200 நாடுகளின் பிரதிநிதிகள் போலந்தில் கூடி பருவநிலை மாற்றம் தொடர்பான மிக முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருவநிலை மாற்றம் எப்படி புவிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது, அதைத் தடுக்க எடுக்கப்படும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஏழு உண்மைகளை எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து அளிக்கிறோம்.
போலந்தில் நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தை 2015-ம் ஆண்டின் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தை உயிர்ப்பிக்க எடுக்கப்படும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
தொழிற்புரட்சி காலத்துக்கு முந்தைய நிலையை விட 2 டிகிரி செல்ஷியசுக்கு மிகாமல் புவியின் வெப்பநிலையைப் பாதுகாக்கவேண்டும் என்ற இலக்கை பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் முன்வைத்தது. ஆனால் அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. ஐரோப்பிய ஒன்றியம் அளித்த வாக்குறுதிகளைக் காக்கவில்லை. எனவே, இந்த இலக்கை அடையமுடியாமல் போகும் ஆபத்து இருப்பதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.
ஆனால், புவி வெப்ப நிலையை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 2 டிகிரிக்கு மிகாமல் பாதுகாப்பது போதாது என்றும், புவியின் சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட 1.5 டிகிரிக்கு மேல் மிகாமல் பாதுகாக்கவேண்டும் என்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அரசாங்க குழு (ஐ.பி.சி.சி.) கடந்த மாதம் கூறியது.
இந்நிலையில், புவி எந்த அளவுக்கு வெப்பம் அடைந்துள்ளது, அது தொடர்ந்து அபாயகரமாக வெப்பமடைவதைத் தடுப்பதற்கு நம்மாமல் என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்.
1. தொடர்ந்து சூடாகும் புவி
தொழிற்புரட்சி காலத்துக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது சுமார் 1 டிகிரி கூடுதலாக இருக்கிறது உலக வானிலை ஆய்வு நிறுவனம். 2018ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் உலகின் சராசரி வெப்பநிலை 0.98C ஆகும். அதாவது இந்த சராசரி அளவு 1850-1900 ஆண்டுகளில் நிலவிய வெப்பநிலையை விட அதிகம் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
உலகில் அதிக வெப்பநிலை நிலவிய 20 ஆண்டுகள், கடந்த 22 ஆண்டுகளில்தான் பதிவானதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால், வரும் 2100ஆம் ஆண்டுவாக்கில் உலகின் வெப்பநிலையில் சுமார் 3-5C அதிகரிக்கும்.
- “பருவநிலை மாற்றமே மனிதகுலத்தின் மிகப் பெரிய அச்சுறுத்தல்” – டேவிட் அட்டன்பரோ
- பருவநிலை மாற்றம்: கடைசி 4 ஆண்டுகள்தான் உலகின் மிக வெப்பமான ஆண்டுகள்
ஒரு டிகிரி என்பது குறைவு அல்ல. மனிதர்களுக்கும், புவியில் வாழும் உயிர்களுக்கும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது, உயர்ந்து வரும் வெப்பநிலையின் காரணமாக கடல் நீர்மட்டம் அதிகரிக்கும், அதன் காரணமாக பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும்.
அது கடல் நீர்மட்டம் அதிகரித்தல், பெருங்கடலில் வெப்பநிலை மாற்றம் மேலும் அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை பயிரிடுவதில் சிக்கல் ஆகியவையாக இருக்கக்கூடும்.
2. சரித்திரத்தில் இடம்பிடித்த 2018
இந்த வருடம் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்கத்திற்கு மாறான காலத்திலும் அதிகளவு வெப்பநிலை பதிவாகியது.
வலுவான உயர் அழுத்த அமைப்புகளால் வட அரைக்கோளத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட வெப்ப அலைகளின் காரணமாக ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா மற்றும் வட ஆபிரிக்காவில் “வெப்ப குவிமாடம்” உருவாகியது.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரைபடத்தில், மஞ்சள் புள்ளிகள் அந்த குறிப்பிட்ட தினத்தில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ளதையும், இளஞ்சிவப்பு நிறம் அந்த குறிப்பிட்ட மாதத்தில் அதிகளவு வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களையும், அடர் சிவப்பு நிறம் இந்த தரவுகள் பதிவு செய்யப்பட்ட தினத்திலிருந்து அதிகளவு வெப்பநிலை பதிவான இடங்களையும் குறிக்கிறது.
The hottest that this location has ever been…
Tap or click to explore the data
Source: Robert A. Rohde/Berkeley Earth. Map built using Carto
3. காலநிலை மாற்றத்தை தடுக்கும் பாதையில் செல்லவில்லை
பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளால் கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொண்டால், இந்த நூற்றாண்டின் முடிவில் உலகம் இன்னும் 3C க்கும் மேலாக சூடாக இருக்கும்.
