிவின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் குறிப்பிட்டார்.
மசீசவில், பெரும்பாலும் நடுத்தர மற்றும் வணிக சமூகத்தினரே அதிகம் அங்கத்துவம் பெற்றுள்ளனர், எனவே இவர்களால் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்க முடியும் என்றார் அவர்.
“மலாய்க்காரர்களும் இந்தியர்களும் சீனர்களின் வணிகத் திறனை அங்கீகரிக்கிறார்கள். சீன அடிப்படையிலான அமைப்பாக, நமக்குள் நிறைய திறமைகள் இருக்கின்றன.
“லிம்-ஐவிட சிறந்த திட்டங்கள் உருவாக்குவதற்கான திறனை மசீச கொண்டுள்ளது. எனவே, மக்கள் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும், இதன்வழி மசீச மீண்டும் ஆதரவை (மக்கள்) பெற முடியும்,” என்று அவர் கூறினார்.
இது கட்சியின் உருமாற்றத்திற்கான வழிகளில் ஒன்று என்றும் அவர் சொன்னார்.