அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் காலமானார் என்று அவரின் மகன் ஜார்ஜ் டபிள்யூ புஷ் அறிவித்துள்ளார். அவருக்கு வயது 94
ஜார்ஜ் புஷ் சீனியர் என்று அறியப்படும் அவர், வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் நேரப்படி 22:10 மணிக்கு காலமானார், என அக்குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எட்டு மாதங்களுக்கு முன்புதான் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவி பார்பாரா காலமானார்.
“அன்பிற்குரிய எங்கள் தந்தை 94 ஆண்டுகள் வாழ்ந்து, தற்போது இறந்துவிட்டார் என்ற செய்தியை ஜெப், நீல், மார்வின், டொரோ மற்றும் நான் வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.” என் 43வது அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ் ஜூனியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- செளதி அரேபியா – அமெரிக்கா முரண்: எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?
- தன்பாலின தம்பதிகளுக்கு விசா வழங்கப்படமாட்டாது: அமெரிக்கா
“அவர் மிக உயர்ந்த குணமுடைய மனிதர் மட்டுமல்லாது, எங்களுக்கு சிறந்த தந்தையாகவும் இருந்தார்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் இவர் அமெரிக்க கடற்படை விமானியாகவும் பணியாற்றியுள்ளார். செப்டம்பர் 1944இல் இவர் விமானத்தில் குண்டு வீச சென்றபோது ஜப்பானியர்களால் சுட்டப்பட்டபோது தப்பியவர் புஷ்.
41வது அமெரிக்க அதிபராக 1989 முதல் 1993 வரை அவர் இருந்தார். அதற்கு முன் ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்த போது, ஜார்ஜ் புஷ் இரண்டு முறை துணை அதிபராக இருந்தார்.
யார் இந்த ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்?
ஜார்ஜ் புஷ் சீனியர் அதிபராக இருந்த காலத்தில், கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசம் வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது இவரது அரசு வெளியுறவுக் கொள்கைகளை வகுத்ததற்கு பெயர் பெற்றது.
எனினும், உள்நாட்டு விவகாரங்களில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட இவர், 1992 தேர்தலில் பில் கிளின்டனால் தோற்கடிக்கப்பட்டார்.
வரிகளை உயர்த்தப் போவதில்லை என்று வாக்குறுதி அளித்து அதனை நிறைவேற்றாமல் போனதில் இவர் விமர்சிக்கப்பட்டார்.
எண்ணெய் தொழில் தொடங்கி தனது 40 வயதில் பணக்காரரான புஷ், 1964ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்தார்.
1945ல் கடற்படையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 18 வயதுடைய பார்பாரா பியர்ஸை திருமணம் செய்து கொண்டார். 73 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் 6 குழந்தைகள் பெற்றனர்.
அவருக்கு 17 பேரக் குழந்தைகள் மற்றும் 8 கொள்ளுப்பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள்.
அரசியல் வாழ்க்கை
1966 – பிரதிநிதிகள் சபையில் இடம் பிடித்தார்.
1971 – அதிபர் நிக்சன் புஷ்ஷை ஐ.நா தூதராக நியமித்தார்.
1974 – பெய்ஜிங்கில் தொடங்கப்பட்ட புதிய வெளியுறவு அலுவலகத்துக்கு தலைமை வகித்தார்.
1976 – அதிபர் ஃபோர்ட் புஷ்ஷை அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் இயக்குநராக நியமித்தார்
1981-1989 – அதிபர் ரீகன் ஆட்சியில் துணை அதிபராக பணியாற்றினார்.
1989-1993 – அமெரிக்க அதிபர், முதல் வளைகுடா போரில் அமெரிக்காவை வழிநடத்தினார்; கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிச வீழ்ச்சியை சமாளிக்க கொள்கை வகுத்தார்.
ஜார்ஜ் புஷ் சீனியர் மரணத்திற்கு இரங்கல்
“மெலானியாவும் நானும் தேசத்தின் துக்கத்தில் பங்கு கொள்கிறோம்” என்று முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சீனியரின் மரணத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒரு சிறந்த தேசப்பற்றாளரையும், பணிவான மனிதரையும் அமெரிக்கா இழந்துவிட்டதாக முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் நன்றியுடன் இருப்பதாகவும், அவருடன் கிடைத்த நட்பு என் வாழ்நாளின் சிறந்த பரிசு என முன்னாள் அதிபர் ஹில் கிளிண்டன் குறிப்பிட்டுள்ளார்.