பருவநிலை மாற்றத்தின் ‘பாதுகாப்பான’ அளவாக தாங்கள் கருதிய அளவை கடந்த மூன்றாண்டுகளில் விஞ்ஞானிகள் மாற்றிக்கொண்டுள்ளனர்.
- பருவநிலை மாற்றம்: அமெரிக்காவுக்கு தீவிர எச்சரிக்கை
- “இதுவே இறுதி” – பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
உலகம் முழுவதும் மோசமான தாக்கங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமென்றால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் சராசரி வெப்பநிலை உயர்வை 2Cக்கும் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டுமென்று பல தசாப்தங்களாக விஞ்ஞானிகள் தெரிவித்து வந்தனர்.
ஆனால், தற்போது வெப்பநிலை உயர்வை 1.5Cக்குள் தடுத்து நிறுத்த வேண்டுமென்று விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்கள்.
4. அதிக நச்சுக்களை வெளிப்படுத்தும் நாடுகள்
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளே உலகளவில் பல்வேறு ஆண்டுகளாக தொடர்ந்து அதிகளவு பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றி வருகின்றன.
இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்து உலகின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியேற்றலில் 40 சதவீதத்திற்கு காரணமாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபராக பதவியேற்றவுடன், பாரிஸ் பருவநிலை உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.
அந்த சமயத்தில் அமெரிக்க தொழில்களையும், வேலையாட்களையும் பாதிக்காத புதியதொரு ஒப்பந்தத்தை உருவாக்க தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
5. அச்சுறுத்தலில் நகர்ப்புற பகுதிகள்
கிட்டத்தட்ட ஆசியா, ஆப்பிரிக்காவிலுள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கியுள்ளதாக வெரிஸ்கி மேப்லெக்ரோஃப்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.
குறிப்பாக அதிவேகத்தில் வளர்ந்து வரும் நைஜீரியாவின் லாகோஸ், காங்கோவின் கின்ஷாசா ஆகிய நகரங்கள் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை ஆகியவற்றால் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் 84 நகரங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.
6. அபாயத்தில் ஆர்டிக் கடல்
ஆர்டிக் பெருங்கடலிலுள்ள பனிக்கட்டிகளின் அளவு கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. ஆர்டிக் பெருங்கடலின் வரலாற்றிலேயே கடந்த 2012ஆம் ஆண்டு தான் பனிக்கட்டிகளின் அளவு மிகவும் குறைந்தது.
கடலில் காணப்படும் பனிக்கட்டிகள் பல தசாப்தங்களாக உருகிய வண்ணம் இருந்தாலும், 2000வது ஆண்டிற்கு பிறகுதான் அதன் வீரியம் அதிகரித்ததாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை குழு தெரிவிக்கிறது.
- ‘பருவநிலை மாற்றம்’ – எதிர்காலம் குறித்து அச்சம் தரும் புகைப்படங்கள்
- அதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புது சிக்கல்
தற்போதுள்ள மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050ஆம் வருடத்தின் கோடைக்காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் அந்த குழுவின் அறிக்கை கூறுகிறது.
7. நீங்கள் எப்படி உதவ முடியும்?
வாய்ப்பிருந்தால் நடந்து செல்லுங்கள், மிதிவண்டியில் செல்லுங்கள். கூடுமானவரை பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துங்கள். இது உடல்நலத்திற்கும் நல்லது, சுற்றுச்சூழலுக்கும் நல்லது.
இயன்றவரை மின்சாரத்தை பயன்படுத்துவதை குறையுங்கள். தேவையற்றபோது மின்விசிறியை பயன்படுத்தாமல் இருப்பது முதல் வாஷிங் மிஷன் பயன்படுத்துவது வரை மிக கவனமாக திட்டமிடுங்கள். இது உங்களுக்கு சாதாரணமான விஷயமாக தோன்றலாம். ஆனால், இந்த சிறு விஷயங்கள்தான் வியத்தகு விளைவுகளை தரும்.
மாமிசம் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள். நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும், அதீத விவசாய உற்பத்தியும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம்.
கறிகோழிகள் வளர்ப்பது, தண்ணீர் அதிகம் உறிஞ்சும் பணப்பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்வது பசுமை இல்ல வாயுவை வெளியேற்றும். புவியை வெப்பமாக்கும்.
பாரிஸ் பருவநிலை மாற்ற சந்திப்பில், 119 நாடுகள் விவசாயத்தினால் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுவை குறைப்பதாக உறுதி அளித்தன. அந்த நாடுகள் எவ்வாறு அதனை செய்யும் என்று நமக்கு தெரியாது. ஆனால், நாம் மனது வைத்தால் நிச்சயம் முடியும்.
-BBC_Tamil